Published : 25 Jan 2019 10:16 AM
Last Updated : 25 Jan 2019 10:16 AM

திரைப் பள்ளி 29: மாறாத ராம்… மருகும் ஜானு

கவிதையில் ஒரு காட்சி இடம்பெறலாம். அதை வாசிக்கும் வாசகர்களின் புரிதலுக்கு ஏற்ப, மனத்திரையில் விரியும் காட்சிகள் வெவ்வேறாக இருக்கும். சிறுகதை, நாவலை வாசிக்கும்போதும் இந்தக் காட்சிக் கற்பனையானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். வாசிப்பு உருவாக்கும் இந்தக் காட்சிக் கற்பனைக்கு முற்றிலும் மாறுபட்டது, இயக்குநர் உருவாக்கும் காட்சிமொழி.

அது எல்லாப் பார்வையாளர் களுக்கும் திரையில் ஒரே காட்சி அனுபவத்தைத் தருகிறது. எனவேதான் திரைக்கதை எழுதுவதை ‘விஷுவல் ரைட்டிங்’ ((Visual Writing) என்கிறார்கள். “விஷுவல் ரைட்டிங் என்பதன் வெற்றி, ஒவ்வொரு காட்சியிலும் சூழலுக்குப் பொருத்தமாக (context) திரைக்கதை ஆசிரியர் சரியாக உருவாக்கியிருக்கிறாரா என்பதைப் பொறுத்தே இருக்கிறது” என்கிறார் திரைக்கதை ஜாம்பவான் ஷித் ஃபீல்ட்.

அது என்ன காட்சியில் இருக்க வேண்டிய சூழல் பொருத்தம்? மண்டையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை. பெரிய ஹீரோக்கள் நடிக்கும் மசாலாப் படங்களில் வரும் சண்டைக் காட்சிகளையே எடுத்துக்கொள்ளுங்கள். ஹீரோ ஒருவரை அடிக்கிறார் என்றால், அவர் ஏன் அடிக்கிறார், எதற்காக அடிக்கிறார், எந்த இடத்தில் அடிக்கிறார் என்பதற்கு வலுவான காரணம் வேண்டும்.

அந்தக் காரணம் அவர் சண்டை போடுகிற காட்சியை நியாயப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், எதற்குத் தேவையில்லாத இந்தச் சண்டைக் காட்சி என்ற எண்ணம் தோன்றிவிடும். ஒரு சண்டைக் காட்சிக்கே நியாயமான சுழல் பொருத்தம் தேவைப்படும்போது கதையை நகர்த்திச் செல்லும் காட்சிகளுக்குச் சூழ்நிலை என்பது சரியாகப் பொருந்தியிருந்தால்தான் அந்தக் காட்சி திரைக்கதைக்குப் பலம் சேர்க்கும்.

நான்கு அம்சங்கள்

காட்சிகளை ஒருவரிக் கதை அமைப்புக்குள் வரிசைப்படுத்தி எழுதி விட்டீர்கள். இப்போது காட்சிகளைத் தனித்தனியாக விரித்து எழுதி, முழுமையான திரைக்கதையை எழுதப் போகிறீர்கள் என்றால் எழுதும் ஒவ்வொரு காட்சியிலும் பொருத்தத்தை கவனியுங்கள். காட்சியில் நீங்கள் சூழ்நிலையை உருவாக்க நான்கு அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.

முதலாவது நீங்கள் எழுதும் காட்சியில் நடைபெறப்போகும் அல்லது பின்னணியில் நடந்துகொண்டிருக்கும் செயல் (Scene action) என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அடுத்து அந்தக் காட்சியில் கதாபாத்திரம் அல்லது கதாபாத்திரங்கள் செய்யும் அல்லது ஈடுபடும் செயல் (Character action) என்ன என்பதும் தெளிவாக உங்களுக்குத் தெரிய வேண்டும். செயல் என்பதில் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் எல்லா வகையான உணர்ச்சிகளும் அடக்கம். அவை காதல் உணர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கலாம் அல்லது அழுதுகொண்டிருக்கலாம்.

மூன்றாவதாக கதை நடக்கும் இடத்துக்கு உங்கள் கதாபாத்திரம் அல்லது கதாபாத்திரங்கள் ஏன் வந்தன (Location appearance and character entry) என்பதும் அவை வரும்போது. அந்த இடம் எப்படித் தோற்றமளிக்கிறது என்பதும் காட்சியின் சூழ்நிலையைத் தீர்மானிக்கிறது. நான்காவதாக கதாபாத்திரம் அந்தக் காட்சியில் எப்படித் தோற்றமளிக்கிறது, அது வெளிப்படுத்தும் உணர்ச்சி அந்தத் தோற்றத்துக்குப் பொருத்தமாக இருக்கிறதா, தன்னைப் பற்றி தானோ மற்ற கதாபாத்திரங்களோ தரும் தகவல் என்ன (Character appearance, emotions and its important info’s) ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

இவற்றோடு முந்தைய காட்சியின் தொடர்ச்சியை இந்தக் காட்சி தாங்கிச் செல்கிறதா, தொடர்ந்து வரும் அடுத்த காட்சியிலும் இதன் தொடர்ச்சி இருக்கிறதா என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

காட்சியின் சூழ்நிலையை இன்னும் சற்று எளிமையாகப் புரிந்துகொள்ள ‘96’ படத்திலிருந்து ஒரு காட்சியை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். 1996-ல் தஞ்சாவூர் பள்ளி ஒன்றில் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் அனைவரும் 22 ஆண்டுகளுக்குப் பின் 2018-ல் சென்னையில் ஒன்று கூடுகிறார்கள்.

தற்போது ஒளிப்படக் கலைஞனாக இருக்கும் ராம் கதையின் நாயகன். சிங்கப்பூரில் குடியேறி வாழும் ஜானு கதையின் நாயகி. பள்ளியில் பயின்றபோது உயிருக்கு உயிராகக் காதலித்த இருவரும் சூழ்நிலையால் பிரிந்தவர்கள். ராம், ஜானுவின் நினைவுகளோடு வாழ்கிறான். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் வகுப்புத் தோழர்கள் அனைவரும் இந்த ஒன்றுகூடுதலுக்கு வருகிறார்கள். இதுதான் காட்சி. இப்போது காட்சியின் சூழ்நிலையை மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்களோடு பொருத்திப் பாருங்கள்.

மரியாதையும் குற்ற உணர்ச்சியும்

இந்தக் காட்சி நடைபெறும் இடம் எப்படித் தோற்றமளிக்கிறது? நட்சத்திர விடுதி ஒன்றில் உள்ள விசாலமான தோட்டம்தான் நண்பர்கள் ஒன்று கூடும் இடம். அது மாலை நேரம். தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் 96 என்ற எண்கள் ஒளிரும் விளக்காகத் தொங்குகின்றன. மரங்கள், செடிகள் எங்கும் அலங்கார விளக்குகள். குடும்பத்துடன் வரும் முன்னாள் மாணவர்கள் உட்காருவதற்காக மேஜைகள். ஒரு விசாசலமான திரை.

அதில் ‘96 பேச் ரீயூனைடெட் அண்ட் இட்ஸ் ஃபீல்ஸ்’ என்று எழுதப்பட்ட வாசகம் ஒளிர, ஒன்றுகூடலுக்கு வர முடியாத வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்கள்  பேசி அனுப்பிய வீடியோக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்கிறார்கள். கட்டித் தழுவிக்கொள்கிறார்கள், நலம் விசாரித்துக்கொள்கிறார்கள். பள்ளியில் செய்த குறும்புகளை நினைவுகூர்கிறார்கள்.

அந்த இடம் அங்கே பொங்கி வழிந்துகொண்டிருக்கும் மகிழ்ச்சிக்கு அடையாளமாகத் தோற்றமளிக்கிறது. அந்தக் காட்சியின் பின்னணியில் நடந்துகொண்டிருக்கும் இந்தக் கொண்டாட்டமே ‘சீன் ஆக்‌ஷன்’.

ஒப்புக்கொண்ட எல்லோரும், கிட்டத்தட்ட வந்துவிட்ட சூழ்நிலையில், இன்னும் நான்கு பேர் மட்டும் வர வேண்டியிருக்கிறது. அப்போது ராம் உள்ளே நுழைகிறான். நண்பர்கள் ஓடிப்போய் அவன்மீது விழுந்து நட்பை வெளிப்படுத்துகிறார்கள். தோழியர் நலம் விசாரிக்கின்றனர். தலை நிறைய முடி, முகம் நிறைய தாடி என்று உறைந்து கெட்டித் தட்டியவனாக ராம் தோன்றுகிறான். ஆனால், மனத்தளவில் பனிக்கட்டியாக இருக்கிறான்.

நண்பர்களிடமும் தோழிகளிடமும் பேசும் ராமைப் பார்த்து, வகுப்பு நண்பர்கள் வியக்கிறார்கள். பள்ளியில் படித்தபோது எப்படி இருந்தானோ இன்னும் அப்படியே மாறாத ஒருவனாகவே அவன் இருப்பதைப் பார்த்து வியக்கவும் வருந்தவும் செய்கிறார்கள். ஜானு அங்கே வரும்வரை துணைக் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் இவை.

மாலை முடிந்து இரவு தொடங்குகிறது. அந்தத் தோட்டம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ராம் உட்பட அனைவரும் ஜானுவுக்காகக் காத்திருக்கும்போது கடைசியாக ஜானு வருகிறாள். ஆடம்பரமற்ற ஆடை, நிர்மமான முகத்துடன் கூடிய எளிய தோற்றத்துடன் வரும் அவள், எல்லோரிடமும் நலம் விசாரிக்கிறாள்.

நண்பர்களிடமும் தோழிகளிடமும் பேசிக்கொண்டே ஓரப் பார்வையால் ராம் எங்கேயாவது தென்படுகிறானா எனத் தேடுகிறாள். இந்த நேரத்தில் ராம் வந்திருப்பதையும் அவன் தயக்கத்துடன் ஒளிந்துகொண்டிருப் பதையும் தோழி கூற, ஜானு பெருமூச்சுடன் இதயம் படபடக்க அவன் நிற்கும் இடத்துக்கே சென்று அவனைச் சந்திக்கிறாள்.

ஜானு தொட்டாலோ அல்லது அவள் வெகு அருகில் சஞ்சரித்தாலோ சட்டென்று இதயத்துடிப்பு அதிகரித்து மயக்கமடையும் ராம், 22 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்தச் சந்திப்பின்போதும் ஜானுவைக் கண்டு மயங்கிச் சரிகிறான்.

தன்னைப்போலவே ராம் குடும்ப வாழ்க்கையில் இருப்பான் என எதிர்பார்த்து வந்த ஜானு, ராம் இன்னும் பள்ளிக்கூட ராமாகவே இருப்பதைக் கண்டு மருகுகிறாள்; அது மெல்லிய குற்ற உணர்வை உருவாக்குகிறது. அவன் தனக்குத் தரும் மரியாதை அவளை இம்சிக்கிறது. இவைதான் இந்தக் காட்சியில் முதன்மைக் கதாபாத்திரங்கள் வெளிப் படுத்தும் உணர்ச்சிகள். ஜானு திருமணமானவள்,  அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்ற முக்கியத் தகவலை தோழி பார்வையாளர்களுக்காக வெளிப்படுத்துகிறாள்.

சம்பிரதாயமான ஒன்றுகூடல் நிகழ்வுடன் பிரிந்துபோய்விட விரும்பாத ஜானு, காதலின் நினைவுகளுடன் வாழ்ந்தால் போதும் என எண்ணும் ராமிடம் தன்னைப் போலவே திருமணம் செய்துகொண்டு வாழ வற்புறுத்தும் காட்சி, அடுத்த காட்சியாகத் தொடர்கிறது. இப்போது ஒரு காட்சியில் ஊடாட வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு எளிதாகப் புரிந்திருக்கும்.

இனி,‘கழுகு’ குறும்படத் திரைக்கதைக்கு வருவோம்.. அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் அருணின் அப்பா, சாலையில் வேகமாக பைக் ஓட்டிச் செல்லும் மகனைக் கண்டு அதிரும் காட்சியை எடுத்துக்கொள்வோம். அதற்கு காட்சிக்கான சூழ்நிலை பொருத்தத்துடன் கூடிய விரிவான குறிப்புகளுடன் அதை எழுதிப் பார்ப்பதுடன், அடுத்த அத்தியாயத்தில் திரைப்பள்ளியின் முதல் பாகம் நிறைவடைகிறது. திரைக்கதை எழுதும் திறனை ஒரு கலையாக எப்படி எடுத்தாள்வது என்பதன் அடிப்படையான புரிதலை திரைப்பள்ளியின் முதல் பாகம் உங்களிடம் ஏற்படுத்தியிருந்தால் அதுவே அடுத்த பாகத்துக்கான அச்சாரம்.

தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x