Last Updated : 25 Jan, 2019 10:17 AM

 

Published : 25 Jan 2019 10:17 AM
Last Updated : 25 Jan 2019 10:17 AM

டிஜிட்டல் மேடை 13: தேசத்தைப் பேசும் ஆவணப் படங்கள்

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்றவற்றில் பொழுது போக்குக்கு அப்பாலும் படைப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நாட்டின் 70-வது குடியரசு நாளை முன்னிட்டு அதையொட்டிய சில ஆவணப் பதிவுகளைப் பார்க்கலாம்.

21 சீக்கிய தீரர்கள்

தேச விடுதலைக்கு முந்தைய பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய 21 சீக்கிய வீரர்களின் தீரத்தைச் சொல்லும் தொடர் ‘21 சீக்கிய தீரர்கள்’ (21 Sarfarosh: Saragarhi 1897). 1987 செப்டம்பர் 12 அன்று அப்போதைய இந்திய-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஆப்கன் வீரர்களின் தாக்குதல், அதன் முன்பின்னான நிகழ்வுகள் ஆகியவை பற்றிய சித்தரிப்பு 65 அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

டிஸ்கவரி ஜீட் சானலில் வெளியான தொடரைச் சர்வதேச அளவில் நெட்ஃபிளிக்ஸ் வழங்குகிறது. இதே கதை பாலிவுட்டில் கரண்ஜோகர் தயாரிப்பில் அக்‌ஷய் குமார் நடிக்க ‘கேசரி’ திரைப்படமாக ஹோலி அன்று வெளியாக உள்ளது.

செவ்வாயில் இந்தியா

கோள்களுக்கு இடையிலான இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணச் சாதனையான, செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பப்பட்டதை விவரிக்கும் ஆவணப்படம் ‘மங்கள்யான்: இண்டியாஸ் மிஷன் டு மார்ஸ்’ (Mangalyaan: India's Mission to Mars). செவ்வாய் பயண முயற்சியில் சீனா தோல்வியுற்ற  நிலையில், உலக நாடுகளின் கணிப்பைப் பொய்யாக்கி இந்தியா தனது செவ்வாய்க் கனவை நிறைவேற்றியது. மங்கள்யான் திட்டத்தின் தொடக்க கால முயற்சிகளை இஸ்ரோவின் சாதனைகளுடன் இணைத்துச் சொல்கிறார்கள். இரண்டாவது மங்கள்யான் திட்டத்துக்கு இந்தியா ஆயத்தமாகும் தருணத்தில் முந்தைய பெருமிதத்தை நெட்ஃபிளிக்ஸில் ரசிக்கலாம்.

80, 90-களில் இந்தியா

தற்காலத் தலைமுறையினர் அதிகம் அறிந்திராத 80-கள், 90-களின் இந்தியா குறித்த 2 ஆவணப் பதிவுகளை நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, வாஜ்பாய், வி.பி.சிங் உள்ளிட்ட அரசியல் ஆளுமைகளின் வாயிலாக 80-களின் இந்தியா பதிவாகிறது. அப்போதைய ஆடம்பரமான தொலைபேசி இணைப்புகள், தொலைக் காட்சிப் பெட்டிகள் இன்றைய தலை முறையினருக்குச் சுவாரசியம் தரும்.

கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வென் றது முதல் நாட்டைக் கலக்கிய போபர்ஸ் ஊழல்வரை தேசத்தின் அன்றைய ஏற்ற இறக்கங்களை ‘த எய்ட்டீஸ் இண்டியா, த நைண்டீஸ் இண்டியா ரீடிஸ்கவர்டு’ (The 80’s India, The 90’s: India Rediscovered) ஆவணப்படத்தில் தரிசிக்கலாம்.

90-களின் இந்தியா ஆவணப்படத்தில் மண்டல் கமிஷன், அயோத்தி ராமர் கோவில், பங்குச் சந்தை ஊழல், கந்தகார் விமானக் கடத்தல் ஆகிய பரபரப்புகளுடன் தனியார் சேனல்கள், செல்ஃபோன்களின் அறிமுகம், ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்னுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம், சச்சின் சாதனை, ராஜிவ் மறைவு, பாஜக எழுச்சி எனப் பலவற்றையும் அரசியல், ஊடக, கலைத்துறை ஆளுமைகளின் பேட்டியுடன் பார்க்கலாம்.

அசத்தலான ஆதிக் கலை 

இங்கிலாந்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இறக்குமதியான அலங்காரத் துணி விரிப்புகளைப் பார்த்து வியக்கும் ஆய்வாளர், அதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள இந்தியா வருகிறார். இங்கே பழங்குடி மக்கள் பரம்பரையாக மேற்கொள்ளும் உலகப் புகழ்பெற்ற நெசவு, சாயமேற்றலைப் பதிவுசெய்கிறார். பட்டு முதல் பருத்திவரை கைத்தறியில் நெய்வதும், துணி ரகங்களுக்குத் தாவரங்களின் இயற்கைச் சாயம் ஏற்றப் பயன்படுத்துவதையும் விரிவாக ஆராய்கிறார். இந்தத் தொன்மையான கலையைப் பாதிக்கும் சமூகப் பொருளாதார மாற்றங்களையும் அந்தக் கலை அழிவின் விளிம்பில் இருப்பதையும்  ‘இண்டியன் டிரைபல் ஆர்ட்’ (Indian Tribal Art)  ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதை அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்

கிழந்திய கம்பெனி பிறந்த கதை

சுதந்திர தினம், குடியரசு தினங் களில் இந்திய சுதந்திரப் போராட்டம், ஆங்கிலேயர் ஆட்சி குறித்த விவாதங்கள் வந்துபோகும். இங்கே ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்ட கிழக்கிந்திய கம்பெனி குறித்தும் தெரிந்துகொள்ளலாம். இந்திய கிராமங் களிலும் நகரங்களிலும் புகுந்த கிழந்திய கம்பெனியின் உருவாக்கம், அதன் வளர்ச்சி ஆகியவற்றை ஆங்கிலேயரின் பார்வையில் சொல்கிறார்கள். பாடங்களுக்கு அப்பால் வரலாற்றை அறிந்துகொள்ள ‘த பர்த் ஆஃப் எம்பயர்’ (The birth of Empire: The East India Company) ஆவணப்படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x