Published : 28 Jan 2019 01:02 PM
Last Updated : 28 Jan 2019 01:02 PM

கற்பிதமல்ல பெருமிதம் 41: ஆண் அழக் கூடாதா?

சிவாவின் புதுப் பேனாவைக் காணவில்லை. மாமா போன வாரம் வாங்கிக் கொடுத்தது. பேனா தொலைந்த வருத்தம் ஒரு பக்கம் என்றால், அம்மாவுக்குத் தெரிந்தால் திட்டுவாள் என்ற பயமும் சேர்ந்துகொண்டது. ஹோம்வொர்க் எழுத அம்மாவுடன் உட்கார்ந்தபோது பழைய பேனாவைப் பயன்படுத்தினான். அம்மா புது பேனா எங்கே என்று கேட்டார்.

அம்மா சாதாரணமாகத்தான் கேட்டார். ஆனால், சிவாவுக்கு அம்மா கோபமாகக் கேட்டது போலிருந்தது. அழ ஆரம்பித்தான்.

அந்தப் பக்கமாக வந்த அப்பாவுக்கு அவன் அழுவதைப் பார்த்து எரிச்சலாக வந்தது.

“12 வயசுப் பையன் இப்படித்தான் அழுவதா? பொறுப்பா இருக்கத் தெரியலை. வாயை மூடு” என்றார். சிவாவுக்கு அப்பா பேனாவைத் தொலைத்ததற்குத் திட்டுகிறாரா அழுவதற்குத் திட்டுகிறாரா என்று தெரியவில்லை.

கடந்த இரண்டு மாதங்களில் அவனை அப்பா, பாட்டி, சித்தி, டீச்சர், உடன் படிக்கும் நண்பர்கள் எனப் பலரும் அழுவதற்காகத் திட்டியிருக்கிறார்கள். கிண்டல் செய்திருக்கிறார்கள். அவனும் சில முறை அழுகையை அடக்கிப் பார்த்தான். ஆனால், அழாமல் இருப்பது ரொம்ப நேரத்துக்கு அவன் மனத்தைக் கனமாக அழுத்துவதுபோலிருந்தது. அழுதால் கொஞ்சம் ஆசுவாசமாவது போலிருந்தது. 

ஷீலாவுக்கு எதற்கும் அழுது பழக்க மில்லை. யாராவது திட்டினாலோ ஏதாவது பொருளைத் தொலைத்துவிட்டாலோ உடன் படிக்கும் பெண்கள் அழுவதைப் பார்த்தால் அவளுக்கு வேடிக்கையாக இருக்கும். வீட்டில் எல்லோரும் அவளை அழுத்தக்காரி என்பார்கள். “இவ்வளவு திட்டறோம், பாரு என்ன நெஞ்சழுத்தம். கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வருதா” என்று பாட்டி திட்டுவார்.

சுபாவுக்குச் சுலபமாகக் கண்ணில் மளுக்கென்று கண்ணீர் வந்துவிடும். யாராவது ஏதாவது திட்டினால் உடனடியாக அழ ஆரம்பித்துவிடுவாள். அழுகை என்றால் கொஞ்ச நேரம் அல்ல. விசும்பிக் கொண்டே இருப்பாள். அவளைச் சமாதானப் படுத்துவதற்கு வீட்டில் உள்ளவர்களுக்குப் போதும் போது மென்றாகிவிடும்.

உணர்விலும் பாகுபாடு?

அழுகை இயல்பான உணர்வின் வெளிப் பாடு. ஆனால், நம் வளர்ப்பின் பாலினப் பாகுபாடு காரணமாக அந்த இயல்பான உணர்வை ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறுவிதமாக எதிர்கொள்ளக் கற்பிக் கிறோம். சின்னஞ்சிறு வயதில் குழந்தைகள் அழும்போது சமாதானப்படுத்துவார்கள். ரொம்ப மிஞ்சினால் கப்சிப் என்று இருக்கச் சொல்லி அடக்குவார்கள். சில நேரம், அழுகையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் பெரியவர்கள் அடங்கிப் போவார்கள். அழுகை இங்கே ஆயுதமாகிறது.

ஆனால், குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்தபிறகு, ஆண் பிள்ளைகள் அழுதால் அதை யாரும் உணர்வின் இயல்பான வெளிப்பாடாகப் பார்ப்பதில்லை. பொம்பள மாதிரி அழாதே, ஆம்பிளைச் சிங்கம் என்று சொல்லி அடக்குகிறார்கள். பெண்ணிடம் அப்படிச் சொல்வதில்லை. பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுதே காரியத்தைச் சாதிக்கிறார்கள் என்ற அவப் பெயர்தான் கிடைக்கும்.

உணர்வின் வெளிப்பாடு

மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், குதூகலம், உற்சாகம் என்பதைப் போல அழுகை என்பதும் பயத்தின் - சோகத்தின் வெளிப்பாடு. நேர்மறையான உணர்வுகளாக இருந்தாலும் சரி, எதிர்மறையான உணர்வுகளாக இருந்தாலும் சரி அவற்றை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக எதிர்மறையான உணர்வுகளான சோகம், துக்கம், வருத்தம், இழப்பு போன்றவற்றை வெளிப்படுத்தாமல் விட்டால் அவை நாளடைவில் மன அழுத்தமாக மாறிவிடும்.

உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கூடாது; கையாள வேண்டும். சின்னஞ்சிறு வயதிலேயே உணர்வுகளைச் சரிவரக் கையாளவும் வெளிப் படுத்தவும் கற்கவில்லை என்றால் அது பின்னாளில் உறவுகளில் சிக்கல்களை உருவாக்கும். தனிமனித ஆளுமையிலும் பிரச்சினைகளைத் தரும்.

மற்ற பல உணர்வுகளைப் போல அழுகை இங்கு உணர்வின் வெளிப்பாடாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அது தோல்வியின் வெளிப்பாடாகச் சிலர் விஷயத்தில் ஒரு ஆயுதமாகப் (அழுது காரியத்தைச் சாதித்துவிடுவார்கள்) பார்க்கப்படுகிறது.

அழுவது சரியா, தவறா?

அழுகை நல்லது. ஆனால், எப்பொழுது எதற்காக அழுகிறோம் என்பதும் நம் அழுகையை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதையும் பொறுத்துதான் அழுகை பலவீனமாகிறது அல்லது ஆயுதமாகிறது.

பல்வேறு பயிலரங்குகளில் உணர்வுகள் பற்றிய வகுப்பில் பங்கேற்பாளர்களாக இருக்கும் ஆண்களிடமும் பெண்களிடமும் அவர்கள் கடைசியாக எப்போது அழுதார்கள் என்ற கேள்வியைக் கேட்பதுண்டு. பெரும் பாலான பெண்கள் அந்த ஒரு வாரத்துக்குள் குறைந்தபட்சம் ஒரு முறையாவது அழுததாகச் சொல்வார்கள்.

ஆண்கள் மாதக் கணக்காக வருடக் கணக்காக எப்போதோ அழ நேர்ந்ததைச் சொல்வார்கள். பெரும்பாலும் ஏதாவது ஒரு மரணத்தை ஒட்டிய அழுகையாகத்தான் அது இருக்கும்.

ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?

அழுவது எங்கள் இயல்பில்லை என்று பல ஆண்களும் சொல்வார்கள். அழுதால் தன்னைப் பலவீனமானவர்களாக நினைத்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் அழுகை வந்தால்கூடக் கட்டுப்படுத்திக்கொள்வோம் என்று சில ஆண்கள் சொல்வார்கள். பெண்களிடம் ஏன் அடிக்கடி அழுகிறீர்கள் என்று கேட்டால், அழுதால் மனபாரம் குறைவதாகச் சொல்வார்கள். “கொஞ்ச நேரம் அழுதுவிட்டுப் பிறகு நான் வேறு வேலை பார்க்கப் போய்விடுவேன். ஆனால், எங்க வீட்டுக்காரர் மனசுலேயே சுமந்துகொண்டு எரிச்சல்படுவார் அல்லது பேசாமல் கழுத் தறுப்பார். என்ன செய்வதென்று புரியாது” என்றார் பயிலரங்கில் பங்கேற்ற  50 வயதுப் பெண்.

உடனே பங்கேற்பாளராக இருந்த ஒரு ஆண், “மேடம், பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுதே காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார்கள்” என்றார். பெண்கள் அழுகையைக் காரியத்தைச் சாதிக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று குற்றம்சாட்டும் ஆண்கள் ஏன் அதற்கு ஈடுகொடுக்க வேண்டும்?

கவனத்துடன் கையாள்வோம்

அழுது தன்னைப் பலவீனமானவனாகக் காண்பித்துக்கொள்வதில் பெண்ணுக்கு வெட்கமில்லையா? அந்தப் பலவீனமான பெண்ணின் அழுகைக்கு ஈடுகொடுப்பது ஆணுக்குச் சில நேரம்  அதிகாரத்தையும் தருகிறதுதானே? அழுகையை ஆண்கள் பலவீனமாகப் பார்க்கப் பழக்கப்பட்டிருக் கிறார்கள். சில பெண்களுக்கு அது உணர்வு அழுத்தத்தின் வெளிப்பாடு. சிலருக்குக் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்கான ஆயுதம்.

சின்னஞ்சிறு வயதில் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்போது அதைக் கையாளத் தெரிவதில்லை. குழந்தை கேட்பதை வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள் அல்லது ஒரு சாத்து சாத்தி அதன் மனத்தை நொறுக்கிவிடுகிறார்கள். காரண காரியங்களோடு விளங்க முற்படுவதில்லை.

அழுகை என்ற உணர்வை நாம் கொஞ்சம் யோசித்துக் கையாள வேண்டியிருக்கிறது. உணர்வும் அறிவும் இணைந்துதானே நாம் வாழ்கிறோம்? அழுகை ஆயுதமல்ல, பலவீனமல்ல, உணர்வு. இது ஆணுக்கும் வேண்டும்; பெண்ணுக்கும் வேண்டும்.

அழுகை நல்லது

யார் முன் அழலாம் – நம்மைப் புரிந்து கொண்டவர் முன் அழலாம். நம்மைப் புரிந்து கொண்டவர் முன் அழும்போது அவர்களுக்கு அது சரியான அர்த்தத்தில் புரியும். அவர்கள் நம்மைத் தாங்கிப்பிடிக்கவோ தோள் கொடுக்கவோ செய்வார்கள். அல்லது நாம் தனியாக அழ வேண்டும் என்று சொல்வதைப் புரிந்துகொண்டு மதிப்பார்கள்.

எப்போது அழலாம்?

எதற்கெடுத்தாலும் அழுதால் அந்த அழுகைக்கு மரியாதை இருக்காது. எதற்கும் அழாமலே இருந்தாலும் அது மனச் சுமையாகிவிடும். அழுதால் நம் கெத்து போய்விடும் என்று நினைப்பவர்கள் தனியாகப் போய் அழுங்கள். ஆனால், அழுங்கள். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு எல்லாவித உணர்வுகளைப் பற்றியும் சரியான விதத்தில் அறிமுகப்படுத்துங்கள்.

ஆணுக்குரியது பெண்ணுக்குரியது என்று முத்திரை குத்தி இயல்பான உணர்வு வெளிப்பாட்டுக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள். ஏனென்றால் புகைப்பது, மது அருந்துவது, நரம்புத் தளர்ச்சி, மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வதற்கான பல்வேறு காரணங்களில் ஒன்று நமக்கு நம் உணர்வுகளைச் சரிவரக் கையாளத் தெரியாததுதான்.

அழக் கற்றுக்கொடுங்கள். அழக் கற்றுக் கொள்ளுங்கள். அதை ஆயுதமாகப் பயன் படுத்தாதீர்கள். கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடாகவும் பயன்படுத்தாதீர்கள். அது நம் உணர்வின் வெளிப்பாடு. அதைச் சரியானவிதத்தில் கையாண்டால் உணர்வின் அழுத்தம் லேசாகும்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x