Published : 11 Jan 2019 03:48 PM
Last Updated : 11 Jan 2019 03:48 PM

கோடம்பாக்கம் சந்திப்பு: நழுவிய வாய்ப்பு!

சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பு ‘8 தோட்டாக்கள்’ படத்திலும் கவனிக்கப்பட்டார். மாடலிங் உலகில் பிரபலமான இவர், மிஸ் தென்னிந்தியா பட்டம் வென்றவர். ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வாகி, கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு கைநழுவிப்போய்விட்டதாம். மாடலிங், சினிமா இரண்டிலுமே கவனம் செலுத்திவரும் இவருக்கு ரஜினி படத்தில் தவறிப்போன வாய்ப்பு தற்போது கமல் படத்தில் கிடைத்திருக்கிறது. கமல் தயாரிப்பில் விக்ரம் நடித்துவரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

வெயிலும் ஜெயிலும்

கடந்த 2006-ல் ‘வெயில்’ படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் வசந்தபாலன். தற்போது பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜெயில்’ படத்துக்கு இசையமைத்திருப்பதுடன், கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். படப்பிடிப்பும் பின் தயாரிப்புப் பணிகளும் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்தப் படத்துக்கான பின்னணி இசையை அமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். எழுத்தாளர் பாக்யம் சங்கர் வசனம் எழுதியிருக்கும் படம் இது.

 

வெடிக்காத குண்டு

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரெடெக்‌ஷன் மூலம் படங்களைத் தயாரிக்க நான்கு கதைகளைத் தேர்வு செய்துள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தைத் தயாரித்து வருகிறார். இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்தப் படம் ஒரு அவல நகைச்சுவைத் திரில்லர்.

உலகப்போரின்போது அந்நிய நாடுகளில் வீசப்பட்ட வெடிகுண்டுகளில் பல வெடிக்காத நிலையில் பழைய இருப்புக்கழிவாக இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அப்படி வெடிக்காமல்போன ஒரு குண்டை மையமாக வைத்து நகரும் கதை. நாயகனாக தினேஷும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் 'முண்டாசுப்பட்டி' முனீஷ்காந்தும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.

 

விஜய் 63 தொடக்கம்

அட்லி இயக்கத்தில் ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்த விஜய், மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிப்பது அதிகாரபூர்வமாக உறுதியாகிவிட்டது. விஜய்யின் 63-வது படமான இதில் அவருக்கு ஜோடி நயன்தாரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புக்கு அரங்குகள் அமைக்கும் பணி வேகமாக நடந்துவரும் நிலையில் வரும் 20-ம் தேதி பூஜையும் 21-ம் தேதி முதல் படப்பிடிப்பும் தொடங்க இருப்பதாக இயக்குநர் வட்டாரத்திலிருந்து தகவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x