Published : 26 Jan 2019 12:06 pm

Updated : 26 Jan 2019 12:06 pm

 

Published : 26 Jan 2019 12:06 PM
Last Updated : 26 Jan 2019 12:06 PM

பிழைக்க வந்தது குற்றமா?

மதுரையின் புகழ்பெற்ற சைனீஸ் உணவகத்தின் உரிமையாளர் அவர். கடந்த ஆண்டின் இறுதியில் தன்னுடைய நண்பரான மனநல மருத்துவர் விக்ரமை போனில் அழைத்தார். அந்த உணவகத்தின் பணியாளர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறைந்துகொண்டே வருகிறது என்பதே அவர்களிடையே நடந்த உரையாடலின் சாராம்சம்.

‘அந்தப் பணியாளர்கள் அனைவரும் டார்ஜிலிங்கில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள். நல்ல சம்பளமும் தரமான உணவும் முறையான தங்கும் வசதியும் தகுந்த மரியாதையும் அவர்களுக்கு அளிக்கிறேன். இருப்பினும், பணியில் அவர்களின் ஊக்கம் நாளுக்கு நாள் தேய்ந்து, இன்று ஊக்கமே இல்லாமல் இருப்பதாக’, அவர் கவலையுடன் கூறினார். மேம்போக்காகப் பார்த்தால், அந்த உரிமையாளர் பேசிய விஷயம் உணவகத்தின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயமாகவே தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல; புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மனநலம் தொடர்பான பிரச்சினை அது.


மனச் சோர்வால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்

டாக்டர் விக்ரம், தன்னுடன் பணிபுரியும் மருத்துவர்களுடன் இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதித்தார். அவர்கள் அந்த உணவகத்தில் பணிபுரியும் 32 ஊழியர்களை அழைத்துப் பேசி, அவர்களின் மனநிலையை ஆய்வு செய்தனர். அவர்களின் ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சிகரமாக இருந்தன. அந்த ஊழியர்கள் அனைவரும் மன அழுத்தத்தாலும் மனச் சோர்வாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். தனிமையின் பிடியில் சிக்கியிருந்த அவர்கள் போதைப் பழக்கத்துக்கும் அடிமையாகி இருந்தனர்.

பணத்துக்காகப் பூர்விகத்தைப் பிரிந்து, நீண்ட காலத்துக்கு வெகு தொலைவில் வசிப்பதால் அவர்களது வாழ்வின் சமநிலை குலைந்துள்ளது என்பதை மருத்துவர்கள் உணர்ந்துகொண்டனர். அந்த மருத்துவக் குழு அவர்களைப் புனரமைப்பு மையத்தில் சேர்த்து, தீவிர சிகிச்சையளித்ததன் பலனாக, அவர்கள் இன்று மன அழுத்தத்தில் இருந்தும் மனச் சோர்வில் இருந்தும் சற்று விடுபட்டு உள்ளனர். இன்றும் அவர்களுக்குத் தொடர்ந்து மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. “மொழிப் பிரச்சினையாலும் தோற்ற அமைப்பாலும் பிழைக்கவந்த இடத்தில் அந்நியப்பட்டு நின்றதே அவர்களின் மனநலச் சீர்கேட்டுக்குக் காரணம்” என விக்ரம் கூறுகிறார்.

போதைக்கு அடிமையாக்கும் தனிமை

மனநல ஆலோசனை பெற்றவர்களில் சுபாஷும் ஒருவர். டார்ஜிலிங்கில் இருந்து வேலைக்காகத் தமிழகத்துக்கு வந்தவர் அவர். அந்த உணவகத்தில் தலைமைச் சமையலராகப் பணிபுரிகிறார். அவருக்கு முப்பது வயது இருக்கும். அவர் தமிழகத்துக்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. “இங்குள்ள பல உணவகங்களில் பணிபுரிந்து சமைக்கக் கற்றுக்கொண்டேன், சென்னையில் முழுநேரச் சமையல்காரரானபோது எனக்குச் சம்பளம் 3,000 ரூபாய். மதுரையில் இருக்கும் இந்த சைனீஸ் உணவகத்தில் சேர்ந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன” என உணர்ச்சியற்ற குரலில் கூறுகிறார்.

சுபாஷ் இங்கு மூன்று படுக்கையறை வசதிகொண்ட வீட்டில், தன்னுடன் பணிபுரியும் 20 தொழிலாளர்களுடன் வசிக்கிறார். தினமும் காலையில் ஏழு மணிக்கு எழுந்து தனது அன்றாட கடமைகளை முடித்துவிட்டு, 8 மணிக்குத் தனது பணியை சுபாஷ் தொடங்குகிறார்.

11.30 மணிவாக்கில் வாடிக்கையாளர்கள் வரத் தொடங்குகின்றனர். மாலை நான்கு மணிவரை பரபரப்பான வேலை. அதன் பிறகு அவருக்கு சிறிது ஓய்வு கிடைக்கிறது. ஆறு மணிவாக்கில் இரவு உணவுக்கான பணிகளைத் தொடங்குகிறார். மீண்டும் பரபரப்பான வேலை. இரவு தூங்கும்முன் மனைவியுடனும் குழந்தையுடனும் சில நிமிடங்கள் போனில் பேசுகிறார். பிரிவுத் துயரோடும் இரவின் இருளோடும் தனிமையில் வாடியபடி தூங்குகிறார். அடுத்த நாளும் இந்த நிகழ்வுகள் எந்த மாற்றமும் இன்றி அதே வரிசையில் தொடர்கின்றன.

ஊருக்குப் போய்க் குடும்பத்துடன் செலவிட அதிக நாள் விடுப்பு தேவை என்பதால், வாரத்தின் அனைத்து நாட்களிலும் சுபாஷ் பணிபுரிகிறார். எந்தவித மாற்றமும் அற்ற வேலையும் பொழுதுபோக்கற்ற அன்றாட வாழ்வும் ஆசுவாசமற்ற தனிமையும் அவருக்குச் சலிப்பை ஏற்படுத்தின. சலிப்பை அகற்ற மதுவைத் துணைக்கு அழைத்தார். ஆரம்பத்தில் பணி ஓய்வின்போது மட்டும் குடித்தவர், வேலையின்போதும் குடிக்கும் அளவுக்கு, விரைவில் மதுவுக்கு அடிமை ஆனார். அதன்பின்தான் அந்த உணவகத்தின் உரிமையாளர் மனநல மருத்துவரின் உதவியை நாடினார்.

மீள முடியாத துயரம்

“டார்ஜிலிங் போன்ற மலைவாழ் தலங்களில் நிலையற்றதன்மை நிலவுகிறது. வேலையின்மை அங்கே தலைவிரித்தாடுகிறது. அங்குள்ள மக்கள் வேலையைத் தேடி டெல்லி, சென்னை, பெங்களூரு, கோவா போன்ற பெருநகரங்களுக்குச் செல்வது வாடிக்கையாக உள்ளது” என்று மதுரையில் இருக்கும் ஒரு தொண்டுநிறுவனத்தின் பொதுச்செயலாளரான நிமே ஜான் செட்ரி கூறுகிறார். வேலையில் சேர்வதற்காக இங்கு வருபவர்களுக்கு கணிசமான முன்பணம் கொடுக்கப்படுகிறது. அந்தப் பணமே அந்த மக்களுக்கான தூண்டில். தினமும் ஓய்வற்ற நீண்ட நேரப் பணி என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒன்றாக மாறுகிறது.

தங்குமிடத்திலும் பணியிடத்திலும் அவர்கள் நடத்தப்படும் விதம் அவலத்தின் உச்சம். வேலையைவிட்டு அவர்கள் சென்றுவிடாமல் இருக்க, சம்பளத்தில் கணிசமான தொகை பிடித்துவைக்கப்படுகிறது. இது, துயர்மிகுந்த அந்த வாழ்வில் இருந்து மீள்வதற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிடுகிறது.

2016-ல் தமிழக அரசு மேற்கொண்ட ஆய்வின்படி, தமிழகத்தில் 11 லட்சத்துக்கும் மேலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில், 27 சதவீதம் பேர் தயாரிப்புத் தொழிலும் 14.1 சதவீதத்தினர் நூற்புத் தொழிற்சாலைகளிலும் 11.4 சதவீதத்தினர் கட்டுமானத் தொழிலும் உள்ளனர். 2018-ல் எடுத்த ஆய்வு முடிவுகளின்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குக் குறைவான சம்பளமும் தரமற்ற உணவும் சுகாதாரமற்ற இருப்பிடமுமே அளிக்கப்படுகின்றன.

துரத்தும் ஏளனம்

“எங்களுடைய துயரம் பணியிடத்துடன் முடிந்து விடுவதில்லை. அது நாங்கள் செல்லுமிடம் எல்லாம் தொடர்கிறது. சொந்த நாட்டிலேயே சைனாக்காரன் என்றழைக்கப்பட்டு அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகிறோம். நாங்கள் அமைதியாக விலகிச் சென்றாலும், கேலிக் குரல்களும் ஏளனப் பார்வைகளும் எங்களை விடாமல் துரத்துகின்றன. காவல்துறையினரும் எங்களிடம் கண்ணியமாக நடந்துகொள் வதில்லை. சந்தேகக் கண்களின் வழியேதான் எப்போதும் நாங்கள் பார்க்கப்படுகிறோம்” என்று துயர் மிகுந்த குரலில் விரக்தி மேலிட சுபாஷ் கூறுகிறார்.

“அந்நியமாக உணர்வதும் தனிமையில் வாடுவதும் மனிதனின் சமநிலையைக் குலைக்கும் அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால்தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எளிதில் மனச் சோர்வுக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகி போதையின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர்” என்கிறார் மனநல மருத்துவர் ஆர். கோபி. மது மட்டுமல்லாமல்; இருமல் மருந்தும் தங்களுக்குத் தேவையான நிம்மதியையும் தூக்கத்தையும் அளிப்பதாக சுபாஷ் சொல்கிறார். இருமல் மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் என்று தெரிந்திருந்தும், அதற்கு அவர்கள் அடிமையாக இருக்கின்றனர்.

மனநலம் காப்போம்

சுபாஷின் இன்றைய மாதச் சம்பளம் 20,000 ரூபாய். ஆனால், அதற்காக அவர் தனது பத்தாண்டு வாழ்வை முழுமையாக இழந்து நிற்கிறார். பொருள் சார்ந்த இன்றைய வாழ்வில், பணத்தின் தேவைக்காகவும் வாழ்க்கையின் வசதிக்காகவும் மனத்தின் நலம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதை சுபாஷ் போன்றவர்களின் வாழ்வு நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.மொழி, உணவு, பழக்கவழக்கம், கலாச்சாரம் போன்றவற்றில் வேறுபட்டு நிற்கும் இந்தப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சமூகத்துடன் ஒட்ட இயலாமல் அந்நியப்பட்டு நிற்கிறார்கள். பிழைக்க வந்த இடத்தில் மிகுந்த கேலிக்கும் துரத்தலுக்கும் சுரண்டலுக்கும் அவர்கள் உள்ளாவது, அவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்துக்கும் நல்லதல்ல.

* பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.


வேறு மாநில தொழிலாளர்கள்அண்டை மாநில தொழிலாளர்கள்சைனீஸ் உணவகம் பணியாளர்கள் மன அழுத்தம் பணி ஊக்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மனநல பிரச்சினைதொழிலாளர் மனநலம்வேலை அழுத்தம்மனச் சோர்வு பிழைக்க வருபவர்கள்மன அழுத்தம் பாதிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

lost-loneliness

தொலைந்த தனிமை!

வலைஞர் பக்கம்
x