Published : 19 Dec 2018 09:59 AM
Last Updated : 19 Dec 2018 09:59 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பாலைவனக் கப்பல்!

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப் போகும் என்னைப் போன்றவர்களுக்கு, எப்படித் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியுமா, டிங்கு?

– ந. சீனிவாசன்,  10-ம் வகுப்பு, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

இப்போது பாடங்களை முழுமையாக நடத்தி முடித்திருப்பார்கள். பொதுத் தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. அடிக்கடி பயிற்சித் தேர்வுகள் வைத்து, உங்களை நல்ல மதிப்பெண்கள் எடுக்கத் தயாராக்கிவிடுவார்கள். இந்தப் பயிற்சித் தேர்வுகள் மூலம் பரீட்சை பயம், நேரமின்மை பயம் போன்றவை எல்லாம் மறைந்துவிடும்.

உங்கள் பாடப் புத்தகங்களில் இல்லாத எந்தக் கேள்வியையும் கேட்க மாட்டார்கள், நீங்கள் படித்த பாடங்களில் இருந்துதான் கேள்விகள் வரப் போகின்றன. அதனால் என்ன கேள்வி வரும் என்ற பயத்தை விட்டுவிடுங்கள்.

மறந்துவிடும் என்று தோன்றும் ஃபார்முலா, செய்யுள் போன்றவற்றை எழுதிப் பார்த்துவிடுங்கள். இரவில் வெகு நேரம் கண் விழித்துப் படிக்காதீர்கள். அதிகாலை எழுந்து படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள். நன்றாகத் தூங்கி ஓய்வெடுங்கள். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். தன்னம்பிக்கையோடு பரீட்சையை எதிர்கொள்ளுங்கள்.

பதற்றம் இல்லாமல் கேள்விகளைப் படித்துப் புரிந்துகொண்டு, பதில்களை எழுதுங்கள். முடிந்து போன பரீட்சையைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த பரீட்சைக்குத் தயாராகுங்கள், சீனிவாசன். உங்களுக்கும் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் அனைவருக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றியடைய அன்பான வாழ்த்துகள்!

சுட்டெரிக்கும் பாலைவனத்தில் ஒட்டகம் எப்படித் தாக்குப் பிடிக்கிறது, டிங்கு?

– பி. நித்யா, 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம், திருவள்ளூர்.

பாலைவனத்தில் வசிப்பதற்கு ஏற்றவாறு ஒட்டகத்துக்கு தகவமைப்பை வழங்கியிருக்கிறது இயற்கை. திமில், நீண்ட உறுதியான கால்கள், நீளமான முடி, சிறப்பு இமைகள் போன்றவை ஒட்டகம் பாலைவனத்தில் வாழ்வதற்கு உதவி செய்கின்றன.

உணவைக் கொழுப்பாக மாற்றி திமிலில் சேமித்து வைப்பதால், உணவு கிடைக்காத காலத்தில் திமிலில் இருந்து ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறது. இரவு நேரத்தில் பாலைவனக் குளிரைச் சமாளிக்க முடி உதவுகிறது.  நீண்ட மெல்லிய கால்கள் பாலைவன மணலில் எளிதாகச் செல்வதற்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கின்றன.

பாலைவனப் புயலில் தூசிகள் நுழையாதபடி மூக்கில் இருக்கும் முடிகள் பாதுகாக்கின்றன. கண்களுக்குள் தூசியும் மணலும் செல்லாபடி மூன்று இமைகள் காக்கின்றன. மிக மெல்லிய இமைகள் வழியே ஒட்டகத்தால் பார்க்கவும் முடியும். எவ்வளவு மோசமான மணல் புயலாக இருந்தாலும் இமைகள் மணலைத் தடுத்துவிடுகின்றன.

ஒவ்வொரு காலிலும் இருக்கும் இரண்டு விரல்களில் உள்ள நகங்கள் பாதங்களைப் பாதுகாக்கின்றன. இத்தனை சிறப்புகள் இருப்பதால்தான் ஒட்டகத்தை, ’பாலைவனக் கப்பல்’ என்று அழைக்கிறார்கள் நித்யா.

மரணமே இல்லாத வாழ்க்கை உண்டா, டிங்கு?

–அ. சூரிய பிரகாஷ், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

இல்லை, சூரிய பிரகாஷ். ஒரு செல் உயிரினத்திலிருந்து ஆறறிவு படைத்த உயிரினம்வரை மரணம் இல்லாத வாழ்க்கை என்பதே இல்லை. பிறப்பு என்று ஒன்று நிகழ்ந்தால் இறப்பும் நிச்சயம். குறிப்பிட்ட வாழ்நாளுக்குள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து மறைவதில்தான் வாழ்க்கைக்கான சுவாரசியமே இருக்கிறது. மரணமே இல்லாத வாழ்க்கை என்றால் சலிப்பு வந்துவிடும்.

கிளிக்கு ஜோதிடம் தெரியுமா, டிங்கு?

– ச. பாலமுருகன், 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

கிளிக்கு ஜோதிடம் எல்லாம் தெரியாது. சீட்டுகளை எடுக்கச் சொல்லிப் பழக்கப்படுத்தியிருப்பார்கள். 4, 5 சீட்டுகள் எடுத்துப் போட்டுவிட்டு, ஒரு சீட்டை எடுத்து ஜோதிடரிடம் கொடுத்துவிட்டு, தானியத்தை வாங்கிக்கொண்டு கூண்டுக்குள் சென்றுவிடும் கிளி. அந்தச் சீட்டில் என்ன படம் இருக்கிறதோ, அதற்கு ஏற்றார்போல ஜோசிடம் சொல்லிவிடுவார் கிளி ஜோதிடர். கிளிக்கு அதனுடைய ஜோதிடமே தெரியாமல்தானே கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது! இதில் மனிதர்களின் ஜோதிடம் எல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை, பாலமுருகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x