Published : 17 Dec 2018 11:59 AM
Last Updated : 17 Dec 2018 11:59 AM

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய வசதிகள்

தகவல் தொடர்பின் சொர்க்கபுரி என்றே வாட்ஸ்அப்பை வர்ணிக்கலாம். அந்த அளவுக்கு தற்போதைய இணைய யுகத்தின் இன்றியமையாத 24 மணி நேர சேவையாக இருக்கிறது. காலையில் நம்மை எழுப்புவது முதல், இரவு தூங்கவிடாமல் செய்வது வரை தன் கடமையைச் செவ்வனே செய்கிறது. தற்போது மேலும் ஆறு புதிய அம்சங்களுடன் களமிறங்குகிறது வாட்ஸ்அப்.

தொடர்ச்சியான வாய்ஸ் மெசேஜ்: புதிய வசதியில் வாய்ஸ் மெசேஜ் தானாகவே ஒன்றன் பின்னாக  நிற்கும். பிளே பட்டனை அழுத்தினால் அந்த வாய்ஸ் மெசேஜ்களை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக நாம் கேட்கலாம். இந்த வசதி வாட்ஸ் அப் பீட்டாவில் ஐஓஎஸ் 2.18.100 வெர்ஷனிலும், ஆண்ட்ராய்டில் 2.18.362 வெர்ஷனிலும் கிடைக்கிறது.

கியூ ஆர் கோடுகள்: நாம் தற்போது வாட்ஸ் அப்  நம்பர்களை முழுமையாக பிறருடன்  ஷேர் செய்து வருகிறோம். இந்த வசதியில்  கியூ ஆர் கோடுகள் மூலமாகவே வாட்ஸ் அப் நம்பர்களை ஷேர் செய்யலாம். வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்காக கியூ ஆர் கோடுகளை நிறுத்தி வைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. இதனால், வேறு நபர்கள் கியூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்து நம்பர்களை பெறுவது தடுக்கப்பட வாய்ப்புள்ளது. கியூ ஆர் கோடு வசதி ஏற்கனவே வாட்ஸ்அப்பில் இருக்கிறது. (கம்யூட்டரில் வாட்ஸ் அப் பயன்படுத்த கியூஆர் கோட்டை ஸ்கேன் செய்து உள்ளே நுழைய வேண்டும்)

டார்க் மோட்: இதன் வாயிலாக அனைத்தும் வெளிச்சமாக தோன்றும். இரவு நேரத்தில் நம் கண்களை பாதிக்காமல் வாஸ்ட் அப் பயன்படுத்துவதற்காக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குரூப் கால் ஷார்ட்கட்: வாட்ஸ்அப்பில் தற்போது குரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதி உள்ளது. இதன் படி  நாம் ஒருவரை அழைத்து,  பின்னர் குரூப் கால் ஆப்ஷனை அழுத்த வேண்டும். வாட்ஸ்அப் விரைவில் குரூப் கால்களுக்காகவே தனியாக ஆப்ஷன் அறிமுகம்  செய்ய உள்ளது. ஆனால், இந்த வசதி குரூப்புகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாம் யாரை தொடர்பு கொள்ள விரும்புகிறமோ அவர்கள் நம்பரை  தேர்ந்தெடுத்து, வாய்ஸ் அல்லது வீடியோ எது வேண்டுமோ அதை தேர்வு செய்தால் போதும்.

மீடியா பிரிவியூ: இந்த வசதி மூலம், போட்டோ, ஆடியோ, வீடியோ ஆகியவற்றை வாட்ஸ்அப் ஆப்-பை ஓப்பன் செய்யாமலேயே,   நோட்டிஃபிகேஷன் பிரிவிலேயே நேரடியாக கேட்க, பார்க்க முடியும். ஆனால், இந்த வசதியை ஐஓஎஸ்  வெர்ஷன்  உள்ள  மொபைல்போன்களில் மட்டுமே பெற முடியும்.

பிக்சர்  இன் பிக்சர்: இதுவரை வாட்ஸ் அப்பில் வந்துள்ள யூ டியூப் லிங்கை கிளிக் செய்யும் போது, தானாக  யூ டியூப் ஆப்  மூலமாக ஓபன் செய்யப்படும். ஆனால் புதிய பீட்டா வசதி வழியாக யூ டியூப் வீடியோவை சாட் விண்டோ வாயிலாகவே பார்க்கலாம்.

இந்தப் புதிய வசதிகளை வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்  பீட்டா மூலமாக சோதனை செய்து பார்க்கலாம். வாட்ஸ் அப் பீட்டாவிற்கு அதற்கென்று வழங்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக  செல்லலாம். அதேசமயம், சரியான, அதற்குரிய லிங்கை தேர்வு செய்துள்ளீர்களா என்பதை உறுதி செய்து விட்டு செல்வது மிகவும் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x