Last Updated : 13 Nov, 2018 10:54 AM

 

Published : 13 Nov 2018 10:54 AM
Last Updated : 13 Nov 2018 10:54 AM

நிறுவனத் தலைவர்களை உருவாக்கும் பள்ளி

“நீ ஒரு பருந்து;

உயரப் பறப்பதே உனது வாழ்வு,

நீ கண்டறிவதற்குப் புதிய உலகங்கள் அங்கு உள்ளன,

ஓ ராஜாளிப் பறவையே! விண்ணைத் தாண்டிப் பற

உனக்காக நிறையத் தொடுவானங்கள் அங்கு உள்ளன”

இந்த வாசகத்தோடுதான் ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூல் பள்ளியின் இணையதளம் நம்மை வரவேற்கிறது. அதனால்தானோ என்னவோ, இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள், சர்வதேச அளவில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களான  ‘மைக்ரோசாஃப்ட்’,  ‘அடோப்’, ‘மாஸ்டர்கார்டு’ ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கின்றனர். இந்த மூன்று நிறுவனங்களும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டவை. இந்த நிறுவனங்களின் தற்போதைய தலைமைச் செயலதிகாரிகள் (சி.இ.ஓ.) மூவருமே ஹைதராபாத் பேகம்பாத்தில் இருக்கும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.

சிறந்த 10 பள்ளிகளில் ஒன்று

“நான், சாந்தனு நாராயண் (‘அடோப்’), அஜய் பங்கா ( ‘மாஸ்டர்கார்டு’) ஆகிய மூவரும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்" என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சத்யா நாதெள்ளா, ஒரு பேட்டியின்போது சொன்னார். அப்படி அவர் சொல்லி இருக்காவிட்டால், இந்தத் தகவல் வெளியில் தெரியாத ஒன்றாகவே இருந்திருக்கும். ஏதோ ஒரு மாணவரின் அபரிமித வளர்ச்சி என்றால், அதை அந்த மாணவரின் தனிப்பட்ட திறமை என்றோ தற்செயலாக நடந்த நிகழ்வு என்றோ சொல்லிவிடலாம். ஆனால், தொடர்ச்சியாக, மூன்று மாணவர்கள், அதுவும் ஒரே காலகட்டத்தில் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதால், அந்தப் பள்ளியின் தனித்துவமிக்க சிறப்பும் அதற்கான காரணிகளில் ஒன்றாக மாறுகிறது.

லண்டனில் புகழ்பெற்று விளங்கிய ஈதன் (Eton) பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூல் 1923-ல் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது தொடங்கப்பட்ட இந்தக் கல்விக்கூடத்தின் நோக்கம், உயர்குடி மக்களின் குழந்தைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதே. உலகத் தரம் வாய்ந்த கல்வி இன்றும் அந்தப் பள்ளியில் அளிக்கப்படுகிறது என்பதை, 2017-ல் வெளிவந்த இந்திய அளவிலான பள்ளிகளுக்கான தரப்பட்டியல் உணர்த்துகிறது. அந்தப் பட்டியலின்படி, இந்தியாவின் சிறந்த 10 பள்ளிகளில் ஒன்றாக இந்தப் பள்ளி உள்ளது.

சாதாரணனும் அசாதாரணன் ஆகலாம்!

1990-களில் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, ஹைதராபாத் நகரை மென்பொருள் நகராக மாற்றியமைத்தார். அதற்கு முன்புவரை, மென்பொருள் நிறுவனங்களின் விருப்பத் தேர்வு இந்தியாவில் பெங்களூருவாகவே இருந்தது. மென்பொருள் பெரும் நிறுவனங்களின் தொடர் படையெடுப்பால், பெங்களூருவில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும், அந்த நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு அந்த நகரின் கட்டமைப்புக் குறைபாடுகளும் போக்குவரத்து நெரிசலும் பெரும் தடைகளாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில்தான், சந்திரபாபு நாயுடு அந்த நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்து, அவற்றுக்கு வேண்டிய வசதிகளை ஹைதராபாத்தில் செய்துகொடுத்தார். இதன் பலனாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்தியத் தலைமையகமாக ஹைதராபாத் மாறியது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சத்யா நாதெள்ளா நுழையும் வாய்ப்பைப் பெற்றதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

2017-ல் தான் படித்த பள்ளிக்கு வருகை தந்து தனது நினைவுகளை அப்பள்ளியின் இந்நாள் மாணவர்களோடு அவர் பகிர்ந்துகொண்டார். "இந்தப் பள்ளியில் நான் படித்த நாட்களே எனது வாழ்வைச் செதுக்கி வடிவமைத்தன” என்று நன்றி மேலோங்க கூறினார். உலகின் மிகப் பெரும் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி என்பதை மறந்து, அந்தப் பள்ளி மாணவர்களோடு கிரிக்கெட் விளையாடினார். தன்னம்பிக்கைக்கும் சுய திறனுக்கும் இடையிலான அந்த மெல்லிய கோட்டில் எப்படிச் சரியாமல், வீழாமல் நடப்பது என்பதைப் பள்ளி நாட்களில் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகளே தனக்குக் கற்றுக்கொடுத்தன என மாணவர்களிடம் நட்புடன் சொன்னார். அதோடு மட்டுமல்லாமல்; தனது மனைவி அனுபமாவை இந்தப் பள்ளியில்தான் சந்தித்ததாகச் சொன்னார். அப்போது எழுந்த மாணவர்களின் உற்சாக ஆர்ப்பரித்தலில், அவரின் குரல் சிறிதுநேரம் மௌனமானது. இவரும் நம்மைப் போன்று ஒரு சாதாரண மாணவர்தான் என்ற புரிதலையும், முயன்றால் நாமும் எதிர்காலத்தில் சி.இ.ஒ. ஆகலாம் என்ற நம்பிக்கையையும் அந்த மௌனம் மாணவர்களின் மனத்தில் விதைத்தது.

பள்ளியின் பெருமை

l ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூல் பள்ளியைத் தோற்றுவித்தவர் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம், உஸ்மான் அலி கான்.

l 152 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளியின் தலைமைக் கட்டிட வடிவமைப்பாளர் நவாப் கான் பகதூர் மிஸ்ரா பெய்க்.

l 1950-ல் ஜமீன்தாரி முறை ஒழிந்ததை அடுத்து 1951-ல் இந்தப் பள்ளியின் பெயர் ‘ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூல்’ என்றானது.

l இந்தப் பள்ளி 'கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்’ அமைப்பின் (ICSE, ISC) அங்கீகாரம் பெற்றது.

l பள்ளிகளின் தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடத்திலும் தேசிய அளவில் மூன்றாம் இடத்திலும் இந்தப் பள்ளி உள்ளது.

l மாணவர்களின் தனித் திறமையையும் சுய சிந்தனையையும் ஊக்குவிப்பதில் இந்தப் பள்ளி தனிக் கவனம் செலுத்துவதால், இந்தப் பள்ளிக்கு ‘Global League Certificate 2018' சான்றிதழை லண்டனில் இருக்கும் ‘தி ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ அமைப்பு வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x