Published : 14 Nov 2018 04:11 PM
Last Updated : 14 Nov 2018 04:11 PM

டிங்குவிடம் கேளுங்கள்: கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?

வெட்டுக்கிளி பாம்பைச் சாப்பிடுமா, டிங்கு?

14/11/2018- கு. செல்வம், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

பாம்பு வெட்டுக்கிளியைச் சாப்பிடுமா என்று கேட்க நினைத்து, வெட்டுக்கிளி பாம்பைச் சாப்பிடுமா என்று கேட்டுவிட்டீர்களா, செல்வம்? ஒரு சின்ன வெட்டுக்கிளியால் பாம்பைச் சாப்பிட இயலாது. பாம்பும் பூச்சிகளைச் சாப்பிடுவதில்லை. சிறிய விலங்குகள், பறவைகள், முட்டைகள் போன்றவற்றை முழுமையாக விழுங்கிவிடும். வெட்டுக்கிளிகள் 10 ஆயிரம், 20 ஆயிரம் என்று கூட்டமாக வந்தால், பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கின்றன. மற்றபடி, வெட்டுக்கிளிகள் பாம்பைச் சாப்பிடுவதில்லை.

 

கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன், டிங்கு?

 

உலகில் உள்ள தண்ணீரின் பெரும்பகுதி கடலில் உப்பு நீராகத்தான் இருக்கிறது. இந்தக் கடலுக்கு மழை நீர் மூலம் தண்ணீர் வந்துசேர்கிறது. மழைநீர் பாறைகள், மணல்களைக் கரைத்துக்கொண்டு ஆறுகளில் சேர்கிறது. இப்படி வரும்போது பாறைகள், மணல்களில் உள்ள தாதுக்களையும் உப்புகளையும் எடுத்துக்கொண்டு செல்கிறது. ஆறுகள் இந்த நீரைக் கடலில் சேர்த்துவிடுகின்றன. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. தண்ணீரில் உள்ள உப்பு மட்டும் கடலிலேயே தங்கிவிடுகிறது. ஆவி, மேகமாகக் குளிர்ந்து மீண்டும் மழையாகப் பொழிகிறது. அந்த நீர் தாதுக்களையும் உப்புகளையும் எடுத்துக்கொண்டு ஆறு மூலம் கடலில் சேர்த்துவிடுகிறது. இப்படித்தான் கடல் நீர், உப்பு நீராக இருக்கிறது, யங்கேஷ்வர்.

 

 

இறந்தவர் உடலை ஐஸ் பெட்டியில் வைப்பது ஏன், டிங்கு?

 

மனிதர் இறந்த உடனே உடல் வேகமாகச் சிதைவடைய ஆரம்பிக்கும். நாள் கணக்கில் வீட்டில் வைத்திருக்கும்போது உடல் அழுகிவிடும். அதனால் குளிர்சாதனப் பெட்டியில் இறந்த உடலை வைத்து, கெடாமல் பாதுகாக்கின்றனர். பனிப் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறந்த உடல்கூட கெட்டுப் போகாமல் இருக்கிறது. குறிப்பிட்ட அளவு குளிரில் உடல் சிதைவடையாது என்பதால், குளிர்சாதனப் பெட்டியில் உடலை வைக்கிறார்கள், முகமது இர்பான்.

 

ஆட்டுக்கல், அம்மிக்கல், உலக்கை போன்றவை எல்லாம் இனிமேல் பார்க்க முடியாது என்பது உனக்கு வருத்தமாக இல்லையா, டிங்கு?

 

74a25796P1671144mrjpg100 

 

 

‘மாற்றம்’ என்பதைத் தவிர்க்கவே முடியாது, ஹரிஹரசுதன். அந்தக் காலத்தில் கால்நடையாகவே மனிதன் பயணித்தான், பிறகு விலங்குகளைப் பயன்படுத்தினான். அதற்குப் பிறகு மாட்டு வண்டியைப் பயன்படுத்தினான். இன்று இவற்றை எல்லாம் பயன்படுத்திக்கொண்டா இருக்கிறோம்? முன்னேற்றம் வரும்போது பழைய விஷயங்கள் காணாமல் போவது இயல்பு. சமையலுக்காகப் பெண்கள் நாள் முழுவதும் மாவாட்டி, அம்மியில் அரைத்து, மாவை உலக்கையால் இடித்து வேலை செய்துகொண்டே இருந்தார்கள். கடுமையான உழைப்பு என்பதால் பிற விஷயங்களில் அவர்களுக்குக் கவனம் செலுத்த முடியாமல் போனது. விஞ்ஞானம் வளர்ந்தது. மாவு அரைக்கவும் சட்னி அரைக்கவும் இயந்திரங்கள் வந்தன. பெண்களின் சமையல் நேரம் மிச்சமானது. வீட்டு வேலைகளை விரைவில் முடித்துவிட்டு, படிக்க ஆரம்பித்தனர். அலுவலகங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். சமூகத்துக்கும் தங்கள் பங்களிப்பைச் செலுத்த ஆரம்பித்தனர். அதேபோல சமையல் வேலை சுலபமானதும் ஆண்களும் சமைக்க ஆரம்பித்திருக்கின்றனர். இவை எல்லாம் மகிழ்ச்சியான விஷயங்கள்தானே, ஹரிஹரசுதன்!டிங்குவிடம் கேளுங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x