Published : 28 Nov 2018 10:38 AM
Last Updated : 28 Nov 2018 10:38 AM

டிங்குவிடம் கேளுங்கள்: சாமியாடுவது ஏன்? 

சிலர் சாமி ஆடுகிறார்களே, அவர்களுக்கு உண்மையிலேயே சாமி வருகிறதா, டிங்கு?

– மு.ஜோ. வஷிதா, 10-ம் வகுப்பு, லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தே. கல்லுப்பட்டி, மதுரை.

இல்லை வஷிதா. மன ரீதியான விளைவுகள்தான் இப்படிச் சாமி ஆடுவதில் கொண்டுவந்து விடுகின்றன. சிலருக்குக் குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்குத் தான் அங்கீகரிக்கப்படவில்லை என்ற வருத்தம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்களுக்குள்ளேயே வருந்தி, மன அழுத்தத்துக்குச் சென்றுவிடுவார்கள். தான் ஒரு கருத்தைச் சொல்லும்போது மதிக்காதவர்கள், அதையே சாமி என்ற பெயரில் சொல்லும்போது பயத்துடன் கேட்டுக்கொள்வார்கள் என்பதால் சிலர் தங்களைச் சாமியாடிகளாக நினைத்துக்கொள்வார்கள்.

திருவிழா, திருமணம் போன்று மக்கள் கூடும் நேரத்தில் தன்னை ஒரு சாமியாடியாக வெளிப்படுத்திக்கொள்வார்கள். இப்படிச் சாமியாடும்போது, அத்தனை பேரும் அவர் சொல்வதை பயபக்தியோடு கேட்டுக்கொள்வார்கள். அவருக்கு மரியாதை கொடுப்பார்கள். இதைப் பார்த்து அந்தச் சாமியாடி மனதுக்குள் மகிழ்ச்சியடைவார்.

இவர்களால் யாருக்கும் பெரிதாக எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதனால் அவர்கள் சொல்வதைப் பொருட்படுத்தவும் வேண்டியதில்லை, சும்மாவா சொல்கிறீர்கள் என்று கிண்டலடிக்கவும் வேண்டியதில்லை. ஆனால் சாமி வருவதாகச் சொல்லி, ஏமாற்றுகிறவர்களிடம் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

என்னுடன் படித்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கியிருந்தார்.   பெரும்பாலும் வகுப்புக்கு வெளியேதான் நின்றுகொண்டிருப்பார். ஒருநாள் அவர் சாமியாடுவதாகச் சொன்னார்கள். அங்கே சென்றோம். கண்ணீர் விட்டார். வேறு குரலில் பேசினார். எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. சற்று நேரத்தில் வார்டன், ஆசிரியர்கள் எல்லாம் நம்ப ஆரம்பித்துவிட்டனர். பயபக்தியுடன் கேள்வி கேட்டார்கள்.

அவரும் பதில் சொன்னார். பிறகு அப்படியே மயங்கி விழுந்தார். சாமியாடிய நாளில் இருந்து அவரை யாரும் திட்டவில்லை, தண்டனை அளிக்கவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு அவரிடம் விசாரித்தேன். “2 மாசமா வீட்டிலிருந்து யாரும் பார்க்க வரலை. எல்லோருக்கும் விசிட்டர்ஸ் வர்றாங்க. வருத்தமா இருந்தது. பிரார்த்தனை அறையில் உட்கார்ந்திருந்தேன். கண்ணீர் வந்தது. அந்த நேரம் தோழிகள் வந்தாங்க.

எங்க ஊர் சாமியாடி மாதிரி சும்மா பேசினேன். விஷயத்தைப் பெரிசாக்கிட்டாங்க. வேறு வழியில்லாமல் நானும் அதையே தொடர வேண்டியதாகிவிட்டது. எப்பப் பார்த்தாலும் ஒழுங்கீனம்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்களே… இப்பப் பார்த்தியா, வார்டனிலிருந்து டீச்சர்வரை எவ்வளவு மரியாதைக் கொடுக்கிறாங்க!” என்று சிரித்தார். அன்றுதான் சாமியாடிகள் மீது இருந்த சந்தேகம் எனக்குத் தீர்ந்தது.

tinku-2jpg

குஜராத்தில் இருக்கும் சர்தார் வல்லபபாய் படேலின் சிலைக்கு ஏன் ‘Statue of Unity' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது, டிங்கு?

- கோ. சேதுராஜ், 8-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

சுதந்திரத்துக்குப் பிறகு, பல சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த இந்தியாவை படேல் ஒன்றுசேர்த்தார். இதனால் இவரை ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைத்தனர். இதை நினைவுகூரும் வகையில் ஒற்றுமைக்கான சிலையாக  அமைத்திருக்கிறார்கள், சேதுராஜ்.

என்னுடன் படிக்கும் இரண்டு பெண்கள் எனக்கு நல்ல தோழிகளாக இருந்தனர். சக மாணவர்கள் எங்களைக் கண்டு பொறாமைகொண்டனர். தோழிகளில் ஒருவரிடம் என்னைப் பற்றித் தவறாகச் சொல்லிவிட்டனர். அன்று முதல் அவரும் இன்னொரு தோழியும் என்னுடன் பேசுவதில்லை.

என் தரப்பு நியாயத்தையும் கேட்கவில்லை. அவர்களின் நட்பை இழந்து நான் மிகவும் துன்பப்படுகிறேன். எந்த வேலையும் செய்ய முடியவில்லை. நான் என்ன செய்வது? அவர்களிடம் மீண்டும் நட்பை ஏற்படுத்த முயற்சி செய்யட்டுமா? ஒரு வழி சொல்லு, டிங்கு?

ஆனந்த்.

எல்லோருக்கும் வரக்கூடிய பிரச்சினைதான், ஆனந்த். இதை நினைத்து நீங்கள் அதிகம் கவலைகொள்ள வேண்டியதில்லை. இந்த வயதில் எதிர்பாலினத்தின் மீது ஓர் ஆர்வம் உண்டாகும். நம் சமூகத்தில் ஆண்-பெண் நட்பை இயல்பான நட்பாகப் பெரும்பாலும் அங்கீகரிப்பதில்லை. அதன் விளைவுதான் ஓர் ஆணும் பெண்ணும் நட்பாக இருந்தால் தவறாக ஏதாவது சொல்லிவிடுகிறார்கள். நட்பைக் கெடுத்துவிடுகிறார்கள். 

உங்கள் தோழிகள் உங்களிடமே ‘இப்படிச் சொன்னாயா?’ என்று கேட்டுத் தெளிவு பெற்றிருக்கலாம். ஆனால் அவர்கள் உங்களிடம் கேட்கவும் இல்லை, உங்களையும் சொல்லவிடவில்லை. நல்ல நட்பு முறிந்துவிட்டால் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

tinku-3jpgright

தோழிகள் உங்களிடம் நட்பாக இருந்தபோது ஏற்றுக்கொண்ட நீங்கள், இப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக உங்களிடம் பேசவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நட்பின் அழகே ஒருவரின் கருத்தை மதிப்பதுதான். அவர்களிடம் பேச முயற்சி செய்யாதீர்கள். விட்டுவிடுங்கள். வேறு நல்ல நட்பு நிச்சயம் கிடைக்கும். கலங்க வேண்டாம்.

எறும்பு தண்ணீர் குடிக்குமா, டிங்கு?

– ரா. சிநேகபிரியா, 9-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

எறும்புகளுக்குத் தேவையான தண்ணீர்ச் சத்தை அவை சாப்பிடும் உணவில் இருந்தே பெரும்பாலும் பெற்றுக்கொள்கின்றன. சில நேரம் மழைத்துளி, பனித்துளி போன்றவற்றிலிருந்தும் தண்ணீர் எடுத்துக்கொள்வது உண்டு, சிநேகபிரியா.டிங்குவிடம் கேளுங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x