Last Updated : 27 Oct, 2018 10:42 AM

 

Published : 27 Oct 2018 10:42 AM
Last Updated : 27 Oct 2018 10:42 AM

வீட்டை மாற்றும்போது கவனிக்க வேண்டியவை

பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்குக் குடிபெயர்வது என்பது எப்போதுமே உற்சாகமான விஷயம்தான். ஆனால், புது வீட்டுக்கு மாறும்போது சில சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வீட்டை மாற்றும்போது எப்படிப் பொருட்கள் உடையாமல் எடுத்துச்செல்வது என்பதுதான் பலரது கவலையாக இருக்கும். வீட்டின் பொருட்களை பாதுகாப்பாகப் புது வீட்டுக்கு மாற்றுவதற்கான வழிகள்…

சரியான அளவில் பெட்டிகள்

எல்லாப் பொருட்களையும் ஒரே அளவிலான பெட்டியில் அடுக்க முடியாது. அதனால் பலவகையான அளவுகளில் அட்டைப் பெட்டிகளை வாங்கிவைத்துக் கொள்வது நல்லது. இதற்காக மளிகை பொருட்கள் வைக்கும் பெட்டிகளைப் பயன்படுத்தினாலும் சில எடை அதிகமுள்ள பொருட்களை அடுக்குவதற்குப் பிரத்யேகமான அட்டை பெட்டிகளை வாங்கிப் பயன்படுத்துவது சிறந்தது. சரியான அளவு பெட்டிகளை அடையாளம்கண்டு பொருட்களை அடுக்கும்போது பல பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

அப்படியே அடுக்கலாம்

எல்லாப் பொருட்களையும் காலிசெய்து பெட்டியில் அடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலப் பொருட்களை அப்படியே காலிசெய்யாமல் மாற்றலாம். எடைஅதிகம் இல்லாவிட்டால் கோப்புகள், முக்கிய ஆவணங்கள் போன்றவற்றைக் காலிசெய்யாமல் அலமாரியுடன் அப்படியே மாற்றலாம். ஆனால், அலமாரியைச் சரியாகப் பூட்டிவைப்பது முக்கியம். இதன்மூலம் புது வீட்டுக்கு மாறியவுடன் கோப்புகள், ஆவணங்களைத் தேடுவதைத் தவிர்க்கலாம்.

அறைக்கலன்களைப் பிரித்துவிடலாம்

வீட்டில் பிரித்து எடுத்துச்செல்லும் வசதியுடன் இருக்கும் அறைக்கலன்களைப் பிரித்து எடுத்துச்செல்வது வசதியாக இருக்கும். கட்டில், மர அலமாரி, சோஃபா போன்றவற்றைப் பிரித்து பகுதிகளாகப் புது வீட்டுக்கு எடுத்துச்செல்வது இன்னும் சுலபமானதாக இருக்கும்.

அறைக்கு ஏற்றமாதிரி அடுக்க வேண்டாம்

ஒவ்வோர் அறைக்கும் ஏற்றமாதிரி பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அடுக்குவது என்பது சரியானதாகத் தோன்றினாலும் அது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. அதனால், அறையை மறந்துவிட்டுப் பொருட்களுக்கு ஏற்றவகையில் அவற்றைப் பெட்டியில் அடுக்குவதுதான் சரியானதாக இருக்கும். இது புது வீட்டுக்குச் சென்றவுடன் பொருட்களைப் பிரித்து அடுக்குவதை எளிமையாக்கும்.

ஒரே நாளில் அடுக்க முடியாது

வீடு மாற்றும்போது எல்லாப் பொருட்களையும் நிச்சயமாக ஒரே நாளில் எடுத்து வைக்கமுடியாது. அதனால், வீடு மாற்றுவதற்குப் பத்து நாட்களுக்குமுன், ஒவ்வொரு நாளும் ஒரு வகையான பொருட்களை அடுக்குவதை வழக்கமாக வைத்துக்கொள்வது சிறந்தது. எந்தெந்தப் பொருட்களைப் பெட்டிகளில் பாதுகாப்பாக அடுக்கிவைத்துவிட்டீர்கள் என்பதைக் குறித்துவைத்துக் கொள்வது நல்லது.

விவரப் பட்டியல் தயாரிக்கலாம்

பெட்டிகளின் மேல் எந்தெந்த பொருட்களை எந்தெந்தப் பெட்டிகளில் அடுக்கிவைத்திருக்கிறீர்கள் என்பதை எளிமையாக்க அந்தப் பெட்டிகளின்மேல் விவரக் குறிப்பை எழுதிவைப்பது சிறந்தது. அதில் பொதுவான பெயர்களைக் குறிப்பிடாமல் விவரங்களுடன் குறிப்பிடுவது நல்லது. உதாரணமாக, பெட்டியின்மேல் பொதுவாக ‘துணிகள்’ என்று எழுதாமல் யாரது துணிகள் என்ற குறிப்புடன் எழுதிவைப்பது பொருத்தமானதாக இருக்கும். இது புது வீட்டுக்குச் சென்றவுடன் குழப்பமில்லாமல் பொருட்களை அடுக்கிவைக்க உதவும். இன்னும்சொல்லப்போனால், மொத்தம் எத்தனை பெட்டிகள் இருக்கின்றன என்பதைப் பட்டியிலிட்டு வைத்துக்கொள்வது சிறந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x