Last Updated : 21 Oct, 2018 03:26 PM

 

Published : 21 Oct 2018 03:26 PM
Last Updated : 21 Oct 2018 03:26 PM

முகங்கள்: எதுவும் இங்கே தடையில்லை

வாழ்க்கையையில் எதிர்ப்படுகிற சிறு சிறு பிரச்சினைகளுக்கே சிலர் சோர்ந்துவிடுவார்கள். ஆனால், தினசரி வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் நிலையிலும் துணிவுடன் அதைச் சமாளித்து, சாதித்துவருகிறார் அனிதா. தன் உடல் குறைபாட்டைக் காரணம்காட்டி இவர் முடங்கிவிடவில்லை. முட்டி மோதி ஜெயித்திருக்கிறார். போலியாவால் பாதிக்கப்பட்டாலும் கார் ஓட்டும் உரிமத்தைப் பெற வேண்டும் என்ற விருப்பத்தைப் போராடி நிறைவேற்றியுள்ளார் அனிதா.

புதுச்சேரி பங்கூரைச் சேர்ந்த அனிதா,  பி.எஸ்.என்.எல். மேட்டுப்பாளையம் கிளை துணைக்கோட்டப் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார். பிறந்தபோது எந்தக் குறைபாடும் இல்லாத இவருக்கு ஒரு வயதானபோது போலியோ பாதிப்பு ஏற்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன.

பெண்பிள்ளைதானே என்று அவரை வீட்டிலேயே பூட்டிவைக்காமல் அவருடைய பெற்றோர், எல்லாரும் படிக்கிற பொதுப்பள்ளியில் சேர்த்தனர். அனிதா ஒன்பதாம் வகுப்பு படித்தபோது வார இதழ்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். கும்பகோணத்தில் போலியோவுக்குச் சிகிச்சை தருவதாக ஒரு வார இதழில் படித்தார். அதைப் பெற்றோரிடம் சொல்ல, கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு முடித்தார்.

பிளஸ் ஒன் சேர்ந்தபோது அனிதாவால் அறிவியல் செய்முறையைச் செய்ய முடியாது எனப் பலரும் சொல்ல, போராட்டத்துக்குப் பிறகு கண்ணகி அரசுப் பள்ளியில்  படித்தார். பள்ளி நாட்களில் பல்வேறு  போட்டிகளில் பங்கேற்றார். பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளி அளவில் இரண்டாவது இடம் பிடித்தார். பின்னர் புதுச்சேரி அரசுப் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்ந்தேன். அதை முடித்துவிட்டு பி.எஸ்.என்.எல். தேர்வு எழுதி, பொறியாளர் பணியில் சேர்ந்தார்.

“உடனே திருமணமும் ஆகிடுச்சு. பிறகு எம்.பி.ஏ. படிச்சேன். முதல்ல அசாம்லதான் போஸ்டிங் போட்டாங்க. அப்புறம் புதுச்சேரி, இப்ப மேட்டுப்பாளையம். கணவர், இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியா இருக்கேன்” என்று சொல்லும் அனிதாவுக்கு, திருமணத்துக்குப் பிறகு கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

நிறைவேறிய கனவு

எப்படி கார் வாங்குவது, யாரிடம் கற்றுக்கொள்வது எனப் பல கேள்விகள் அவருக்குள் எழுந்தன. பிறகு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த வீடியோக்களைப் பார்த்து கார் ஓட்டும் வழிமுறையைத் தெரிந்துகொண்டார்.

“அப்புறம் கார் வாங்கி அதைச் சென்னையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தில் கைகளால் இயக்கக்கூடிய பிரேக், ஆக்சிலரேட்டர் பொருத்தி கார் ஓட்டப் பழகினேன். லைசென்ஸ் வாங்க உடல்தகுதிச் சான்றிதழ் அவசியம். புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, மாற்றுத்திறனாளிக்கு ஃபிட்னஸ் சான்றிதழ் அளிக்கும் வழக்கம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் சென்னையில ஒரு அரசு மருத்துவமனையில ஃபிட்னஸ் சான்றிதழ் பெற்றேன்.

புதுச்சேரி போக்குவரத்துத் துறையில கார் ஓட்டி ஓட்டுநர் உரிமம் பெற்றேன். இங்கு கார் ஓட்டும் உரிமம் பெற்ற முதல் மாற்றுத்திறனாளிப் பெண் நான்தான் என நினைக்கிறேன்” என்று சொல்லும் அனிதா தன்னைப் போல இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏதாவது செய்ய நினைத்தார். அதையொட்டி யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, மாற்றுத்திறனாளிகள் கார் ஓட்டும் பயிற்சி பெறுவது எப்படி என்பது குறித்த வீடியோக்களைப் பதிவேற்றினார்.

mugangal-2jpg

“என்னைப் பார்த்து மேலும் ரெண்டு பேர் ஓட்டுநர் உரிமம் வாங்கியிருக்காங்க. இப்ப வீல் சேர் பயன்படுத்துவது எப்படின்னு யூடியூப்ல விளக்கம் தந்துட்டு இருக்கேன்” என்கிறார் அனிதா.

பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், மகளிர் விழாக்களில் பங்கேற்று வாழ்க்கை மேம்பாடு குறித்துப் பேசிவருகிறார். “உடம்புல ஊனம் இருக்குன்னு என்னை நான் எப்பவுமே குறைவா நினைச்சதில்ல. உடல் வலிமை இல்லன்னாலும் மன வலிமை அதிகமா இருக்கு.

நம்மைப் பற்றி அடுத்தவங்க சொல்லும் விமர்சனங்களைக் காதிலேயே வாங்கக் கூடாது. அதைப் புறந்தள்ளிவிட்டு நம்முடைய முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கணும். அப்பத்தான் வாழ்க்கையில முன்னேற முடியும்” என்கிறார் இந்தத் தன்னம்பிக்கைப் பெண்மணி.

தொடரும் விருதுகள்

ஒரு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டுத் தன் இரு கால்களின் செயல்பாட்டையும் இழந்துவிட்டாலும் தன்னம்பிக்கை, விடா முயற்சி போன்றவற்றை ஊன்றுகோலாய்ப் பற்றிக்கொண்டு இருசக்கர வாகனம் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனத்தையும் திறமையாக ஓட்டுகிறார் அனிதா.

பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் கார் ஓட்டும் உரிமம் பெற்ற அனிதா, பிற மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு உத்வேகமூட்டுகிறார். இவருடைய தன்னம்பிக்கையைப் பாராட்டி புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் அனிதாவைக் கவுரவித்துள்ளனர்.

சிகரம் அமைப்பு சார்பில் சிகரம் தொட்ட மகளிர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்கள் பல அனிதாவை வாழ்த்தி பரிசு, சான்றிதழ்களைக் கொடுத்துள்ளன. நம்பிக்கை ஒன்றையே ஆதாரமாகக்கொண்டு வாழ்க்கை எனும் பயணத்தில் பல படிகளைத் தாண்டி வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் அனிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x