Published : 12 Oct 2018 11:30 AM
Last Updated : 12 Oct 2018 11:30 AM

இசை வேளை: காதல் ரசம் சொட்ட மயக்கும் ராகம்

சமீபத்திய வெள்ளத்துக்குப் பிறகு கேரளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் 'தீவண்டி'. இந்தப் படத்தின் ‘ஓப்பனிங்’, வெற்றி இரண்டுக்கும் வழியமைத்துக் கொடுத்தது ஒரு பாடல். ஒரு படம் ரசிகர்களைச் சட்டென்று கவர்வதற்கு, படம் வெளியாகும் முன்பே பிரபலமடையும் ஒரு பாடல் தேவைப்படுகிறது. அவை ‘சென்சேஷன்’ ஆகிவிட்டாலோ ரொம்ப வசதி. பொதுவாக குத்துப் பாடல்கள், ‘பீட்’ பாடல்கள்தான் படம் குறித்த ஆர்வத்தைக் கிளறுபவையாக அமைகின்றன. ஆனால், எல்லாப் படங்களுக்கும் 'ஜிமிக்கிக் கம்மல்' போன்ற உலக பிரசித்தம் அடையும் பாடல்கள் கிடைத்துவிடுவதில்லை.

நம் எல்லோருக்கும் சுகமான இசை, அது நம் மனதுக்குத் தரும் இதம், ஆற்றுப்படுத்தும் உணர்வு போன்ற எல்லாமே தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மெலடி பாடல்கள் காலங்களைக் கடந்தும், ஓடாத படங்களைக் கடந்தும் கேட்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கான காரணம் மேற்கண்ட அம்சங்கள்தாம். அப்படிப்பட்ட இனிமையான மெட்டு, பின்னணி இசைச் சேர்ப்புடன் வெளியாகி, 'தீவண்டி' படத்துக்கு மிகப் பெரிய பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது 'ஜீவாம்சமாய்' என்ற மெலடிப் பாடல்.

கேட்கக் கேட்கச் சலிக்காத இந்தப் பாடல், 'ரீதிகௌளை' என்ற கர்னாடக ராகப் பின்னணியைக் கொண்டது. இசை கைலாஸ், எழுதியவர் பிரபல மலையாளப் பாடலாசிரியர் ஹரிநாராயணன். பாடியவர்கள் ஷ்ரேயா கோஷலும் புதிய பாடகர் ஹரிசங்கரும். ஒரு பாடல் மிகப் பெரிய ஹிட் ஆவதில் இசையமைப்பாளரைத் தாண்டிப் பாடுபவர்கள், பாடலின் வரிகள் எனப் பல அம்சங்கள் பங்களிக்கின்றன. இந்தப் பாடல் அதற்குச் சிறந்த உதாரணம்.

‘ஜீவாம்சமாய்' பாடலின் மலையாள வரிகள் புரியவில்லையே என்ற கவலை தேவையில்லை. இன்றைய மலையாளப் பாடல்கள் பெருமளவு தமிழைப் போலவே ஒலிக்கின்றன. இந்தப் பாடலின் வரிகளில் மிளிரும் கவித்துவத்தை, காட்சிகள் முழுமையாகப் பிரதிபலிப்பதாகச் சொல்ல முடியாது. அதேநேரம், யதார்த்த வாழ்வின் ஊடாகப் பாடலும் காட்சிகளும் சிறப்பாகப் பிணைக்கப்பட்டுள்ளன. காட்சிகள் சின்னச் சின்ன சுவாரசியங்களுடன் அமைந்துள்ளன.

அழைத்துக்கொண்டே இருக்கும் கண்ணன்

இந்தப் பாடலைக் கேட்டவுடன் பல பாடல்கள் ஞாபக நதியில் கிளைத்து எழலாம். அவற்றில் முதலாவது பாடலாக இளையராஜா இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ இருக்கலாம். காரணம், ரீதிகௌளை ராகத்தைத் திரையிசையில் பிரபலப்படுத்திய முதன்மையான பாடல் அது. 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் வெளியாகி 40 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், மீண்டும் மீண்டும் பல மேடைகள், பல பாடல் போட்டிகளில் பாடப்படுவதாக இருக்கிறது. அதற்குப் பிறகு இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் மீண்டும் மீண்டும் ஹிட் ஆகிக்கொண்டே உள்ளன.

‘சின்னக் கண்ணன்‘ பாடலுக்குச் சமர்ப்பணம்போல் ‘சுப்ரமணியபுரம்’ (2008) படத்துக்காக, ஜேம்ஸ் வசந்தன் இசையில் 'கண்கள் இரண்டால்' பாடல் அமைந்தது. இன்றைக்கு 'தீவண்டி'க்கு 'ஜீவாம்சமாய்' உதவிக்கொண்டிருப்பதைப் போலவே, அன்றைக்கு 'கண்கள் இரண்டால்' மிகப் பெரிய ஹிட் ஆகி, ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்து வந்தது. 'ஜீவாம்சமாய்' வரிகளைப் போலவே பாடலாசிரியர் தாமரையின் 'கண்கள் இரண்டால்' பாடல் வரிகளும் எளிமையும் அழகும் பொருந்தி இருந்ததுடன், பலரும் முணுமுணுக்கக் கூடியவையாக மாறியிருந்தன.

மெட்டு அடிப்படையில் 'ஜீவாம்சமாய்' பாடலுக்கு இணையாக ‘கண்கள் இரண்டால்’ அமைந்தாலும், பாடல் வரிகள் அடிப்படையில் வேறொரு தமிழ் பாடலை அதற்கு ஒப்புமையாகக் கூறலாம். 'மே மாதம்' படத்தில் இடம்பெற்ற 'என் மேல் விழுந்த மழைத்துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?' (வைரமுத்து) என்ற வரிகளே அவை. காதலன் - காதலி மாறி மாறி 'இத்தனை நாளாய் எங்கே இருந்தாய்?' எனக் கேள்வி கேட்டுக்கொள்வதுபோல, 'என் மேல்' பாடல் அமைந்திருக்கிறது. அந்தக் கேள்விகளுக்கு பதில்போல 'எனக்குள் கலந்துவிட்டாய், என்னை மாற்றிவிட்டாய்' என்று 'ஜீவாம்சமாய்' பாடல் அமைந்திருக்கிறது.

மயக்கும் ஆற்றல்

இப்படி ரீதிகௌளையில் அமைந்த பெரும்பாலான பாடல்கள் ஹிட் ஆகியிருக்கும் அதேநேரம், ராகத்தைத் தாண்டி இந்தப் பாடல்களில் பல ஒற்றுமைகளைக் கவனிக்க முடியும். பெரும்பாலானவை காதல் பாடல்கள். பாடியவர்களில் பெரும்பாலானவர்கள் கர்னாடக இசையில் சாதித்தவர்கள் அல்லது குறைந்தபட்சம் சாஸ்திரிய இசையைக் கற்றவர்கள். இந்தப் பாடல்களில் அழுத்தமான சாஸ்திரிய கருவியிசை பயன்படுத்தப்பட்டிருப்பதையும் உணரலாம். மொத்தத்தில் நம் மனங்களை லேசாக்கி வானில் பறக்க வைக்கும் திறனை இந்தப் பாடல்கள் கொண்டிருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக ரீதிகௌளை ராகமே நம்மை மயக்கிக் கட்டிப் போட்டு விடுகிறது. அதற்குக் காரணம் அந்த ராகம் கொண்டிருக்கும் தனித்துவமான மயக்கும் ஆற்றல். சாஸ்திரிய இசையில் கருணை, பக்தி ரசங்களின் பிரதிபலிப்பாக இந்த ராகம் கருதப்படுகிறது. அதேநேரம் ஆகப் பெரிய பக்தி, கருணையின் வடிவமான காதலைச் சொல்ல திரையிசையமைப்பாளர்கள் இந்த ராகத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது.

‘ரீதிகௌளை’ பாடல்கள்

‘ரீதிகௌளை‘ ராகத்தில் பல பாடல்களை அமைத்துள்ள இளையராஜா, ஒவ்வொரு பாடலும் தனித்துவமாகத் தோன்றுவதுபோலத் தந்திருக்கிறார். இந்த ராகத்தில் அமைந்த பல திரைப்பாடல்களை குறிப்பிட்டு பாடகி சாருலதா மணி எழுதியுள்ளார். அந்தப் பாடல்கள்:

சின்னக் கண்ணன் அழைக்கிறான் – ‘கவிக்குயில்’ (இளையராஜா - பால முரளி கிருஷ்ணா)

தலையைக் குனியும் தாமரையே – ‘ஒரு ஓடை நதியாகிறது’ (இளையராஜா - எஸ்.பி.பி., எஸ். ராஜேஸ்வரி)

ராமன் கதை கேளுங்கள் – ‘சிப்பிக்குள் முத்து’ (இளையராஜா -  எஸ்.பி.பி., எஸ்.பி. ஷைலஜா)

அழகான ராட்சஸியே – ‘முதல்வன்’ (ஏ.ஆர்.ரஹ்மான் -

எஸ்.பி.பி., ஹரிணி)

தீண்டத் தீண்ட – ‘துள்ளுவதோ இளமை’ (யுவன் சங்கர் ராஜா - உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ)

சுடும் நிலவு சுடாத சூரியன் – ‘தம்பி’ (வித்யா சாகர் - உன்னிகிருஷ்ணன், ஹரிணி)

காதல் நெருப்பின் நடனம் – ‘வெயில்’ (ஜி.வி. பிரகாஷ் - கார்த்திக், சின்மயி)

கண்கள் இரண்டால் – ‘சுப்ரமணியபுரம்’ (ஜேம்ஸ் வசந்தன் - பெல்லி ராஜ், தீபா மரியம்)

- தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x