Last Updated : 14 Oct, 2018 09:21 AM

 

Published : 14 Oct 2018 09:21 AM
Last Updated : 14 Oct 2018 09:21 AM

வண்ணங்கள் ஏழு 26: ஆதரவற்றவர்களை அரவணைக்கும் நூரி!

தாயின் அன்பு, தந்தையின் பாராட்டு, உற்றார் உறவினரின் சீராட்டு என எதுவுமே கிடைத்ததில்லை நூரிக்கு. ஆனால், தன் அன்பைப் பொதுச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அவர் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளை இவரது எஸ்ஐபி நினைவு அறக்கட்டளை பாதுகாக்கிறது. இவர்களில் பலர் உயர் கல்வி பயில்கின்றனர். உறவினர்களின் பாதுகாப்பில் இருக்கும் இதுபோன்ற 100 குழந்தைகளை இந்த அறக்கட்டளை பராமரிக்கிறது.

சிற்றன்னையின் கொடுமை, தந்தையின் கண்டிப்பு, உறவினர்களின் கேலிப் பேச்சு, திருநங்கை சமூகத்தினர் இவர் மீது காட்டிய பரிவு, காதல், மகிழ்ச்சி, சோகம், தியாகம், கோபம், போராட்டம் என விரியும் இவரது வாழ்க்கையைத் திரைப்படமாக்கினால், இரண்டு இடைவேளை விடும் அளவுக்கு நீண்டதாக இருக்கும். அவரது இந்தப் பயணம் அவருடைய குழந்தைகளைச் சொந்தக் கட்டிடத்தில் தங்கவைக்கும் இலக்கை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது.

பூர்வீகம் ராமநாதபுரம் என்றாலும் நூரி பிறந்தது சென்னையில். வீட்டின் இரண்டாவது பிள்ளை இவர். அப்பா, ஜானி சலீம். அம்மா இறந்துவிட்டார். வீட்டில் மாற்றாந்தாய்க் கொடுமையோடு தன் உடலில் ஏற்பட்ட மாறுதல்களும் நூரியை வதைத்தன. “ஊர்ல அப்பாவுக்குப் பெரிய பேர் இருந்தது.

பெரிய தலைகட்டு மரியாதைக்கு உரிய குடும்பமா இருந்தது. என்னோட நடை, உடை, பாவனைகளைச் சுட்டிக்காட்டி என் தந்தையிடம் பலர், ‘என்ன பாய் உங்க பையன் இப்பிடி இருக்கான். நானா இருந்தா கம்மாயில போட்டு சாவடிச்சிட்டிருப்பேன். விஷத்தைக் கொடுத்திருப்பேன்’ன்னு வீர வசனம் பேசுனாங்க. இதையெல்லாம் கேட்டு அப்பா என்னைத் தினமும் அடிச்சி உதைச்சார். மூணாவது வரைக்கும்தான் படிச்சேன்.

கொடுமை தாங்க முடியாம வீட்டை விட்டு வெளியேறினேன். பிளாட்பாரத்துல தூங்குறது, பேப்பர், பாட்டில் பொறுக்குறது, பிச்சை எடுத்துச் சாப்பிடுறதுன்னு வாழ்க்கை ஓடுச்சி. திருநங்கை சமூகத்துல சேர்ந்தப்போ எனக்கு 18 வயசு. பாதாள பொன்னிக்கோயில் துரையம்மா பொண்ணு நான். என்னுடைய பரிவாரம் பெருசு. 19 வயசுல பாம்பேக்குப் போனேன். அங்கு பத்தாய்க்குப் (நடனம்) போவேன். அப்படியே பாலியல் தொழிலும் செஞ்சேன். மெட்ராஸுக்குத் திரும்பியபோது, 38 ஆயிரம் ரூபாய் இருந்தது. காளஸ்தி விஜயாம்மாதான் அறுவை சிகிச்சை செஞ்சாங்க.

மெட்ராஸ்ல சத்யா நகர் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் இருந்தேன். அந்தப் பகுதியில் இருந்த  ராணுவ வீரரோட சேர்ந்து கணவன் - மனைவியா வாழ்ந்தோம். அப்போதே எனக்குச் சமூக சேவையில் ஈடுபாடு அதிகம். அந்தப் பகுதியில் பாலியல் தொழில் செய்துவந்தவர்களைப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வைத்தேன். 1987-ல் நானும் ரத்தப் பரிசோதனை செய்தேன்.

அப்பதான் எனக்கு எச்ஐவி இருப்பது தெரிந்தது. டாக்டர் சுனிதி சாலமன், டாக்டர் உஷா ராகவன் போன்றவர்கள் இருந்தாங்க. டாக்டர் உஷா ராகவன் அவருக்கு உதவியாளராக என்னைச் சேர்த்துக்கொண்டு, மாதம் 750 ரூபாய் கொடுத்தாங்க. என் கணவரிடம் உண்மையைச் சொன்னேன். அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அவருக்கு எச்.ஐ.வி. பரவவில்லை.

அவரோட போதாத நேரம், ஸ்ரீநகரில் நடந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் அவர் இறந்துட்டார்” என்று சொல்லும் நூரியின் வாழ்க்கையில் அதன் பின் நிறைய ஏற்ற, இறக்கங்கள் வந்தன.

1992-ல் கம்யூனிட்டி ஆக்‌ஷன் நெட்வொர்க் தன்னார்வ அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் நிறுவனர்களிடம் டாக்டர் உஷா, நூரியை அறிமுகப்படுத்தினார். பாலியல் தொழில் செய்பவர்களுக்கு அந்த அமைப்பு சார்பில் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு அளிப்பதோடு, அவர்களுக்கு ஆணுறை அளிக்கும் பணியில் 1993 முதல் 1996வரை நூரி ஈடுபட்டார்.

ஏற்றமும் இறக்கமும்

“சில நாட்களில் அந்தத் திட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பின், டாக்டர் மனோரமாவின் ‘செஸ்’ அமைப்பில் சில காலம் பணிபுரிந்தேன். அது மனத் திருப்தி தரவில்லை. அதனால் வெளியேறி, இந்தியன் பாசிட்டிவ் நெட்வொர்க்கில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று இணைச் செயலாளரானேன்.  அங்கிருந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அங்கிருந்தும் வெளியேறினேன்.

டாக்டர் ஷீலா சாம்பிரசாத் மூலம் எய்ட்ஸ் டெஸ்க் என்ற கிறிஸ்தவ தன்னார்வ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு குறைந்த சம்பளம் என்றாலும் சமூகப் பணியையே முக்கியமாக நினைத்தேன். பொது மருத்துவமனையில் நான் கற்றுக்கொண்ட பல பணிகள் எனக்கு அங்கே கைகொடுத்தன.

2000-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கெடுப்பதற்காக நான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தேன். முதன்முதலாக பாஸ்போர்ட் எடுத்த திருநங்கை நான்தான். நூரி – யுனாக் என்று குறிப்பிட்டு பாஸ்போர்ட் வழங்கினர்” என்கிறார் நூரி.

உதயமானது எஸ்.ஐ.பி.

எல்லா நிறுவனங்களும் நூரியின் உழைப்பைச் சுரண்டுவதாகவே இருக்க, டாக்டர் ஜோசப் வில்லியம்ஸ் நூரியை ஒரு தன்னார்வ நிறுவனத்தைத் தொடங்கச் சொன்னார். அப்படி உருவானதுதான் ‘சவுத் இந்தியா பாசிட்டிவ் நெட்வொர்க்’. மூன்று பணியாளர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இன்று 50-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். “இருட்டில் இருப்பவர்களை வெளிச்சத்துக்கு வரவைப்பதுதான் என் நோக்கம். இங்கே நம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொண்ட பல திருநங்கைகள் எளிய பணிகளைச் செய்துகொண்டு, ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்க்கின்றனர்” என்கிறார் நூரி.

நூரியோடு இணைபிரியாத நண்பர்களாக இருந்த செல்வி, இந்திரா, பழனி ஆகிய மூவரும் இறந்துவிட்டனர். இவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவர்களின் பெயர்களில் இருக்கும் முதல் எழுத்தைக் கொண்டு எஸ்ஐபி (SIP) மெமோரியல் அறக்கட்டளையை 2003-ல் தொடங்கி, அதை எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லமாக்கினார். இல்லம் ஆரம்பித்த அடுத்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 26 நாடுகளுக்கு எச்.ஐ.வி. விழிப்புணர்வுக் கூட்டங்களுக்கு நூரி சென்றிருக்கிறார்.

ஏ.ஆர்.டி. இலவசமானதன் பின்னணி

எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக நூரி உகாண்டாவுக்குச் சென்றபோதுதான், அங்கு எச்.ஐ.வி.க்கு அளிக்கப்படும் மருந்துகளைத் தயாரிக்கும் இந்திய மருத்துவ நிறுவனங்களின் ஃபார்முலாக்கள் விற்கப்பட்டு, எச்.ஐ.விக்கான மருந்துகள் அங்கே தடங்கலின்றி விற்கப்பட்டுவருவது தெரிந்தது. இதை எதிர்த்து அங்கிருக்கும் இந்தியர்களையும் சேர்த்துக்கொண்டு நூரி போராட்டம் நடத்தியிருக்கிறார்.

அன்றைக்கு இந்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலையிட்டு இந்தியாவிலும் ஏஆர்டி மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கான முயற்சிகளை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இதைத் தொடர்ந்துதான் 2005 முதல் ஏஆர்டி மருந்துகள் இலவசமாக இந்தியா முழுவதும் அளிக்கப்பட்டன. இதற்காக முன்முயற்சி எடுத்ததில் நிறைய திருநங்கைகளின் முயற்சியோடு தன்னுடைய பங்கும் இருப்பதாக நூரி சொல்கிறார்.

வாரியம் அமைப்பதற்கு உதவிய கூட்டம்

“மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கிறிஸ்துதாஸ் காந்தி திட்ட இயக்குநராக இருந்தபோது, அங்கு ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட திருநங்கைகளைச் சேர்த்து ஒரு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினேன். இந்தக் கூட்டத்தைப் பார்வையிட ஜூரி உறுப்பினர்கள் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளை அரசின் பார்வைக்கு அளித்தனர்.

அந்தக் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் அப்போதைய தி.மு.க. அரசு திருநங்கைகள் நலவாரியத்தை ஏற்படுத்தியது. இந்த நல வாரியத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் உச்ச நீதிமன்றத்தால் மூன்றாம் பாலினம் எனும் அங்கீகாரம் கிடைத்தது” என்கிறார் நூரி.

உருவெடுக்கும் கட்டிடம்

vannam-2jpg100 

எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக நூரி உகாண்டாவுக்குச் சென்றபோதுதான், இந்திய மருத்துவ நிறுவனங்களின்    ஃபார்முலாக்கள் அங்கு விற்கப்பட்டு, எச்.ஐ.விக்கான மருந்துகள் அங்கே தடங்கலின்றி விற்கப்பட்டுவருவது தெரிந்தது. நூரி சலீம்உருவெடுக்கும் கட்டிடம்

எச்.சி.எல். நிறுவனம், தென்னிந்தியத் திரைப்படச் சங்கம் ஆகியவற்றின் உதவியோடு பலரிடம் பெற்ற நன்கொடையால் சோழவரம் பகுதியில் எஸ்.ஐ.பி. நினைவு அறக்கட்டளை இல்லத்துக்கான நிரந்தரக் கட்டிடத்தை எழுப்பும் முயற்சியில் இருக்கிறார் நூரி. எச்ஐவி பாதிப்பு மற்றும் எய்ட்ஸ் நோயால் இறந்த பெற்றோர்களின் ஆதரவற்ற 45 குழந்தைகளை இந்த அமைப்பில் பராமரிக்கிறார்கள். இவர்களில் பலர் கல்லூரிகளில் படிக்கின்றனர். இவர்களைத் தவிர, உறவினர்களின் பாதுகாப்பில் வாழும் 105 குழந்தைகளுக்கும் உரிய வசதிகளைச் செய்துதருகின்றனர்.

இவர்களுக்கு உதவவும் பார்வையிடவும் www.siphome.org என்ற இணையதளத்துக்குச் செல்லலாம்.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x