Last Updated : 13 Oct, 2018 03:53 PM

 

Published : 13 Oct 2018 03:53 PM
Last Updated : 13 Oct 2018 03:53 PM

காயமே இது மெய்யடா 04: இது ‘கார’க் குளியல்!

ஆம்… நம் தோல் சுவாசிக்கிறது, மறை முகமாக! உள்ளிருந்து வெப்பத்தை வெளியில் கடந்துவதன் மூலமும், உடலில் தேவைக்கு அதிகமாகத் தேங்கியுள்ள உப்பு நீரை வியர்வையாக வெளி யேற்றுவதன் மூலமும் பெருமளவு சுவாசத்துக்குத் துணைபுரிகிறது. 

காற்றைக் கடத்தாத ஒரு பொருளை நம் தோல் மீது சுற்றினால் அந்த இடத்தில் வியர்வை ஆவியாகப் படியும்தானே. வெயில் காலத்தில் சிமெண்ட் அல்லது கிரானைட் தரை சில்லென்று இருப்பதால் வெறுந்தரையில் படுப்போர் உண்டு. அப்படிப் படுத்து எழுகிறபோது நமது தோல், தரையுடன் தொடர்புற்றிருந்த பகுதியில் வியர்வை படிந்திருக்கும் இல்லையா? ஆம்.

வெளியில் மிதமான குளிர்ச் சூழல் நிலவும்போது தோல் எந்த வினையும் புரிவதில்லை. புறத்தில் அதிகமான குளிர் நிலவுமானால், உள்ளிருக்கும் வெப்பத்தைத் தோலின் அடிப்பகுதிக்குக் கொண்டுவந்து புறக் குளிர் உடலைத் தாக்காமல் பாதுகாக்கிறது. வெப்பச் சூழல் நிலவும்போது உள்ளிருந்து நீரை வியர்வையாக வெளியேற்றிப் புற வெப்பம் உடலைத் தாக்காமல் வெளியிலேயே நிறுத்திவிடுகிறது.

சுகாதாரத்துக்குச் சுத்தமான தோல்

மேற்படி வெப்பம் - நீர் இரண்டின் வழியாகவும் உடலுக்கு உள்ளிருக்கும் மிகுதியான காற்றின் ஒரு பகுதி ஒன்று எரிக்கப்படுகிறது அல்லது நீராக்கப்படுகிறது. அந்த வகையில் மறைமுகமான சுவாசத்தை நடத்துகிறது தோல். குளிர் காலத்தில் மேற்பகுதி மிதமான வெப்பத்துடனும், வெயில் காலத்தில் சில்லென்றும் இருப்பதை நம்மால் உணர முடியும்.

வெப்ப மண்டலச் சூழலில் வசிக்கிற நாம், வியர்வைத் துளைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால், சுவாசிக்கிற காற்றின் அளவு அதிகமாக இருக்கும். உடலுக்குத் தேவையான ஆற்றலின் பெரும் பகுதியைக் காற்றின் வழியாகத் தானே பெறுகிறோம்!

எனவே, நுரையீரலின் புற உறுப்பாகிய தோலைச் சுத்தமாக வைத்திருத்தல் உடல் நல மேம்பாட்டில் முக்கியமான பங்கு வகிக்கிறது. சுவையின் அடிப்படையில் தோலுக்கு ஆற்றல் தருவது காரச்சுவை.

நீர்த் திவலைகளுடன் தியானம்

கெட்டியான நார்த்தன்மை உடைய இலைகள் பலவும் காரச்சுவையைத்தான் கொண்டுள்ளன. நாம் பயன்படுத்திப் பழக்கப்பட்ட துளசி, ஓமவல்லி ஆகிய இலைகளை, ஒரு வாளி நீரில் முன்னிரவில் ஊறப் போட்டு, காலையில் குளிக்கும் முன்னர் மேற்படி இலைகளை உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அந்தச் சாற்றினைக் குளிக்கிற நீருடன் கலந்துவிட்டுச் சக்கையை எறிந்துவிட வேண்டும்.

மேற்படி சாறு கலந்த நீரை, உச்சி முதல் உள்ளங்கால்வரை நிதானமாக ஊற்றி ஒருமுறை அழுத்தாமல் தேய்த்துவிட்டு, மீண்டும் ஒருமுறை ஊற்றிக்கொள்ள வேண்டும். நீர் காலியானதும் அவசர அவசரமாகத் துவட்ட வேண்டாம். தோலில் படிந்திருக்கும் நீர்த் திவலைகளுடன் அப்படியே ஐந்து நிமிடம் அமர்ந்திருங்கள்.

இந்த ஐந்து நிமிடத்தில் இன்றைக்கு நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிடலாம். அதைவிடச் சிறப்பு,  திவலை கட்டிய நீரில் கரைந்த சுவை உள்நோக்கி ஈர்க்கப்படுவதைக் கவனித்துக்கொண்டிருப்பது. காரச் சுவை, உள்நோக்கி ஈர்க்கப்படும்போது துளசி, ஓமவல்லி இலைகளின் சுவை நாவில் ஏறுவதையும், சுவாசப் பாதை இலகுவாவதையும் நம்மால் உணர முடியும்.

வெப்பத்துக்கு வேப்பிலைக் குளியல்

தோலின் வழியாகக் காரத்தை அவ்வப்போதைய தேவைக்கு ஏற்ப குறைவான அளவில் மட்டுமே உடல் ஈர்த்துக்கொள்ளும். ஆனால், நாம் உணவின் வழியாக உள்நோக்கிச் செலுத்தும்போது, பிற சுவைகளுடன் சேர்த்து நம்மை அறியாமலே உடலின் தேவைக்கு மிகுதியாக எடுத்துவிடுகிறோம். அவ்வாறு எடுக்கப்படும் மிகைக் காரம் சிறுநீர், வியர்வை போன்றவற்றுடன் வெளியேறும்.

உண்பதற்கு மாறாகக் குளியலில் சேரும் மிதமான காரச் சுவையை, தோல் எனும் பரந்த, நுண்ணுணர்வு மிகுந்த உறுப்பு உடலின் அவ்வப்போதைய தேவைக்கு ஏற்ப குறைவாகவே ஈர்க்கும்.

உடலில் வெப்பம் மிகுந்து, கண்ணில் இளம் மஞ்சளில் பீழைப் பூக்கும் சமயத்தில் பெரியவர்கள் ஆனாலும் சரி, குழந்தைகள் ஆனாலும் சரி வேப்பம் இலைகளை, ஓம-துளசி இலைகளுக்குப் பதிலாக நீரில் சேர்த்துக் குளிக்கலாம்.

இந்தக் குளியல் முடிந்தவுடன் உடலெங்கும் குளிர்ச்சி பரவுவதை, கண்களின் பார்வை முன்னிலும் பளிச்சென்று மாறுவதை, தெளிவாக உணர முடியும். ஆனால், வேப்பிலைக் குளியலைத் தொடர்ச்சியாக மேற்கொண்டால் உடலின் வெப்பச் சமநிலை குலைந்து, இயல்புக்கு முரணாக உடல் விரைக்கும் ஆபத்து உண்டு. எனவே, எச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் இதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அம்மை கண்டவர்களுக்கு நீரில் வேப்பிலையை ஊறவிட்டுத் தண்ணி ஊற்றும் வழக்கம் நாம் அறிந்ததுதானே. பெண்கள் கார மஞ்சளை அரைத்துத் தேய்த்து, மேனிக்குப் பளபளப்பு ஏற்றும் வழக்கம் அருகி வரும் காலத்தில் உடலுக்கு நன்மை செய்கிற, தோலுக்குப் பதத்தன்மை அளிக்கிற மேலும் சில குளியல் முறைகள் குறித்துத் தொடர்ந்து பார்க்கலாம். நாம் இங்கே பேசும் குளியல்முறை காரிய‘கார’ சாத்தியமாகவே இருக்கும்.

(தொடரும்)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x