Published : 17 Aug 2018 11:06 AM
Last Updated : 17 Aug 2018 11:06 AM

திரைப்பள்ளி 15: ‘நாயக’னின் அசலான ‘ஆக்‌ஷன்’!

“தனித் தனியே, நாம் அனைவரும் முற்றிலும் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள்” என்கிறார் திரைக்கதை மேதை சித் ஃபீல்ட். சில குணங்கள் எல்லோருக்கும் பொதுவானவைதான். ஆனால், செயல்களை வைத்தே நமது குண இயல்புகளை பிறர் எடைபோடுகிறார்கள். நமது குணத்துக்கு ஏற்ப நம் மீதான சக மனிதர்களின் அணுகுமுறை மாறுபடுகிறது.

வாழ்க்கையின் இந்த யதார்த்தம், வாழ்க்கையின் பிரதிபலிப்பாக எழுதப்படும் புனைவுக் கதாபாத்திரங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்திப்போகிறது. அதனால்தான் திரையில் நாம் காணும் கதாபாத்திரங்களுடன் நம்மால் ஒன்ற முடிகிறது.

நாம் நிஜ வாழ்வில் அருகிருந்து காண முடியாமல், ஆனால் கேள்விப்படும் கதாபாத்திரங்கள் திரையில் வரும்போது நமது ஆவல் அதிகரிக்கிறது. செய்ய நினைத்தும், நம்மால் எதுவும் செய்ய முடியாத சாமானியனாக வாய்பொத்தி கூட்டத்தில் ஒருவனாகக் கடந்துசென்றுவிடுகிறோம். நாம் செய்ய நினைத்த செயலை ‘தனியொரு’ கதாபாத்திரம் திரையில் துணிந்து செய்யும்போது அது அந்தக் கதாபாத்திரத்தின் காவியச் செயலாக மாறுகிறது.

இந்த இடத்தில்தான் ஹீரோயிசம் பிறந்துவிடுகிறது. சாகசம் கைதட்டல் பெறுகிறது. வாழ்க்கையில் செயலே எல்லாமுமாக இருப்பதுபோல் திரைக்கதையிலும் கதாபாத்திரங்களின் செயலே அவற்றின் வெற்றி அல்லது வீழ்ச்சியைத் தீர்மானிக்கிறது. திரையில் செயல் இல்லாமல் கதாபாத்திரம் இல்லை. செயல்படாத எந்தக் கதாபாத்திரமும் திரைக்கதைக்குத் தேவைப்படுவதில்லை.

ஆக்ஷன் என்பதே ஆக்ஸிஜன்

ஆக ஒரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியராக நீங்கள் மாற விரும்பினால் குறைந்தது உங்கள் முதன்மைக் கதாபாத்திரத்தின் முக்கிய செயல் (Action of the Protagonist) என்ன, அந்தச் செயல் எதை நோக்கிப் பயணிக்கப்போகிறது என்ற அம்சம் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கதாபாத்திரத்தை எப்படி வடிவமைக்கலாம் என்பதைப் பற்றிய தெளிவு பிறக்கும். அப்போதுதான் முதன்மைக் கதாபாத்திரத்தின் செயலை அறிந்து அதை முறியடிக்கும் எதிர்செயலில் (Action of the Antagonist) எதிர்மறைக் கதாபாத்திரத்தை வடிவமைக்க முடியும்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களின் செயல்களும் முடிவு செய்யப்பட்டுவிட்டால், இவ்விரு கதாபாத்திரங்களின் உலகில், அவர்களைச் சார்ந்தும் விலகியும் இயங்கும் துணைக் கதாபாத்திரங்களை (Supporting characters) உருவாக்க முடியும். இப்படி கதாபாத்திரங்களுக்கு இடையில் நிகழும் திடமான செயல்கள் இருந்தால்தான் எந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது எனப் பார்வையாளரின் மனதில் தோன்றும் கேள்விகளுக்குக் காட்சி வடிவில் பதில் கூற முடியும். எனவே உங்கள் கதாபாத்திரங்களின் செயல் எனப்படும் ஆக் ஷன்தான் அந்தக் கதாபாத்திரங்களை கதையில் சர்வைவ் செய்வதற்கான ஆக்ஸிஜனாக இயக்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சில வரிகளில் ஆக்ஷன்

இங்கே ஆக் ஷன் என்று குறிப்பிடுவதை கதாநாயகன் செய்யும் சண்டை எனப் புரிந்துகொண்டுவிடாதீர்கள். அது செயலின் ஒரு சிறு பகுதி அவ்வளவே. ஆனால் நாயகன், நாயகி அல்லது வில்லன் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு அந்தக் கதாபாத்திரங்களின் எதிர்வினை, சமாளிப்பு, தற்காப்பு, ஆகியவற்றில்தான் உண்மையான ஆக் ஷன் மறைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

கதாநாயகனின் புத்திசாலித்தனமான ஒரு புன்னகையில்கூட ஆக் ஷனின் ஒரு சிறு துளி அர்த்தபூர்வமாக வெளிப்படலாம். ஒரு துணைக் கதாபாத்திரத்தின் சில வார்த்தைகள் முதன்மைக் கதாபாத்திரத்துக்கான ஆக்‌ஷனைத் தூண்டிவிடலாம். உங்கள் கதாபாத்திரத்திடம் வலுவான ஆக் ஷன் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அதை சில வரிகளில் எழுதிப்பாருங்கள்.

உதாரணத்துக்குத் தமிழின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றாகிய ‘நாயக’னின் முதன்மை கதாபாத்திரமாகிய வேலு நாயக்கரின் ஆக் ஷனை சில வரிகளுக்குள் அடக்கிப் பார்ப்போம்.

தூத்துக்குடியில் ஒரு கொலையைச் செய்துவிட்டு பம்பாய் நகருக்கு ஓடிவருகிறான் சிறுவன் வேலு. அங்கே சாமானிய விளிம்புநிலை மக்கள் வாழும் பின்தங்கிய பகுதியான தாராவியில் அவனுக்கு அடைக்கலம் கிடைக்கிறது. காலப்போக்கில் அவனது செயல்களால் அந்தப் பகுதி மக்கள் மதிக்கும் தலைவனாக அவன் எப்படி உருவெடுக்கிறான் என்பதும் இறுதியில் அவனது செயல்களின் ஒரு பகுதியாகத் தேர்ந்துகொண்ட வாழ்க்கைப் பாதைக்கு அவன் எதை விலையாகக் கொடுக்க வேண்டி வந்தது என்பதையும் படம் பேசியது.

தனது சொந்த ஊரைவிட்டுத் தப்பித்து ஓடிவர வேண்டிய நிர்பந்தம் சிறுவன் வேலு கதாபாத்திரத்துக்கு உருவாக அவன் செய்த கொலை எனும் ஆக் ஷன் காரணமாக அமைந்துவிடுகிறது. பின்னர் பம்பாயின் தராவியில் பாய் எனும் துணைக் கதாபாத்திரம் அடைக்கலமும் வழிகாட்டுதலும் தருகிறது. அவரை காட் ஃபாதராக ஏற்று அவரது நிழலில் வளர்கிறான்.

இந்த இடத்தில் அடைக்கலம் தரும் பாய் கதாபாத்திரம் "நாலு பேருக்கு நல்லது செய்யனும்ன்னா, எதுவும் தப்பில்லை” என்று தனது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறது. அந்த வார்த்தைகள் உருவாக்கும் ஆக் ஷன், கடத்தல் தொழில் மீது வேலுவுக்கு இருந்த குற்ற உணர்வை முற்றாகக் களைந்தெறிந்து அதில் முழுவீச்சில் ஈடுபடத் தூண்டிவிடுகிறது.

ஏற்றமும் இறக்கமும்

வளர்ந்து இளைஞனான பிறகு ஒரு தருணத்தில் தனது காட்ஃபாதருக்காக செய்யும் கடத்தல் தொழிலில், வழக்கத்தை மீறி வேலு துணிவுடன் கோரும் கூடுதல் கூலியும் அதற்காக அவன் செய்யும் செயலும் பாயின் உயிருக்கே உலை வைத்துவிடுகிறது. தனது காட்ஃபாதரின் இறப்பு கொலை என அறியும் வேலுவின் தார்மீகக் கோபம் எனும் ஆக் ஷன், பாயைக் கொலை செய்த போலீஸ்காரனைக் கொல்லும் நிலைக்கு வேலுவைத் தள்ளுகிறது.

அந்தக் கொலை உருவாக்கிய செல்வாக்கு வேலுவை அப்பகுதி மக்களின் காட்ஃபாதராக மாற்றுகிறது. தவறான பாதையில் நடந்துசெல்லும் நல்லவனாக, வேலுவின் வாழ்க்கைத் துணை தேர்வும் அந்தக் கதாபாத்திரத்தின் ஒரு ஆக் ஷன்தான்.

முதிர்ந்த பெரிய காட்ஃபாதராக வாழும் வாழ்க்கையில் மனைவியை இழப்பதும் மகன் தலையெடுப்பதும் பின் அவன் இறப்பதும், தந்தையின் வாழ்க்கைப் பாதை பிடிக்காமல் மகள் விலகிச் செல்வதும் முதன்மைக் கதாபாத்திரத்தின் செயல்களால் நிகழ்பவைதான். ‘நாலுபேருக்கு உதவணும்னா எதுவும் தப்பில்லை’என்ற குணத்துக்குள் தன்னை கட்டமைத்துக்கொண்ட வேலு நாயக்கரிடம், அவரது மனசாட்சியாக நின்று கேள்வி கேட்கும் அவரது மகள் கதாபாத்திரத்தின் ஆக் ஷன், வேலு நாயக்கரை உணர்வு ரீதியாகப் பலவீனப்படுத்துகிறது.

“அம்மா சாக நீங்கதான் காரணம்ணு சொல்றாங்களே, உண்மையா?” என்று மகள் சிறுவயதில் கேட்கும் கேள்விக்கு நாயக்கரால் பதில் கூறமுடியாமல் போகிறது. பின்னர் அவளே வளர்ந்து நின்று, தந்தையின் செயல்களே அம்மாவின் சாவுக்கான காரணம் என்பதை உணர்ந்துகொண்டு மனம் முழுக்க கோபத்தை நிரப்பிக் கொள்கிறாள். யாரும் கேள்வி கேட்க முடியாத நாயக்கரைப் பார்த்து “உங்களுக்கு சரின்னு படறது ஊருக்கு தப்பாகத் தெரியும்,

இதையெல்லாம் தட்டிக்கேட்க நீங்கள் யார்?” என்று தட்டிக் கேட்கிறாள், பின்னர் தந்தையைப் பிரிந்து போகிறாள். காவிய நாயகனாக ஏற்ற இறக்கங்களோடு விரிந்த வேலு நாயக்கரின் வாழ்க்கைச் சித்திரத்தில், அவர், கண்ணுக்கு கண்ணே சரி என்று உணர்ச்சி வேகத்தில்  செய்த இரண்டாம் கொலை எனும் ஆக் ஷன், எஞ்சிய விஷக் கொடுக்காக இருந்து அவரது உயிரையும் பறித்துக்கொள்கிறது.

‘நாயக’னின் அசலான ஆக்‌ஷன்களை இந்த இடத்தில் நிறுத்தி, ‘தனியொருவன்’ படத்தின் நாயகன், வில்லன் இருவரையும் எப்படி கதாபாத்திரங்களாக வடிவமைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x