Last Updated : 03 Aug, 2018 10:51 AM

 

Published : 03 Aug 2018 10:51 AM
Last Updated : 03 Aug 2018 10:51 AM

இளமை .நெட்: சமூக ஊடகத்துக்கு ஒரு மாதம் லீவு!

சமூக ஊடகச் சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்துக்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட்டிவிட வேண்டும் எனக் கேட்க வேண்டாம். இப்படி நிலைத்தகவல் வெளியிடுவதையும் ஒளிப்படங்களைப் பகிர்வதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுதான் சவாலே!

ஆம், இப்படி ஓர் அழைப்பை விடுத்திருக்கிறது இங்கிலாந்தின் சுகாதார அமைப்பு ஒன்று. அந்நாட்டின் ‘ராயல் பப்ளிக் ஹெல்த் சொசைட்டி’, ஒரு மாத காலம் சமூக ஊடகச் செயல்பாடுகளுக்கு குட்பை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக செப்டம்பர் மாதத்தை ‘ஸ்கிரால் ஃப்ரீ’ மாதமாக அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது.

இன்று இணையத்தில் புழங்குபவர்களில் பெரும்பாலோர் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என ஏதாவது ஒரு சமூக ஊடக  சேவையையே  தீவிரமாகப் பயன்படுத்துகின்றனர். நாட்டு நடப்பு நிகழ்வுகள், தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் என எல்லாவற்றையும், நிலைத்தகவலாகவோ ஒளிப்பட மாகவோ மீம் வடிவிலோ பகிர்ந்து கொள்வது இயல்பாகி இருக்கிறது.

இப்படிப் பலரும் சமூக ஊடகத்துக்கு அடிமையாகிவிடும் நிலை ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள் சமூக ஊடகமே கதி என இருப்பது அவர்களது மனநலம், உடல்நலம் என இரண்டையும் பாதிக்கும் விஷயமாக  இருக்கிறது. கடந்த ஆண்டு, பிரிட்டனில் ‘யங் ஹெல்த் மூவ்மெண்ட்’ எனும் இளைஞர் நல அமைப்புடன் இணைந்து பொது சுகாதாரக் கழகம் நடத்திய ஆய்வு முடிவும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

‘ஸ்டேட்டஸ் ஆஃப் மைண்ட்’ (#StatusOfMind) எனும் பெயரிலான இந்த அறிக்கை, சமூக ஊடகப்  பயன்பாட்டால் கவலை, மனச்சோர்வு, உடல் தொடர்பான எதிர்மறைப் பிம்பங்களை வளர்ப்பது, இணையச் சீண்டல், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகளை உண்டாக்குவதாகத் தெரிவிக்கிறது. இவை தவிர, ‘ஃபோமோ’ (FOMO) எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படும் எதையும் தவற விட்டுவிடுவோமோ எனும் பதற்றத்தையும் உண்டாக்குகிறது.

சமூக ஊடகத் தளத்தைப் பார்த்துக்கொண்டே இருக்காவிட்டால், ஏதேனும் முக்கிய நிகழ்வு, நிலைத்தகவலைத் தவற விட்டு விடுவோம் எனும் எண்ணமே இப்படிக் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ‘ஃபியர் ஆப் மிஸ்ஸிங் அவுட்’ என்கின்றனர். ‘நோட்டிஃபிகேஷன்’ ஒலிக்குப் பழகிவிட்ட பலருக்கு இந்தப் பாதிப்பு இருக்கலாம்.

இந்த நிலையில் இருந்து மீண்டு, சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக, சமூக ஊடகத்துக்கு ஒரு மாதம் விடை கொடுக்கலாம் எனும் யோசனையை முன்வைத்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இதைச் சாத்தியமாக்குவதற்காக, ‘ஸ்கிரால் ஃப்ரீ’ செப்டம்பர் எனும் கோஷத்தோடு, இங்கிலாந்து அமைப்பு தனது இணையதளம் மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது.

சமூக ஊடகப் பயன்பாடு, உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தவும் இது வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு மாத காலம் சமூக ஊடகத்துக்கு விடை கொடுக்க நீங்கள் தயாரா? இங்கிலாந்தில் உள்ளவர்கள்தாம் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை.

சமூக ஊடகப் பயன்பாட்டின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என நினைக்கும் யார் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம். சமூக ஊடகம் இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியாது என நினைப்பவர்கள், பகுதி அளவேனும் இதற்கான முயற்சியில் ஈடுபடலாம். மாலை ஆறு மணிக்கு மேல் சமூக ஊடகப்  பயன்பாட்டைத் தவிர்ப்பது, இரவுப் படுக்கையறையில் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றலாம்.

‘ஸ்கிரால் ஃப்ரீ செப்டம்பர்’ பற்றி மேலும் தகவல்களுக்கு: https://bit.ly/2vaJdA5

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x