Last Updated : 24 Aug, 2018 09:21 AM

 

Published : 24 Aug 2018 09:21 AM
Last Updated : 24 Aug 2018 09:21 AM

பேசிக் களிப்போம் வா..!

இளைஞர்கள் என்றாலே வெட்டி அரட்டை அடிப்பவர்கள் என்ற எண்ணம் ‘மியூஸிக்கலி’ காலத்திலும் பலருக்கு இருக்கிறது. அப்படியே கொஞ்சம் திரும்பினால்… வாயை ‘கம்’ போட்டு ஒட்டிவிட்டார்களோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு, மவுனமாக, காதில் இயர்ஃபோனை மாட்டிக்கொண்டு ரயிலிலும் பேருந்திலும் ஷேர் ஆட்டோக்களிலும் யாரோடும் பேசாமல் ஒரு தலைமுறை நம் கண் முன்னே வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நகை முரணை எப்படிப் புரிந்துகொள்வது?

பேசுவதை விடுங்கள், எத்தனை இளைஞர்கள் தங்கள் மனத்தில் தோன்றும் எண்ணங்களை, தாங்கள் கடந்து வருகிற எண்ணங்களை, எந்த ஒரு அலங்காரப் பூச்சும் இல்லாமல் எழுதுகிறார்கள் என்று பார்த்தால், அந்த எண்ணிக்கையும் குறைவாவே.

ஆனாலும் ஓர் ஆறுதல், குறைவாக இருந்தாலும், வாசிக்கக் கிடைக்கிற இளைஞர்கள் சிலரின் எழுத்துகள் தரமானவையாகவே உள்ளன. அப்படி, சமீபத்தில் ஓர் இளையவர் எழுதி, வெளிவந்திருக்கும் புத்தகம்தான் ‘திண்ணைப் பேச்சாய்’. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கணிதப் புலத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவியான சோம.அழகு எழுதியிருக்கும் புத்தகம் இது.

தம் அனுபவங்கள் மூலமாக நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்லும் அவர், ஆழமான சுவடுகளை நூலில் பதித்திருக்கிறார். தமது ஆச்சி-தாத்தாக்கள் தம் மீது கொண்டிருந்த அன்பையும்  அவர்கள் மீது தாம் கொண்டிருந்த பாசத்தையும் கட்டுரையாகப் பதிவுசெய்யும் அவர், நம்மையும், நம்மை விட்டுச் சென்ற அல்லது நாம் விட்டு விலகி வந்த நமது ஆச்சி-தாத்தாக்களின் மீதான நேசத்தை மீட்டுகிறார். மீட்டுக் கொடுக்கிறார்.

‘இங்கு தரப்படும் தள்ளுவண்டிகளைத் தள்ளிச் செல்கையில் சவ ஊர்வலத்தில் ஊர்ந்து செல்வது போன்ற உணர்வு’ என்று அண்ணாச்சி மளிகைக் கடைகளை அழித்து வளர்ந்த ‘சூப்பர் மார்கெட்டு’களின் நுகர்வுக் கலாச்சாரத்தைப் பற்றி இன்னொரு கட்டுரையில் எழுதுகிறார்.

அடுத்த கட்டுரை, இன்றைக்கு ‘டமில்’ எப்படியெல்லாம் நம்மைப் படுத்துகிறது என்று சொல்கிறது. குடும்ப உறவுகள் பற்றி, பயணங்கள் பற்றி, சக மனிதரை மனிதநேயத்துடன் நடத்துவது பற்றி என அகமும் புறமும் தாம் உணர்ந்தவற்றை, ஆங்காங்கே சுய எள்ளலுடன் காட்சிப்படுத்தியிருப்பது, அலுப்புத் தட்டாத வாசிப்புக்கு உறுதியளிக்கிறது.

‘திண்ணை’ இணைய இதழில், நூலாசிரியர் அவ்வப்போது எழுதிவந்த கட்டுரைகள் மொத்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 21 கட்டுரைகள். அவை அனைத்தும் ஒரு தேர்ந்த புனைவு எழுத்தாளர் பின்னாளில் உருவாவதற்கான நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன. ‘திண்ணைப் பேச்சுக்கள் எப்போதும் வெட்டியானவையாக இருக்கத் தேவையில்லை. மனம் விட்டுப் பேசுவதும் களிப்புத் தரும் செயலே’ என்று சொல்கின்றன அவை. அதுதான் இந்தப் புத்தகத்தின் ‘அழகு!’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x