Last Updated : 28 Aug, 2018 11:49 AM

 

Published : 28 Aug 2018 11:49 AM
Last Updated : 28 Aug 2018 11:49 AM

உதவ நீளும் இளம் கரங்கள்

நூற்றாண்டு காணாத கன மழையால் பெருத்த சேதத்துக்கு உள்ளாகி இருக்கும் கேரள மாநிலத்தை வெள்ளப் பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க எட்டு வயது சிறுமி முதல் மீனவ நண்பர்கள்வரை வெவ்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் தங்களால் இயன்றதைச் செய்துவருகிறார்கள். குறிப்பாக, மாணவர்கள் தீவிரமாகவும் சளைக்காமலும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

கேரளாவில் மீன் விற்பனை செய்துவரும் மாணவி ஹனன் ஹமித் வெள்ள நிவாரணமாக ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியது, வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசு ஒதுக்கி இருக்கும் நிதியின் போதாமையைச் சுட்டிக்காட்டி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவச் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்தியது எனத் தன்னெழுச்சியாக ஆங்காங்கே மாணவர்கள் தங்களுடைய சமூகக் கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள் அப்படி கவனம் ஈர்த்த உதவிகளில் சில:

நலம் காக்கும் பணியில்

இயற்கைப் பேரிடர் போன்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து மீண்டெழப் புனரமைப்புப் பணிகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் செய்வதில் முறையான பயிற்சி பெற்றவர்கள் நாட்டு நலப்பணி திட்டக் குழுவினர். கடந்த ஒரு வாரமாக, கேரளம் மட்டுமின்றி தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணி திட்டக் குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கேரள வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

கேரளத்தில் மட்டும் 1,200 என்.எஸ்.எஸ். குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்தல், முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை, மருந்துப் பொருட்களை விநியோகித்தல் உள்ளிட்டவற்றைச் செய்துவருகிறார்கள்.

கிடைத்தவற்றை எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களிடம் இவர்கள் கொண்டு சேர்க்க வில்லை. வெவ்வேறு பகுதிகளில் தஞ்சமடைந்திருக்கும் மக்களின் தேவைகளைக் களத்தில் சென்று கேட்டறிந்து சமூக ஊடகங்களில் அவற்றைப் பட்டியலிடுகிறார்கள். அதிலும் பழுதுபட்ட பழைய பொருட்களைக் கழித்துவிட்டுப் புதியனவற்றைப் பொது மக்களிடம் இருந்து சேகரித்துப் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டுசேர்க்கிறார்கள்.

சேவை அல்ல உரிமை

உதவிக் கரம் நீட்டும் அதே வேளையில் உரிமைக்கும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து களத்தில் இறங்கினார்கள் டெல்லி  ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின்  மாணவச் சங்கத்தினர். கேரள வெள்ளப் பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரியும் வெள்ள நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் போதாமையைச் சுட்டிக்காட்டி கூடுதல் நிதி கேட்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் இறங்கினர். 

இதற்காக அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். டெல்லி நாடாளுமன்றத் தெருவின் காவல் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டபோதும் உறுதிப்பாட்டைக் கொஞ்சமும் இழக்காமல் அந்தக் காவல் நிலையத்தின் அதிகாரிகளிடமே வெள்ள நிவாரண நிதியாக 1,321 ரூபாய் வசூலித்தனர்.

இப்படி நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்புதல், நிதி திரட்டிக் கொடுத்தல், தங்களுக்குச் சொந்தமானவற்றைத் தானமாக அளித்தல்  போன்ற சேவை சார்ந்த நடவடிக்கைகளில் மட்டுமின்றி அரசியல் புரிதலோடு களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளையும் ‘Stand Up For Kerala’ என்ற முழக்கத்தோடு முன்னெடுத்துவரும் மாணவர்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை பிரகாசமாக்குகிறார்கள்.

akka thambijpg

அள்ளித் தந்த அக்கா, தம்பி

தங்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தைக் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்குத் தானமாக அளிக்க முடிவெடுத்திருக்கிறார்கள் கேரள  மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த  பிளஸ் ஒன், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும் தம்பியும்.

“அப்பா விவசாயி. எங்களுடைய எதிர்காலத்துக்காக அவர் சேத்து வைத்திருக்கும் சொத்து ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே. அதை வெள்ளத்தால் தவித்துவரும் கேரள மக்களுக்குத் தர நாங்கள் விரும்புகிறோம். இதை விற்றுக் கிடைக்கும் நிதியை நிவாரணப் பணிக்குக் கேரள அரசு எடுத்துக்கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்” என்று ஸ்வாஹாவும் பிரம்மாவும் கேரள அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

தேநீர் விற்று மீட்போம்

பெங்களூரு ஐ.ஐ.ஐ.டி.பி., சி.எம்.ஆர். இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியவற்றின் மாணவர்கள் தாங்கள் சேகரித்துவைத்திருக்கும் கைச்செலவுக்கான பணம் (‘பாக்கெட் மணி’) அத்தனையையும் திரட்டித் தந்திருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் தற்போது 742 கேளர மாணவர்கள் படித்துவருகிறார்கள்.

தங்களுடைய மாநிலத்தின் நிலையை உடன் படிக்கும் மாணவர்களுக்குப் புரியவைத்ததன் மூலம் அந்தப் பல்கலைக்கழகத்தின்  ‘சமூகச் சேவைப் பிரிவை’ச் சேர்ந்த மாணவர்கள் 5 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றைக் கேரளாவுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.

மணிப்பூர் சேனாபதி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.சி.எம்.ஐ. அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அம்மாவட்டத்தில் உள்ள மினி-ஸ்டேடியம் மைதானத்தில் தேநீர் கடை ஒன்றைக் கடந்த திங்கள் அன்று திறந்தனர். நகரத்தின் மையத்தில் உள்ள அந்த மைதானத்தில் ‘Save Kerala’, ‘All for Kerala’, போன்ற பதாகைகளை ஏந்தியபடி தேநீர் தயாரித்து விற்று அதன் மூலமாகத் திரட்டும் நிதியைக் கேரள வெள்ள நிவாரணத்துக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்தார்கள். இந்தியாவில் உள்ள மாணவர்கள் மட்டுமன்றி ஓமன் உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில் உள்ள இந்திய மாணவர்களும் ஆங்காங்கே நிதி வசூலித்துக் கேரளாவுக்கு அனுப்பிவருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x