Published : 20 Aug 2018 11:18 AM
Last Updated : 20 Aug 2018 11:18 AM

அலசல்: அச்சம் கொள்ள வைக்கும் ரூபாய்

ரூபாய் மதிப்பு படுவேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. டாலருக்கு நிகரான மதிப்பில் கடந்த வாரத்தில் 70  ரூபாய்க்கும் கீழாக சென்று விட்டது. இந்த சரிவு போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில்   மேலும் குறையவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 9 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 2 சதவீத சரிவினை கண்டுள்ளது.

ரூபாயின் மதிப்பு சரிவுக்கு சர்வதேச அளவில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக துருக்கியின் பொருளாதார நெருக்கடியை காரணமாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். துருக்கியில் தனியார் துறை கடன் அதிகரித்துள்ளது. அந்நிய செலாவணி விகிதத்தின் ஆதிக்கமும் துருக்கியின் இந்த நெருக்கடிக்கு காரணமாக இருந்துள்ளன.

இதனால் துருக்கியின் லிரா நாணய மதிப்பில் ஏற்பட்ட சரிவு இதர நாட்டு நாணயங்களுக்கும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து அச்சப்பட தேவையில்லை என மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தையே ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனும் குறிப்பிட்டுள்ளார்.

டாலர் மதிப்பு உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. உள்நாட்டு நிதிப் பாற்றாக்குறை அளவும் பண மதிப்பு குறைவதற்கு காரணமாக உள்ளன என்கிறார் ரகுராம் ராஜன்.

டாலர் மதிப்பு உயர்வதால், ரூபாய் மதிப்பு குறைகிறது என எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் நாட்டின் கடன் அளவைவிட, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்றால் பணமதிப்பு குறையும். முதலீட்டாளர்கள் இதைத் தான் கவனிக்கின்றனர் என்கிறார் ரகுராம் ராஜன். இந்திய பொருளாதாரம் இதர நாடுகளைவிட சிறப்பாக உள்ளது அதனால் உடனடியாக அச்சம் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துவது நாட்டின் உடனடி தேவையாக உள்ளது. இதற்கு வட்டி விகிதங்களை அதிகப்படுத்தலாம்.  நிதிப் பற்றாக்குறையை இலக்கிற்குள் கட்டுப்படுத்துவதிலும் தீவிரமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணமதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் முழு ஆதரவினையும் பெற வேண்டும் என ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு முழுவதும் பணவீக்க சரிவு இருக்கும்பட்சத்தில் நிலைமையை தீவிரமாக எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதும் ராஜனின் யோசனையாக உள்ளது.

இந்த நிலைமையில் ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியா அந்நிய செலாவணிக்கு செலவிட வேண்டிய தொகை அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதி பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலைகளில் பெரும் மாற்றம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உணவு பண்டங்களுக்கான விலை ஏற்றத்துக்கு தானாகவே வழி வகுக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் சூழலும் எழுந்துள்ளது. இன்னொருபுறம் இந்தியாவுக்கு உள்வரும் அந்நிய செலாவணி குறையும் நிலையும் உருவாகும். 

இப்படியான பொருளாதார அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியை ரூபாய் மதிப்பு சரிவு கொண்டு வந்துள்ளது. உலக அளவிலான நெருக்கடியில் தற்போதுவரை  ரூபாய் மதிப்பு மட்டுமே அதிக அளவில் சரிவைக் கண்டுள்ளது. இந்த நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையெனில் இந்திய பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் வெறும் மாயை மட்டுமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x