Published : 21 Aug 2018 07:22 PM
Last Updated : 21 Aug 2018 07:22 PM

வெற்றி முகம்: உலக அரங்கில் தமிழ் மாணவி

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரி. அங்கு அண்மையில் நடைபெற்ற எம்.எஸ்சி. அக்கவுன்டிங் மற்றும் ஃபைனான்ஸ் தேர்வில் நடப்பாண்டில் வெற்றி பெற்ற ஒரே இந்திய மாணவி கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ருதி கிருஷ்ணா (25).

கோயம்புத்தூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த ஸ்ருதி கிருஷ்ணா, அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் வங்கியில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துள்ளார். ஆனாலும், சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் அல்லது லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்ற தணியாத ஆர்வத்துடன் இருந்துள்ளார். லட்சக்கணக்கானோர் எழுதிய ஜி-மேட் தேர்வில் வென்ற இவர், ஆங்கில மொழி அறிவைச் சோதிக்கும் ஐ.இ.எல்.டி.எஸ். தேர்விலும் 9-க்கு 8.5 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

‘இந்தியாவில்தான் பணிபுரிவேன்!’

அந்தக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு தருமாறு இவர் எழுதிய கடிதத்தின் மொழி வளம், கல்லூரி முதல்வரை ஈர்த்தது. 2017 செப்டம்பரில் எம்.எஸ்சி. அக்கவுண்டிங் மற்றும் ஃபைனான்ஸ் பிரிவில் சேர்ந்தார். அண்மையில் வெளிவந்த முடிவில், இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் தேர்வில் வென்றிருக்கிறார்கள். அந்த வெற்றிப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே பெண் இவர் மட்டுமே.

பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருந்த ஸ்ருதி கிருஷ்ணாவைச் சந்தித்தோம். “அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, தைவான், மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து படித்தது புதிய அனுபவமாக இருந்தது. ஆங்கிலம் நன்கு தெரிந்ததனால், வகுப்பில் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. சிறு வயது முதலே எனது கனவாக இருந்த அக்கவுண்டிங் மற்றும் ஃபைனான்சியல் மேனேஜ்மெண்ட் பாடத்தை மிகுந்த விருப்பத்துடன் கற்றேன்.

ஒன்பது மாதப் படிப்பை முடித்து, மெரிட்டில் தேர்ச்சி பெற்றுள்ளேன். கல்லூரி சார்பில் ஏழாண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மலரில், எம்.எஸ்சி. அக்கவுண்டிங் மற்றும் ஃபைனான்ஸ் பாடப் பிரிவுக்கான பிரதிநிதியாக என்னைத் தேர்வு செய்து, எனது பேட்டியை அதில் பிரசுரித்தார்கள்.

ulaga 2jpg

அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி, கொலம்பியா அதிபர் ஜுவான் மானுவேல் சான்டோஸ், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கர், இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், நோபல் பரிசு வென்ற இந்திய பொருளாதார அறிஞர் அமர்த்திய சென் உள்ளிட்ட பல பிரபலங்கள் படித்த கல்லூரியில் படித்து, தேர்வில் சாதித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வு நேரத்தில் 3 மணி நேரம் மட்டுமே ஓய்வெடுத்தேன். முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் வெற்றியைத் தேடித் தரும்.

வெளிநாடுகளில் பணியாற்றும் வாய்ப்பு வந்த போதிலும், நான் தாயகம் திரும்பிவிட்டேன். இந்தியாவிலேயே ஏதாவது நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரியவே விரும்புகிறேன். சர்வதேச அளவிலான கல்லூரிகளில் சேர்ந்து பயில்வது தொடர்பாகப் பலரும் என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர். சாதாரணக் கல்லூரியில் படித்தவர்களால், சர்வதேசக் கல்லூரிகளில் சேர்ந்து பயில முடியுமா என்ற தயக்கத்துடன் இருக்கிறார்கள். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் போதுமானது.

ஆளுமைத் திறனையும் தலைமைப் பண்பையும் வளர்த்துக் கொண்டால், எந்தச் சிகரத்தையும் எட்டலாம். ஆங்கில மொழியறிவை வளர்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியம். சர்வதேச அளவிலான கல்லூரிகளில் சேர்ந்து பயில்வது தொடர்பாக,  கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்” என்கிறார் ஸ்ருதி கிருஷ்ணா.

எந்த நாட்டில் படித்தாலும், இந்தியாவில் பணிபுரிய வேண்டுமென்று உறுதியோடு இருக்கிறார் இவர். நமது அறிவு, நமது நாட்டின் வளர்ச்சிக்கே பயன்பட வேண்டும் என்ற உறுதியுடன் வெற்றி நடைபோடும் சாதனைப் பெண்ணுக்கு வாழ்த்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x