Last Updated : 09 Aug, 2018 10:23 AM

 

Published : 09 Aug 2018 10:23 AM
Last Updated : 09 Aug 2018 10:23 AM

கதை: கோதையின் கதை முட்டைகள்!

கோதை, நிறைய கதைகளைச் சேகரித்து வைத்திருந்தாள். கதைகளைக் கேட்பதிலும் படிப்பதிலும் அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்டுவாள்.

ஒரு நாள், கோதை ஏதோ மனக் குழப்பத்தில் இருந்தாள். சேகரித்து வைத்திருந்த கதைகளில் ஒன்று காணாமல் போய்விட்டது. அந்தக் கதை தொலைந்து போனதா, திருடு போனதா என்று தெரியாமல் தவித்தாள். கதை காணமல் போன காரணம் புரியாத புதிராகவே இருந்தது. சோகத்திலிருந்து மீள  அவளுக்கு நீண்ட நேரமானது. கதையைத் தேடிக் கண்டுபிடித்தே தீரவேண்டும் என்ற முடிவில், வெளியே வந்தாள் கோதை.

சற்றுத் தூரத்தில், ஒரு கோழியைப் பார்த்தாள். கோதையைத் திரும்பிக்கூட பார்க்காத அந்தக் கோழி, கால்களால் நிலத்தைக் கிளறிக்கொண்டிருந்தது. எதையோ கொத்தி இழுக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த கோதை, கோழியும் எதையோ தொலைத்துவிட்டது என்று நினைத்தாள். கோழியின் கதையும் காணாமல் போய் விட்டதா என்பதைக் கேட்டபதற்காக அருகில் சென்றாள்.

"கோழியே, நிலத்தைக் கொத்திக் கொத்திப் புதையலையா தேடுறே?"

"ஆமாம் கோதை, நீ தொலைத்த புதையலைத்தான் தேடுறேன்" என்ற கோழியின் பதில், அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

"நான் எதையும் தொலைத்ததாக உன்னிடம் சொல்லவில்லையே?"

"என்னிடம் நீ எதையும் மறைக்க முடியாது கோதை. சில மணி நேரமாக, நீ ஒரு கதையைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்" என்றது கோழி.

அதை கேட்ட கோதை, வியப்பில் ஆழ்ந்தாள். காணாமல் போன கதையைப் பற்றிக் கோழிக்கு எப்படித் தெரிந்தது? அவளது ஆர்வம் அதிகமானது.

"உனக்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் மண்ணைக் கிளறி, காணாமல் போன உன் கதையைத் தேடுகிறேன்." 

கோழி சொன்னதைத் கேட்டு, நம்பிக்கையோடு காத்திருந்தாள் கோதை.

பல மணி நேரமாகியும் கோழி, நிலத்தைக் கொத்துவதை நிறுத்தவே இல்லை. கோதைக்குக் கதையும் கிடைக்கவில்லை.

அன்று, அவள் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை என்றாலும், சில நாட்களுக்குப் பிறகு ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

கோதை, கோழியுடன் விளையாடுவதற்காகக் காத்திருந்தாள். வெகு நேரமாகியும் கோழி கூண்டைவிட்டு வெளியே வரவில்லை. அருகில் சென்று பார்த்தாள். கோழி ஆடாமல், அசையாமல் உட்கார்ந்திருந்தது.

"கோழி, கண்மாய் வரைக்கும் போய்ட்டு வரலாம் வா” என்று கூப்பிட்டாள் கோதை.

"இப்போது அது முடியாது. நான், எனது முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்" என்றது கோழி.

“அடடே, உங்கள் வீட்டுக்குப் புதிதாக விருந்தினர்கள் வரப் போகிறார்களா?” என்ற கோதை, அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.

சில நிமிடங்களில் கோழி முட்டைகளில் இருந்து, ஏராளமான கதைகள் வெளியே வந்தன. அந்த அதிசயத்தைக் கண் கொட்டாமல் பார்த்தாள் கோதை. கதைகளை எடுத்து அன்பளிப்பாகக் கோதைக்குக் கொடுத்தது கோழி.

ஒரு முட்டையிலிருந்து படக்கதைகள் வந்தன. அடுத்த முட்டையிலிருந்து அறிவியல் கதைகள், இன்னொன்றிலிருந்து மர்மக் கதைகள், வேறொன்றிலிருந்து நீதிக் கதைகள், மற்றொன்றிலிருந்து நாடோடிக் கதைகள்  என்று பலவிதமான கதைகள் கிடைத்தன!

கோதையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தினமும் அந்த அதிசயக் கதைகளைக் கேட்பதிலும் வாசிப்பதிலும் பொழுதைக் கழித்தாள். கதைகளை நண்பர்களுக்குத் தர விரும்பினாள். மந்திரக் கோழி குறித்தும் கதை முட்டைகள் குறித்தும் அறிந்த அவளது நண்பர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள்.

தங்களுக்குப் பிடித்த கதைகளைப் பிரித்து எடுத்துக்கொண்டார்கள்.  கதைகளுடன் சேர்ந்து விளையாடினார்கள். நிறையக் கதைகளைக் கேட்டதாலும் வாசித்ததாலும் உலகம் பற்றிய புரிதல் உண்டானது. அறிவியல் உண்மைகள் விளங்கின. கதைகள் நல்ல நண்பர்களாக மாறின. அன்பு, கருணை, உதவி போன்ற குணங்களைப் பற்றிய தேவையை உணர முடிந்தது.

வகுப்பு ஆசிரியர்கூடப் புதுப் புது கதைகளைக் கேட்டறிந்தார். மாணவர்கள் கதை சொல்வது எப்படி என்பதையும் கற்றுக் கொண்டார்கள். நாள் முழுவதும் கதைகளில் மூழ்கிவிடும் பிள்ளைகளின் மனநிலை புரியாத பெற்றோர் வருத்தம் அடைந்தனர். குழந்தைகளைக் கண்டித்தனர்.

கோதை வீட்டுக் கோழியின் புகழ் பரவியது.  குழந்தைகளின் கதைக் கொண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. பிள்ளைகளின் செயல், பெற்றோருக்கு வருத்தத்தைத் தந்தது. தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.

கதை முட்டைகள் இடும் கோழியின் கதையைக் கேட்ட தலைமை ஆசிரியர் ஆச்சரியம் அடைந்தார். பெற்றோரையும் கோதையின் கோழியையும் அழைத்தார். எல்லோரும் வந்தனர்.

"நீ என்ன மந்திரம் கற்ற கோழியா? உன் முட்டைகளில் இருந்து மட்டும் எப்படிக் கதைகள் வருகின்றன?” என்றார் தலைமை ஆசிரியர்.

கோழி நடந்ததை விவரமாகக் கூறியது. கோதை தொலைத்த கதையைத் தேடி நிலத்தைக் கிளறியபோது, தனக்கு மந்திர சக்தி வந்ததாகச் சொன்னது.

"கதை முட்டைகள் எப்படிக் கிடைத்தன என்று ஆராய்வதைவிட, ஏன் வந்தன என்று தெரிந்துகொள்வது அவசியம். குழந்தைகள் கதைப் பிரியர்கள் என்ற உண்மையை அனைவரும் அறிவீர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா, பாட்டி குழந்தைகளுக்குக் கதை சொல்வார்கள். இன்று குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாரும் இல்லை. இன்று முதல், விடுமுறையிலும் ஓய்வு நேரத்திலும் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்ல வேண்டும். கதைகளை வாசிக்கச் சொல்லி உற்சாகப்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதாக உறுதி அளித்தால், இனி நான் கதை முட்டைகள் இடுவதை நிறுத்திக்கொள்கிறேன்" என்றது கோழி.

அனைவரும் திகைத்து நின்றார்கள். பெற்றோர் அனைவரும்  சம்மதத்தைத் தெரிவித்தார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

அன்று முதல் கோழி முட்டைகளை மட்டும் இட ஆரம்பித்தது.ஓவியங்கள்: தமிழ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x