Published : 13 Aug 2018 11:16 AM
Last Updated : 13 Aug 2018 11:16 AM

அலசல்: போட்டி ஒழுங்குமுறை ஆணையம் இயங்குகிறதா?

இந்தியாவில் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் இயங்குகிறதா என்று சந்தேகம் வரும் அளவுக்கு ஆன்லைன் நிறுவனங்களில் அதிரடி ஆபர்கள் அமைந்துள்ளன. அதிலும் சமீபத்தில் ஆன்லைன் மளிகை சந்தைக்குள் நுழைந்துள்ள பிளிப்கார்ட்டின் சூப்பர் மார்ட் போட்டி ஒழுங்குமுறைகளை அப்பட்டமாக மீறியது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் பெங்களூரு நகரத்துக்கான சேவையை பிளிப்கார்ட் நிறுவனத்தின் சூப்பர்மார்ட் தொடங்கியுள்ளது. இந்த இ-காமர்ஸ் தளத்தில் பல்வேறு  மளிகை பொருட்களுக்கான விலையை பெரும் அளவுக்கு குறைத்துள்ளதுடன் ஒரு கிலோ சர்க்கரை ரூ.1 என்கிற விலையில் விற்பனை செய்துள்ளது. அதுபோல ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு ரூபாய்க்கும், ரூ.25 விலையுள்ள கிசான் ஜாம் ரூ.1க்கும் விற்பனை செய்துள்ளது. இதுபோல ஒவ்வொரு நாளும் பல பொருட்களுக்கு இலவசமாக அளிப்பதற்கு பதில் 1 ரூபாய் என விற்பனை செய்து வருகிறது.

தங்களது ஆன்லைன் சந்தையை பிரபலப்படுத்த சூப்பர்மார்ட் இந்த உத்தியை பயன்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விற்பனை உத்தி அப்பட்டமான விதிமீறல் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவின் ஆன்லைன் மளிகை சந்தை 2020-ம் ஆண்டில் 1.8 லட்சம்  கோடி டாலர் சந்தை மதிப்பை கொண்டிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.  அமெரிக்காவுக்கு அடுத்து ஆன்லைன் சந்தையில் பெரிய வாய்ப்பு இந்தியாவிலும் சீனாவிலும் இருக்கிறது. ஆனால் சீனாவில் அலிபாபா முக்கிய நிறுவனமாக இருக்கிறது. அதுபோல அமெரிக்காவில் அமேசான் முக்கிய நிறுவனமாக உள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவில் முன்னணி ஆன்லைன்  நிறுவனமான பிளிப்கார்டை கையகப்படுத்தி ஆன்லைன் சந்தையில் நுழைந்துள்ளது வால்மார்ட். இந்திய சில்லரை வர்த்தகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தாலும் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக மொத்த விற்பனையாளராகவே இப்போதும் வால்மார்ட் உள்ளது. இதனால் ஆன்லைன் சில்லரை வர்த்தக சந்தையை கைப்பற்றவேண்டிய கட்டாயத்தில் வால்மார்ட் உள்ளது.

இந்த நிலையில்தான் பிளிப்கார்ட்-வால்மார்ட் கூட்டணியில் உருவாகியுள்ள சூப்பர்மார்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அதிரடியாக இந்த விலைக் குறைப்பு செய்துள்ளது.

தவிர இதர நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கான சலுகைகளை அளிப்பதன் மூலம் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் சில்லரை வர்த்தகத்தில் போட்டி இருக்கவேண்டும் எனில் அதிக சலுகைகளை அளிப்பது, அதிரடி விலைக்குறைப்பு செய்வது தவிர்க்கப்பட வேண்டும். இது அப்பட்டமான விதிமீறல்.

இதற்கு ஒரு கட்டுப்பாட்டினை உருவாக்க வேண்டும் என்கிற கருத்து வெகுநாட்களாகவே இருந்து வரும் நிலையில், மத்திய அரசு இ-காமர்ஸ் கொள்கையினை கொண்டுவர உள்ளது. இதற்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. ஆனால் இந்த நிறுவனங்களுக்கு கடிவாளம் வேண்டும் என்பதையே இந்த விலைக் குறைப்புகள் உணர்த்துகின்றன. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x