Published : 18 Aug 2018 11:27 AM
Last Updated : 18 Aug 2018 11:27 AM

உங்களுக்குத் தேவை ராஜாவா, ராணியா?

வீட்டைக் கட்டி முடித்ததும் அறைக்கலன்களை வாங்குவது இயல்பு. அதிலும் கட்டில்கள் மற்றும் மெத்தைகளை வாங்குவது முக்கியமான தேர்வு. ஏனென்றால் அது நமது நீண்ட கால முதலீடு. ஒரு நாளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு நேரம் நாம் படுக்கையில்தான் கழிக்கிறோம் என்பதை யோசித்தால் படுக்கையின் முக்கியத்துவம் விளங்கும்.

கடைக்குச் சென்று பார்வைக்கு அழகான கட்டில்-மெத்தைகளை வாங்கக் கூடாது. ஏனென்றால் அவை உங்கள் அறைக்குள் வைக்கப்படும்போது பொருந்தாமல் போய்விடலாம். சில அறைகளுக்குள் அவற்றை நுழைய வைக்கவே முடியாமல்கூடப் போய் விடலாம்! மெத்தையைப் பொறுத்தவரை அது நம் முதுகுக்கு இதம் தருவதாக இருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் ‘பெட்’ (bed) எனும்போது அது மெத்தையைக் குறித்தாலும் கட்டிலையும் மறைமுகமாகக் குறிக்கிறது. ஏனென்றால் மெத்தைக்குத் தகுந்த கட்டிலும் இருக்க வேண்டுமே. எனவே மெத்தை வாங்குதலைப் பற்றி இங்கே குறிப்பிடும்போது அதற்குரிய கட்டிலையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறோம்.

‘ஒரு படுக்கை மெத்தை’ (single mattress) எனும்போது அது ஒருவருக்கான படுக்கை என்பது நமக்குப் புரிகிறது. அதாவது இவை அகலம் குறுகலாக இருக்கும். மிகச் சிறிய அறைகளுக்குள்கூட இவற்றை வைத்துவிட முடியும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு என்று தனியான சிறிய அறையை ஒதுக்குகிறார்கள். அதுபோன்ற அறைகளுக்கு இந்த ஒரு படுக்கை மெத்தை போதுமானது.

‘அகல மெத்தை’ (Twin mattress) என்றும் உண்டு. பெயரைப் பார்த்துவிட்டு சிங்கிள் மெத்தையைப் போல இது இரண்டு பங்கு என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அதைவிட இது கொஞ்சம் அதிக அகலம், அவ்வளவே. பருமனாக உள்ள ஒருவருக்கு இந்த வகை மெத்தை வசதியாக இருக்கும்.

‘இரு படுக்கை மெத்தை’யில் (Full size mattress) இருவர் படுத்துக் கொள்ள முடியும். என்றாலும் அவர்கள் நன்கு புரண்டு படுப்பதற்கெல்லாம் இடம் இருக்காது.

இப்போதெல்லாம் அதிகம் அடிபடும் மெத்தைகள் ‘ராணி மெத்தை’ (Queen mattress), ‘ராஜா மெத்தை’ (King full size mattress).

ராணி மெத்தை 60 அங்குல அகலம் கொண்டது. நீளம் 80 அங்குலம். (இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். பெரும்பாலும் எல்லா வகை மெத்தைகளுமே ஒரே நீளம் கொண்டவையாகத்தாம் இருக்கும். அது பெரும்பாலும் 80 அங்குலமாக இருக்கும். அகலத்தைப் பொறுத்துதான் மெத்தைகளின் பெயர்கள் மாறுபடுகின்றன). இருவர் படுத்துக் கொள்ள இது ஏற்றது. பல புதிய வீடுகளில் முக்கியப் படுக்கை அறைகளில் (Master bedroom) ராணி மெத்தைகள்தாம் இடம் பெறுகின்றன.

அத்தனைவித மெத்தைகளையும் விட மிக அகலமானது ‘ராஜா மெத்தை’ (King bed). இது 76 அங்குலம் கொண்டது. இரண்டு ட்வின் மெத்தைகளைப் பக்கத்தில் பக்கத்தில் போட்டால் எவ்வளவு அகலம் இருக்குமோ அவ்வளவு அகலம். மிகவும் உயரமாக இருப்பவர்கள் ‘கலிஃபோர்னியா ராஜா மெத்தையை’ (California King-Size Mattresses) வாங்கலாம். இது மேலும் நான்கு அங்குலம் நீளம் கொண்டது.

எதற்கும் இருப்பதிலேயே பெரிய மெத்தையை வாங்கி விடலாமே என எண்ணி ராஜா மெத்தையைக் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிட வேண்டாம். அறையின் மிகப் பெரும் பகுதியை அது அடைத்துக் கொண்டு நகர்வதற்கே குறுகலான இடம்தான் என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அறையின் பரப்பளவை மனதில் கொண்டுதான் படுக்கையைத் தீர்மானிக்க வேண்டும்.

இன்றைய தேதியில் பலராலும் வாங்கப் படுவது ராணி மெத்தைதான் என்கிறார்கள். என்றாலும் மிக அதிகமான பணத்தைக் கொண்டுள்ள, அதிக வசதி தேவை என்கிற வட்டத்தில் இருப்பவர்கள் ராஜா மெத்தையை நாடுகிறார்கள்.

- அருண் சரண்யா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x