Published : 29 Jul 2018 12:43 PM
Last Updated : 29 Jul 2018 12:43 PM

விவாதக் களம்: குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசுவதே தீர்வு

பெண் குழந்தைகள் தொடர்ந்து வன்முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகிவரும் நிலையில், ‘குழந்தைகளை வளர்ப்பதில் நாம் எந்த இடத்தில் கோட்டைவிடுகிறோம்’ என ஜூலை 22 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு இருக்கும் பொறுப்புகளைப் பலரும் சுட்டிக்காட்டினர். குழந்தைகளிடம் நண்பர்களைப் போலப் பழக வேண்டியதன் அவசியத்தையும் சிலர் சொல்லியிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:

குழந்தைகளின் மனத்தில் அழகான குட்டி குட்டி கற்பனை உலகங்கள் இருக்கின்றன. பெரியவர்கள் அவற்றைச் சிறிதும் உணர்வதில்லை. தங்களது இயந்திரத்தனமான உலகை அவர்கள்மீது திணிக்கும்போதுதான் பிரச்சினைகள் தொடங்குகின்றன. பள்ளியை விட்டுக் குழந்தைகள் வந்ததும் அன்று நடந்தவற்றைச் சொல்லவைத்தாலே போதும். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்திருந்தாலும் எளிதில் ஊகித்துவிடலாம். நம் குழந்தைகளுக்கு இது போன்ற வன்முறை நடக்காது என்ற பெற்றோரின் அதீத நம்பிக்கை குற்றங்களுக்குச் சிம்மாசனம் அமைத்துக் கொடுத்துவிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது எந்த அளவுக்கு முக்கியமோ இத்தகைய கொடூரர்கள் உருவாவதைத் தடுப்பதும் முக்கியம்.

குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்துகொள்கிறவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டுத் தினமும் அவமானத்தைச் சந்திக்கும் வகையில் இவர்கள் வாழ்க்கை அமைந்தால் அதுவே தவறு செய்ய நினைக்கிறவர்களுக்குப்  பாடமாக அமையும்.  இணையத்தின் இரும்புக்கரங்களை ஒடுக்காமல் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் அத்தனையும் வீண்தான்.

- ஜே.லூர்து, மதுரை.

கூட்டுக் குடும்ப வாழ்வின் சிதைவில் தொடங்கியது குழந்தைகளின் பாதுகாப்பற்ற  உலகம்.  ஒப்பீட்டளவில் முன்பைவிடப் பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லும் தற்போதைய சூழலில் குழந்தைகள் தனித்திருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  தொலைக்காட்சி,  கணினி,  கைபேசி, மலிவாகக் கிடைக்கும் அபரிமிதமான இணையப் பயன்பாடு ஆகியவை உலகின் அனைத்து அவலங்களையும் பெரியோருக்கு மட்டுமல்ல; குழந்தைகளுக்கும் காட்சிகளாக விரிக்கின்றன. தனி வீடுகளைவிட  அடுக்குமாடிக் குடியிருப்புகள் கண்காணிப்பும் பாதுகாப்பும் நிறைந்தவை என்ற நம்பிக்கையைச் சமீபத்திய  நிகழ்வுகள் தகர்த்தெறிந்திருக்கின்றன. 

காவல் துறை, நீதித் துறை ஆகியவற்றின் மெத்தனப்போக்கு, குற்றவாளிகளைத் தைரியமாக்கியுள்ளன.  சக குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பொருளாதார ஓட்டப் பந்தயத்தில் முந்திச் செல்ல குழந்தைகளை ஆயத்தப்படுத்துதல், குழந்தைகளின் அனைத்து விருப்பங்களையும் மறுப்பின்றி நிறைவேற்றும் அதீத  அக்கறை அல்லது அதீதக் கண்டிப்பு, பிறர்முன் அழகையும் அறிவையும் வெளிப்படுத்தும் காட்சிப்பொருளாகக் குழந்தைகளை வளர்த்தல், வெற்றி- தோல்வி,  குறை-நிறைகளை வேறுபாடின்றி அணுகும் பக்குவத்தைப் பயிற்றுவிக்காதது, குழந்தைகளின் வயதுக்கு மீறிய செயல்களைக் கண்டு பெருமைகொள்ளுதல், ஆண்-பெண் பேதமின்றி வளர்க்காதது, தற்காப்புக் கலை தவிர்த்துச் சமூக  அந்தஸ்துக்காகப் பயிற்றுவிக்கப்படும் கலைகள் எனப் பெற்றோர் குழந்தை வளர்ப்பில் பல இடங்களில் கோட்டைவிடுகின்றனர்.

சமூகத்தைச் சீரழிக்கும் மது போன்ற போதைப் பழக்கமும் அருகிவரும் ஆசிரியர் –மாணவர் நல்லுறவும் பல்லாயிரம் சம்பவங்களுக்குப் பின்னும் கலாச்சாரப் பாதுகாவலர்களால் மறுக்கப்படும் பாலியல் கல்வியும் குழந்தைகளின் உலகத்தைப் பாதுகாப்பில்லாததாக்குகின்றன. குழந்தைகள் குழப்பப்படுகின்றனர்; அச்சுறுத்தப்படுகின்றனர்; இயற்கையை மீறி இயக்கப்படுகின்றனர். குழந்தைகள், குழந்தைகளாக வாழ மறுக்கப்படுகின்றனர்.

- கவிதா இராமலிங்கம், உதவிஆணையர்  (சரக்கு மற்றும் சேவைகள் வரி), சென்னை.

1vivadha kalam 2jpg100 

‘குழந்தைகள் நம் கனவை நிறைவேற்றப் பிறந்தவர்கள் அல்ல. அவர்கள் நம் மூலமாக வந்தவர்கள் மட்டுமே’ என்று கவிஞர் ஒருவர் கூறியுள்ளார்.  கை, கால் முளைத்த சின்னஞ்சிறு மனிதர்களின் போன்சாய் உலகத்துக்குள் நாம் எட்டிப்பார்க்க மறுப்பதோடு மறந்தும் விடுகிறோம். அன்றைய ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணாக்கர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். மாணவர்களின் பிரச்சினைகளை அவர்கள் சொல்லாமலே ஆசிரியர்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால், இன்றைய ஆசிரியர்கள், குழந்தைகள் போட்டி நிறைந்த உலகில் வாழ்வதாக எண்ணி  அவர்களைப் பந்தயக் குதிரைகள்போல் பழக்குபவர்களாகவே இருக்கிறார்கள்.

நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்துக் குழந்தைகளுக்கு மட்டுமே சொல்லித் தந்தால் போதாது. காம இச்சை மிகுந்த ஆண்களுக்கும் அந்தப் புரிதல் வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நடக்க, கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை இல்லாததும் காரணம்தான். வெளியில் சென்று வரும் குழந்தைகள் தங்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்த யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் தங்களது பிரச்சினைகளைத் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்கிறார்கள்.

குழந்தைகளை எப்போதும் படி படி என்று நச்சரிப்பவர்கள் ஒருபோதும் நல்ல பெற்றோராக ஆக முடியாது. அவர்களுடன் தினமும் சிறிது நேரமாவது செலவழித்து நட்புடன் பழகுபவர்களே சிறந்த பெற்றோர். குழந்தைகளின் முகத்தைப் பார்த்தே அவர்களுக்கு ஏதோ பிரச்சினை என்று புரிந்துகொள்பவர்கள் இன்று மிகக் குறைவு.

வாழ்க்கைக்குக் கல்வி முக்கியம்தான். ஆனால், அதைவிட வாழ்க்கை மிக முக்கியம் என்பதைக் கல்வித் துறையினர் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் மதிப்பெண்களை மட்டும் துரத்துபவர்களாகக் குழந்தைகளை மாற்றாமல் நாம் மறந்துபோன நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும்.

பெற்றோருடன் இணக்கமாக இருக்கும் குழந்தைகள் எந்தப் பிரச்சினை என்றாலும் முதலில் பெற்றோரிடம்தான் சொல்வார்கள். அதுபோல் இணக்கமான சூழலைப் பெற்றோரால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.  சரியாக வளர்ப்பதாக எண்ணிக்கொண்டு  மிகக் கண்டிப்புடன் இருக்கும் பெற்றோரின் காதில் குழந்தையின் அழுகுரல் கேட்பதேயில்லை.                                          

- தேஜஸ், காளப்பட்டி,  கோவை.

இன்றைய வேகமான உலகில் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாகப் பல பெற்றோர் நினைப்பதிலிருந்தே சிக்கல் ஆரம்பமாகிறது. அவர்களோடு அமர்ந்து பேசி மன நலம் சார்ந்த தேவைகளைப் புரிந்துகொள்ளாமல் கடக்கும் சூழலே பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடுவே இடைவெளி ஏற்படக் காரணமாகிறது. சட்டமும் சமூகமும் கைகோக்க வேண்டும்.  நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொறுப்பு வேண்டும்.

சட்டத்தை மீறிப் பொது இடங்களில் புகை பிடிப்பவரைக்கூடக் கேள்வி கேட்கத் தயங்கும் நிலையிலேயே நாம் இன்றும் இருப்பது வேதனையான நிதர்சனம். இந்தச் சூழல் மாறி கண்ணுக்கு முன் நடக்கும் எத்தகைய தீமைகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்கும் மாண்பு நம் ஒவ்வொருவருக்குள்ளும் வளர்ந்தால் மட்டுமே இத்தகைய பாலியல் வன்முறைகள் குறையும் சூழல் ஏற்படும். குழந்தைகள், பெண்கள் இருக்கும் இடங்களில் சுற்றி இருக்கும் நாம் ஒவ்வொருவருமே காவல் காக்கும் கண்ணோட்டத்துடனேயே இருக்க வேண்டியது அவசியம்.

- இரா.பொன்னரசி, சத்துவாச்சாரி, வேலூர்.

குழந்தைகள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னையின் வளர்ப்பினில் மட்டுமல்ல; தந்தை, ஆசிரியர் ஆகியோரின் வளர்ப்பிலும் இருக்கிறது. அந்தக் காலத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தைகளின் முகம் சற்று மாறினாலே அவர்களை அரவணைத்து விஷயத்தை அறிந்து அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பார்கள். என் சிறு வயது சந்தேகங்கள் பெரும்பாலும் பாட்டியின் மூலமே தீர்க்கப்பட்டன.

ஆனால், இன்றோ பாட்டியையும் தாத்தாவையும் வீடியோ சாட்டிங்கில் மட்டுமே பார்த்து ‘ஹாய்' சொல்லும் நிலையே குழந்தைகளுக்கு உள்ளது. அன்று அம்மாவின் பாசமும் அப்பாவின் கண்டிப்பும் சரிசமமாகக் கிடைத்ததால் பெரும்பான்மைக் குழந்தைகள் தங்கள் சந்தேகங்களை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.

இன்று பெரும்பாலான வீடுகளில் கணவன் – மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால் வீடு திரும்பும் பிள்ளைகளை வரவேற்க யாரும் இருப்பதில்லை. அந்தத் தனிமை அவர்கள் மனத்தில் பாதுகாப்பற்ற உணர்வைக் கொடுக்கிறது. தன்னிடம் தேனொழுகப் பேசும் நபரிடம் அந்தப் பாதுகாப்பை அவர்களின் மனம் தேடுகிறது. அவர்களின் மீதான நம்பிக்கை, தன் பெற்றோரிடம் அவர்களைப் பற்றிப் பகிர்வதையும் தடுத்துவிடுகிறது.

அது மட்டுமல்ல; அலுத்துக் களைத்து வரும்  பெற்றோரும் குழந்தைகளின் பிரச்சினைகளை மேலோட்டமாக மட்டுமே கேட்டு அடுத்த நாளுக்கான ஆயத்தங்களில் அதையும் மறந்துவிடுகிறார்கள். ஆசிரியர்களும் அவ்வழியே. பள்ளிக்கு வந்தோமா பிள்ளைகளுக்குக் கற்றுத்தந்தோமா எனத் தங்கள் கடமையை மட்டும் செய்கிறார்கள். அந்தக் காலத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருந்த மன நெருக்கம் இன்று இல்லை.

குழந்தைகளின் மனத்தில் எழும் கேள்விகளுக்கான விடைகளை அக்கறையுடன் தர ஆசிரியரும் பெற்றோரும்  எந்த நேரமும் தயாராக இருப்பதே அவர்களின் பாதுகாப்புக்கு வழி. மனம்விட்டுப் பேசுவதைத் தினமும் பயிற்சியாகவே பெற்றோரும் ஆசிரியரும் பழக்கப்படுத்த வேண்டும்.

- சுபா தியாகராஜன், சேலம்.

நம் பிள்ளைகள் தவறு செய்ய மாட்டார்கள் எனப் பெரும்பாலான பெற்றோர் நினைக்கின்றனர். மற்றவர்கள் நம் பிள்ளைகளைப் பற்றி ஏதாவது சொன்னால்கூட நம்பாமல் இருப்பதோடு, அதைப் பற்றி விசாரிக்காமல்  அலட்சியப்படுத்துவதும்தான் பெற்றோர் தவறும் இடம். குழந்தைகளை ஆரம்பத்தில் இருந்தே, கட்டுப்படுத்தியும் பயமுறுத்தியும் சிறிய தவறுகளுக்குக்கூட அடித்துத் துன்பறுத்தியும்  வளர்க்கும் பெற்றோரிடம் பிள்ளைகள் நிச்சயமாக எதையும் பகிரத் தயங்குவார்கள். கண்டிக்க வேண்டிய விஷயங்களுக்குக் கண்டித்தும் மற்ற நேரத்தில் நட்புடனும்  பழகினால் மனம்விட்டுப் பேசுவார்கள்.

பள்ளியில் அன்றாடம் நடந்தவற்றைக் குழந்தைகளிடம் கேட்க வேண்டும். இந்த உரையாடல் இயல்பாக இருக்க வேண்டும். அவர்கள் நட்பு வட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். செல்போனில் என்னென்ன பார்க்கிறார்கள் என்று அவர்கள் அறியாமல்  நோட்டமிட வேண்டும். அவர்கள் புத்தகப்பையையும் அடிக்கடி சோதனையிட வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்துவர வேண்டும்.

பல காலமாக இது போன்ற குற்றங்கள் நடைபெற்றுவந்தாலும்கூட இப்படி வக்கிரம் பிடித்து மிருகத்தனமாக நடந்துகொள்பவர்களின் எண்ணிக்கை திடீரென இப்போது அதிகரித்திருக்கிறதோ எனத் தோன்றுகிறது. இதற்கு முக்கியக் காரணம் இணையமும் சமூக ஊடகங்களும்தாம். செல்போனில் தகாத வீடியோக்களைப் பார்த்துவிட்டு அதனால் ஏற்படும் உந்துதலைத் தணித்துக்கொள்ள பிஞ்சுக் குழந்தையோ பல்போன பாட்டியோ யார் கிடைத்தாலும் போதும் என எண்ணிச் செயல்படுகிறார்கள். 

சமூக வலைத்தளங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தால்தான் இது போன்ற குற்றங்களைத் தடுக்க முடியும். மேலும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும்.பெற்றோர்கள் விழிப்புடனும் அரசாங்கம் கண்டிப்புடனும் இருந்தால்தான் வருங்கால சமுதாயம் வளம்பெறும்.

- பி. லலிதா, திருச்சி.

‘இங்கு நடைபெறும் ஒவ்வொரு குற்றத்துக்கும் ஒரு வகையில் நானும் பொறுப்பு’ என்ற தாஸ்தாயெவ்ஸ்கியின் கருத்து, குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கும் பொருந்தும். குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிட வேண்டும் எனப் பெற்றோருக்குச் சொல்லப்பட்டாலும் குழந்தைகள் தனியாகவும் நாம் தனியாகவும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோமே தவிர ஒன்றாகக் கூடிப் பேசும் நேரம் குறைவு. இது தலைமுறை இடைவெளியா நேரமின்மையா எனத் தெரியவில்லை. நம் குழந்தைகளை நண்பர்களாகக் கருதி கற்றது, பெற்றதைப் பேசுவதில் என்ன தயக்கம்?

விளையாடிவிட்டு வரும் பிள்ளைகளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தால் அவர்கள் உடலில் ஏதேனும் காயம் இருந்தால் தெரிந்துவிடும். அந்த ஒரு கணம் அவர்களை உற்றுப் பார்க்கக்கூட நேரமில்லாமல் ஓடி என்ன சாதிக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை. குழந்தைகளுடன் பேசும்போது நமக்குத் தெரிந்த கதைகளை அவர்கள் வாழ்க்கையோடு இணைத்துச் சொல்லலாம். குழந்தைகள், பெற்றோரை நண்பர்களாகக் கருதும் நிலை வர வேண்டும்.

அது போல ஆசிரியர்கள் பாடத்தைப் போதிப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என நினைக்காமல் குழந்தைகளிடம் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் அதைக் கண்டறிந்து பெற்றோரிடம் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

தனக்குப் பாலியல் தொல்லை தந்தவர்கள் என்னதான் மிரட்டியிருந்தாலும் அந்தச் சிறுமி தன் பெற்றோரிடம்கூடச் சொல்ல முடியவில்லை என்றால் அந்தச் சிறுமியிடமிருந்து பெற்றோர் எவ்வளவு தொலைவு விலகியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பிள்ளைகள், பெற்றோரிடம் பயமின்றிப் பேசும்படி செய்ய வேண்டும்.  பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளாத பெற்றோரே  இங்கே குற்றவாளிகள்.

- பொன். குமார், சேலம்.

குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பைப் பெற்றோர் வழங்க வேண்டும்.  கட்டுப்பாடுகள் அற்ற குழந்தைப் பருவம் அவர்களுக்குக் கிடைத்தால் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள். குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்துச் சொல்லிக்கொடுப்பதோடு எளிமையான தற்காப்பு முறைகள் சிலவற்றையும் கற்றுக்கொடுப்பதில் தவறில்லை. இதனால் அவர்கள் தைரியமாக எந்தச் சூழலையும் எதிர்நோக்குபவர்களாக வாழ்வார்கள். பெற்றோர், குழந்தைகளுக்குக் கொடுக்கும் தண்டனைகளும் குற்றச்சாட்டுகளும் அவர்களை நம்மிடமிருந்து பிரிக்கவே செய்யும்.

வாழ்க்கையில் அன்பு கிடைக்கப்பெற்ற பிள்ளைகள் எந்தச் சூழ்நிலையிலும் தடம்மாற மாட்டார்கள். அன்பு, அரவணைப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காத பிள்ளைகள் தடம்மாறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இக்கட்டான சூழலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிகளிலும் பயிற்சி தர வேண்டுமெனப் பெற்றோர் வலியுறுத்தலாம்.  படிப்பு மட்டும் வாழ்க்கை என விதைக்காமல் நல்ல பண்புகள்தாம் பிறரிடம்  நமக்கு நன்மதிப்பைத் தரும் என்பதைச் சொல்லி வளர்க்க வேண்டும்.

- மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x