Last Updated : 23 Jul, 2018 12:20 PM

 

Published : 23 Jul 2018 12:20 PM
Last Updated : 23 Jul 2018 12:20 PM

வண்ணங்கள் ஏழு 14: தூத்துக்குடியிலிருந்து ஓர் ஒளிவிளக்கு

பள்ளிப் பருவத்தில் தனக்குள் அரும்பும் பெண்தன்மை பெற்றோருக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் நண்பர் களுக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் தெரிந்துவிடக் கூடாது எனக் குமுறும் திருநங்கையின் மனநிலையைச் சொற்களில் விவரிக்க முடியாது.

மாற்றுப் பாலினத்தவரைக் குடும்பங்கள் ஆதரிப்பது குறைவு என்றாலும் தூத்துக்குடி அதற்கு விதிவிலக்காக இருக்கிறது. இந்த மாவட்டத்தில் பெற்றோரின் அரவணைப்பில் சொந்தபந்தங்கள் சூழ வாழும் திருநங்கைகளின் எண்ணிக்கை அதிகம். இப்படி 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளின் குடும்பத்தோடு பேசி அவர்களுக்குக் குடும்பத்துடனான பிணைப்பு தொடர காரணமாக இருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை விஜி.

சமீபத்தில் தமிழகம், புதுவை பார்கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்கிறார். விஜியை அவரது குடும்பம் புறக்கணிக்கவில்லை. அவருக்கு அக்கா ஒருவர் இருக்கிறார். 98-ல் பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்பில் விஜி சேர்ந்தார். மாணவர்களுக்கு மட்டுமேயான அந்தக் கல்லூரியில் அவரால் படிப்பைத் தொடரமுடியவில்லை.

வீட்டில் இருப்பவர்களின் ஆதரவு இருந்தாலும் சுற்றியிருப்பவர்களின் கேலி, கிண்டல் பேச்சுக்குக் குடும்பம் ஆளாவதைப் பார்க்க முடியாமல் 99-ல் சென்னைக்கு வந்தார்.

“எல்லாத் திருநங்கைகளுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை நானும் சந்திச்சேன். இருக்க இடம் கிடைக்கலை. என்ன நடந்தாலும் இந்தச் சமூகம் எங்களுக்குன்னு விதிச்சிருக்க கடை கேட்டல், பாலியல் தொழில் இந்த ரெண்டையும் செய்யக் கூடாதுன்னு முடிவெடுத்தேன்” என்கிறார் விஜி.

அந்த நேரத்தில் விஜிக்கு ஆதரவு கொடுத்த திருநங்கை ஆல்கா, “எல்லாரையும்போல் உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் போகிறாயா அல்லது உன் படிப்புக்கேற்ற வேலை செய்து நீ நினைத்ததைச் செய்ய ஆசைப்படுகிறாயா?”  எனக் கேட்டிருக்கிறார். பிறகு அவருக்குத் தன்னார்வ அமைப்பில் திருநங்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் ‘பியர் எஜூகேட்டர்’ பணியையும் ஆல்கா வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

“அதற்குப் பிறகு ‘அவுட்ரீச் வொர்க்கரா’கவும் பல தன்னார்வ அமைப்புகளில் வேலை செய்தேன். ஆக்‌ஷன் எய்ட், தாய் போன்ற அமைப்புகளிலும் வேலை செய்தேன். சில ஆண்டுகளுக்குப் பின் தூத்துக்குடிக்கே திரும்பினேன். எட்டு மாநிலங்களை உள்ளடக்கிய கிறிஸ்தவப் பேராயத்தில் சென்னைப் பேராயத்தில் நான் வேலை செய்தேன். இந்த வேலையைச் செய்த முதல் திருநங்கை நான்தான்” என்கிறார் விஜி.

அன்பு அறக்கட்டளை மூலமாக விளிம்பு நிலையில் இருக்கும் பெண்கள் அரசு சார்ந்த உதவிகள் பெறுவதற்கும் திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் கிடைப்பதற்கும் உதவினார். இந்த நேரத்தில் தமிழக அரசு திருநங்கைகள் நலவாரியத்தைத் தொடங்கியது. இதில் தென் மாவட்டத்தின் சார்பாகவும் விஜி  பணி செய்திருக்கிறார். திருநங்கை நலவாரியத்தில் பணியிலிருந்தபோதே சமூகவியல் துறையில் எம்.எஸ்.டபிள்யூ. டிப்ளோமா படிப்பையும் முடித்தார். அதோடு தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரசு ஊழியர்களிடமும் காவலர்களிடமும்  திருநங்கைகளுக்குச்  சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளையும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்களுக்கு ஏற்படும் சவால்களையும் விஜி புரியவைத்திருக்கிறார்.

காக்கிநாடாவில் சட்டப் படிப்பு

“குருவையா என்னும் வழக்கறிஞர்தான் 'லோக் அதாலத்'தில் என்னை  உறுப்பினராகச் சேர சொன்னார். அதில் சில காலம் பணிபுரிந்தேன். அது நியமன உறுப்பினர் பணி என்பதால், பணி நிரந்தரம் இல்லை. அதனால் என்னைச் சட்டப் படிப்பில் அவர் சேரச் சொன்னார்.

 தமிழகத்தில் சட்டம் படிப்பதற்கு எனக்கு வயது கடந்திருந்தது. அதனால் ஆந்திர மாநிலம் காக்கிநாடா, ராஜிவ் காந்தி சட்டக் கல்லூரியில் படித்தேன். என் பள்ளிச் சான்றிதழில் இருக்கும் பெயரில்தான் படிக்க முடியும்; ஆனால், நான் விரும்பும் உடையில் வரலாம் எனச் சொன்னார்கள்” என்று சொல்லும் விஜி, சட்டத் துறையில் பட்டம் பெற்றார்.

“திருநங்கை விஜயகுமார் என்றுதான் தற்போது பதிவு செய்திருக்கேன். கெஜட்டில் விஜி என்று பதிவு செய்திருந்தாலும், பிறகு மாற்றித் தருகிறோம் எனச் சொல்லிவிட்டனர். சமூகம் என்னை வெறுத்தாலும் கூட சமூகத்தை நான் விரும்பவே செய்வேன். நான் படித்த சட்டப் படிப்பு அதற்கு உதவும்” என்கிறார் விஜி.

பால் புதுமையருக்குத் திருநங்கைகளின் ஆதரவு

திருநங்கைகளுக்கு 377-வது சட்டப் பிரிவால் ஏற்படும் தீமைகள் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. ஆணாக இருந்தாலும் பெண்ணின் மனதோடு அவர்கள் இருப்பதால் அவர்களுக்கு இயல்பாக எதிர்ப்பாலினமாக இருப்பது ஆண். அதனால், அவர்களுக்கு ஆணின் மீது இயல்பான ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால், தன்பால் உறவாளர்களுக்குத்தான் இந்தச் சட்டத்தால் அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், மாற்றுப் பாலினத்தவர் சார்பில் அவர்களுக்கு எதிரான சட்டம் என்ற அடிப்படையில் திருநங்கைகளும் அந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிவருகின்றனர்.

“இந்தியாவிலேயே திருநங்கைகள் விஷயத்தில் தமிழ்நாடு முன்மாதிரியா இருக்கு. கல்வி உதவி தேவைப்படுறவங்களுக்கும் உதவி செய்யத் தயாரா இருப்பவங்களுக்கும் ஒரு பாலமா இருக்கறதுக்கான வேலையை எங்க அறக்கட்டளை மூலமா செயல்படுத்துறதுதான் என் அடுத்த இலக்கு” என்கிறார் விஜி.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x