Published : 20 Jul 2018 13:09 pm

Updated : 20 Jul 2018 13:09 pm

 

Published : 20 Jul 2018 01:09 PM
Last Updated : 20 Jul 2018 01:09 PM

பிரேசில் பட விழா: உணர்வுகளின் ஆடுகளம்!

கால்பந்துக் கதாநாயகர்களை, சால்சா நடனத் தாரகைகளை மட்டுமல்ல; சிறந்த செல்லுலாய்ட் கலைஞர்களையும் உலகுக்குத் தந்திருக்கிறது பிரேசில் தேசம். ‘ஐஸ் ஏஜ்’, ‘ரியோ’ போன்ற பிரமிப்பூட்டும் அனிமேஷன் படங்களை ஹாலிவுட்டின் மிரட்டல் என்ற பிரம்மிப்புடன் பார்த்திருப்போம். ஆனால், அவை பிரேசிலின் தயாரிப்புகள்.

சலனப் படத்தை லூமியர் சகோதரர்கள் உருவாக்கிய அடுத்த சில ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்கத் திரைப்பட உலகம் பிரேசிலை மையமாகக் கொண்டே காலூன்றி வளர்ந்தது. 


குறும்படங்களைத் தயாரித்து திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய பிரேசில் திரைக் கலைஞர்கள் இசைத் திரைப்படங்களில் தடம் பதித்தனர். அதிலும் 1930-களிலும் 40-களிலும் ஹாலிவுட் சினிமாவைப் பகடி செய்து ‘சன்சதாஸ்’ என்ற வகைமையில் அடங்கும் நையாண்டி இசைப் படங்கள் வழியாகக் கவனம் ஈர்த்தார்கள். தொடர்ந்து சமூக, கலாச்சார, அரசியல் பாணித் திரைப்படங்களை உருவாக்குவதில் மும்முரம் காட்டி, ‘லத்தின் அமெரிக்க சினிமா’ என்ற அடையாளத்துடன் உலக சினிமாக்களையும் படைத்து வருகிறார்கள்.

கான் உட்பட சர்வதேசப் படவிழாக்களில் விருதுகளை அள்ளும் பிரேசில் படங்களுக்கெனத் தமிழகத்திலும் தீவிர ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஜூலை 23 முதல் 25 வரை மூன்றுநாள் ‘பிரேசில் திரைப்பட விழா’ சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடக்கவிருக்கிறது.

தந்தை-மகன் போராட்டம் 

 ‘ரியோ ஒலிம்பிக்ஸ்’ புகழ் நகரமான ரியோ டி ஜெனிரோ, பிரேசில் நாட்டின் பழமை வாய்ந்த நகரமும் கூட. அங்கு 1960-களில் ‘பொஸ்ஸா நோவா’என்ற இசை இயக்கம் ஊற்றெடுத்தது. ஜாஸ் இசையில் புதிய திருப்பமாக அமைந்த பொஸ்ஸா நோவாவை உலக அரங்குக்குக் கொண்டுசென்றவர்களில் ‘அவுட் ஆஃப் டியூன்’ என்ற இசைக் குழுவினரே முன்னோடிகள். அந்தத் துடிப்புமிக்க இளம் இசைக்கலைஞர்களின் இசைப் பயணம்தான் 2008-ல் உலகப் பார்வையாளர்களைக் கவர்ந்த ‘அவுட் ஆஃப் ட்யூன்’ (Out of Tune) திரைப்படம். 

இசை ஜாம்பவான்களான தந்தையையும் மகனையும் பற்றிய பயோ பிக் வகைத் திரைப்படம் ‘கன்சாகா –ஃப்ரெம் ஃபாதர் டூ சன்’ (Gonzaga – From Father to Son’). எளிமையான பின்புலத்தில் இருந்து வரும் லூயிஸ் கன்சாகா தன்னுடைய கடின உழைப்பால் வெற்றிகரமான பாடகராக உருவெடுக்கிறார். அப்பா ஏற்படுத்திய ராஜபாட்டையில் எளிதில் பிரபலமான பாடகர் ஆகிறார் மகன். இரு தலைமுறையைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் என்ற தொழிற்போட்டியும் தந்தை மகன் என்ற உறவால் விளையும் உணர்ச்சிப் போராட்டமும் இருவருக்கும் இடையில் மையம் கொள்கின்றன. 

அடுக்கடுக்கனான வெற்றிகளை ஈட்டிய அப்பா-மகன் இடையிலான உறவுச் சிக்கல்கள் முந்தைய படத்தின் கதை என்றால், ஊரே தங்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்க வைக்கும் கோமாளிகளான அப்பா-மகன் வாழ்க்கைதான் ‘தி கிளவுன்’ திரைப்படம். 2012-ல் தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு திரைப்படங்களும் ‘சினிமா பிரேசில் கிராண்ட் பிரைஸ்’ உள்ளிட்ட அந்நாட்டின் தேசிய அளவிலான விருதுகளில் பலவற்றை வென்றவை. தவிர ‘தி கிளவுன்’ திரைப்படம் ஆஸ்கரில் சிறந்த அயல் மொழித் திரைப்படப் பிரிவின் பரிந்துரையில் இடம்பெற்றது. 

சிரிப்பூட்டும் துன்பியல் காவியம் 

துன்பியல் காவியமான ‘ரோமியோ-ஜூலியட்’ நாடகத்தை நகைச்சுவைத் திரைப்படமாக மாற்றி 2005-ல் புரூனோ பாரெட்டோவால் இயக்கப்பட்டது ‘ரோமியோ அண்டு ஜூலியட் கெட் மேரீட்’ (Romeo and Juliet Get Married). பல்மிராஸ் கால்பந்து கிளப்பின் முக்கிய உறுப்பினருடைய மகள் ஜூலியட். இந்த கிளப்புக்குப் போட்டா போட்டியான கொரிந்தியன்ஸ் கிளப்பின் ரசிகர் சங்கத் தலைவன் ரோமியோ. சும்மாவே அப்பாக்கள் காதலுக்கு வில்லன்கள்தாம். அதுவும் இங்கு விளையாட்டு போட்டியால் ஜென்ம விரோதிகள் ஆகிறார்கள். ஆனால், காதல், மோதல், கால்பந்துப் போட்டி என விரிந்து கடைசியில் கலாட்டா கல்யாணத்தில் முடியும் படம். 

பகடிக் கவிதைகளில் கில்லாடி நோயல் ரோசாவின் வாழ்க்கை அபத்தங்களைக் கொண்டாடும் திரைப்படம் ‘நோயல் – தி சம்பா போயட்’. 

உலக சினிமாக்களின் பட்டியலில் உணர்வுகளின் ஆடுகளமாகத் தடம் பதித்த இந்த ஐந்து பிரேசில் நாட்டுத் திரைப்படங்களும் ஜூலை 23 முதல் 25 வரை மாலைப் பொழுதுகளில் ரஷ்யக் கலாச்சார மையத்தில் திரையிடப்பட இருக்கின்றன. சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம் புது டெல்லியில் உள்ள பிரேசில் தூதரகத்துடன் இணைந்து இந்தத் திரைப்பட விழாவை நடத்துகிறது. பிரேசில் தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவின் தலைவரான ரோபர்டா லிமா இந்தத் திரைப்படவிழாவைத் தொடங்கி வைக்கிறார். பிரேசில் திரைப்படவிழா குறித்து அறிந்துகொள்ள விரும்பும் உலக சினிமா ஆர்வலர்கள் 044 2821 2652 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.


பிரேசில் திரைப்படங்கள்பிரேசில் திரைப்பட விழாலூமியர் சகோதரர்கள்Russian cultural centerBrazil film festival

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x