Published : 01 Jul 2018 12:06 PM
Last Updated : 01 Jul 2018 12:06 PM

முகம் நூறு: முன்னேறும் கால்கள்

கால் பந்துக்கு உழைக்கும் மக்களின் விளையாட்டு என்ற பெயரும் உண்டு. உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டும் இதுதான். தற்போது ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளைப் பார்க்க ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அந்நாட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்தப் பரபரப்புக்குச் சிறிதும் குறைவில்லாமல் இருக்கிறது சென்னை வியாசர்பாடி பகுதி. இங்கே வீட்டுக்கு ஒருவர் கால்பந்து விளையாடுகிறார்!

குடிசைவாழ் குழந்தைகள் கல்வி, திறன் மேம்பாட்டு (STEDS) மையம் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முல்லை நகர் கால்பந்து மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிபெறும் இந்த மையத்தில் பெண்கள் அணியைச் சேர்ந்தவர்கள் மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்குத் திறமைசாலிகள்.

குட்டி பிரேசில்

வியாசர்பாடி பகுதி மக்கள் மரடோனா, ரொனால்டோ, மெஸ்ஸி எனப் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களின் பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கும் அளவுக்கு அந்த விளையாட்டின் மீது ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். நிஜ கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவில் கால்வாசி அளவே இந்த மைதானம் உள்ளது. ஆனால், இங்கு பயிற்சி பெற்ற பாரதி அரசு மகளிர் கல்லூரி மாணவி பீமாபாய் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றதோடு பல்கலைக்கழகம், மாநில அளவிலான கால்பந்துக் குழுக்களிலும் இடம்பெற்றுள்ளார். கோதியா கோப்பைக்காக (Gothia) ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியிலும் அவர் கலந்துகொண்டுள்ளார்.

“நான் ஸ்கூலுக்குப் போயிட்டு வரும்போதெல்லாம் இந்த மைதானத்தைக் கடந்துதான் வீட்டுக்குப் போவேன். இங்கு நிறைய பேர் ஃபுட்பால் விளையாடுறதைப் பார்த்ததும் எனக்கும் விளையாடணும்னு ஆசை வந்துச்சு. ஏழாவது படிச்சப்ப ரொம்ப அடம்பிடிச்சு பயிற்சி வகுப்புல சேர்ந்தேன். பொதுவா வியாசர்பாடின்னாலே மோசமான இடம்னு எல்லோரும் சொல்லுவாங்க. அந்தப் பேரை மாத்தணும்னு நாங்க ஃபுட்பால் விளையாடுறோம்.

எங்க ஏரியாவே குட்டி பிரேசிலா மாறியிருக்கு. காலையில் கஞ்சியை மட்டும் குடிச்சிட்டுகூட விளையாட வருவோம். ரொம்ப கஷ்டமான நிலையில் இருந்துதான் நாங்க தேசியப் போட்டிகளில் கலந்துக்கறோம். நிறைய பேர் படிப்புக்காக உதவுவாங்க. ஆனா எங்களை மாதிரி ஏழ்மை நிலையில் இருந்து வர்றவங்களுக்கு ஊக்கமும் ஊட்டச்சத்தான உணவும்தான் தேவை. இதுக்கு யாராவது உதவினா நல்லது” என்று சொல்லும் பீமாபாய், வறுமையைத் திறமையால் விரட்டும் முயற்சியில் முனைப்புடன் இருக்கிறார்.

மாற்றம் தந்த விளையாட்டு

செம்மண் தரையாக இருந்த மைதானத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் செயற்கைப் புல்தரை போடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே புல்தரையை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திவருவதால் மைதானம் ஆங்காங்கே சேதமடைந்திருக்கிறது. மின்விளக்குகளும் பழுதாகியுள்ளன. இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மாணவிகள் பலர் கால்பந்துப் பயிற்சியில் சேர்வதற்கு ஆர்வத்துடன் வந்தபடி இருக்கிறார்கள்.

24CHLRD_COACH THANGARAJ தங்கராஜ்

குடிசைவாழ் குழந்தைகள் கல்வி, திறமை மேம்பாட்டு மையத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான தங்கராஜ், முன்னாள் தேசிய கால்பந்து வீரர். “இந்தப் பகுதியில் நிறைய குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தாங்க. அவங்களை மீட்டு, பள்ளியில் சேர்க்கத்தான் 1997-ல் இந்த மையத்தை நண்பர்களோடு சேர்ந்து தொடங்கினோம். குழந்தைகளுக்குப் படிப்பின் மீது ஆர்வம் ஏற்படணும்னு ஃபுட்பால் பயிற்சி கொடுத்து, அவங்க மனநிலையை மாத்துறதுதான் எங்க நோக்கமா இருந்தது” என்று சொல்லும் தங்கராஜ், தங்கள் நோக்கம் நிறைவடைந்துவருவதாகவும் குறிப்பிடுகிறார்.

வாய்ப்பே வாழ்க்கை

அரக்கோணத்தைச் சேர்ந்த கௌசல்யாவின் பெற்றோர் விவசாயிகள். தங்கள் மகள் விளையாட்டுத் துறையில் சாதிப்பாள் என்ற நம்பிக்கையோடு அவரைக் கால்பந்துப் பயிற்சி வகுப்பில் சேர்த்திருக்கிறார்கள். பி.ஏ. தமிழ் படித்துவரும் கௌசல்யா, கடந்த மூன்று ஆண்டுகளாகப் பயிற்சிபெற்று வருகிறார். “எங்களுக்குக் கிடைக்கும் குறைந்த வாய்ப்பைப் பயன்படுத்திதான் சாதிக்க நினைக்கிறோம். ஆனால், தனியார் கல்லூரி மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைப்பதில்லை. வாய்ப்பு கொடுத்தால்தானே சாதிக்க முடியும்? எங்கள் வாழ்வே இந்த விளையாட்டை நம்பித்தான் இருக்கு” என்கிறார் அவர்.

24CHLRD_BEEMA BAIபீமா பாய்right

நானும் ஒரு நாள் மாநில அணியில் இடம்பெறுவேன் என்று சொல்லும் பூஜா ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். படிப்பில் ஆர்வம் கொண்ட அவர், கால்பந்தை லாகவமாக கோலுக்கு மாற்றிவிடுவதிலும் வல்லவர்.

பெண்கள் விளையாட வந்தால் அணிகிற ஆடைகளிலிருந்து சிக்கல் தொடங்கிவிடும். “நாங்க ஃபுட்பால் விளையாடுறதால பலரோட பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கு. டிரெஸ் மிகப் பெரிய பிரச்சினை. நம்ப பொண்ணு நல்ல விளையாடணும்னு சொல்றவங்களவிட அடிபடாம பார்த்துக்கோ, இல்லைன்னா கல்யாணம் நடக்காதுன்னு சொல்றவங்க அதிகம். எங்களைச் சுதந்திரமாக விளையாட விடணும். அதுதான் எங்க தேவை” என்கிறார்கள் விஜயாவும் பவதாரணியும்.

அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு இடையேதான் இந்தக் குழந்தைகளின் பெற்றோர், கால்பந்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருகின்றனர். அதை உணர்ந்ததாலோ என்னவோ அவர்களும் உத்வேகத்துடன் பந்தை உதைக்கின்றனர். சீறிப்பாயும் பந்து மிகச் சரியாக இலக்கை அடைகிறது!

படங்கள்: ஹா.காசிம் அர்ஷத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x