Published : 05 Jul 2018 02:54 PM
Last Updated : 05 Jul 2018 02:54 PM

கோடம்பாக்கம் சந்திப்பு: ரித்திகா சிங் ரிட்டர்ன்ஸ்!

சிறந்த நடிகைக்கான சிறப்பு நடுவர் விருது பெற்றவர் ‘இறுதிச்சுற்று’ புகழ் ரித்விகா சிங். ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் இன்னும் சிறப்பாக நடித்த ரித்விகாவுக்கு ‘சிவலிங்கா’ படத்தின் தோல்வி பின்னடைவானது. “மீண்டும் எழுந்து வருவேன். இம்முறை நானே கதை கேட்டு இரண்டே இரண்டு படங்களை மட்டும் ஒப்புக்கொண்டு நடித்துவருகிறேன். இரண்டுமே வெற்றிபெறும். அப்புறம் பாருங்க!” எனும் ரித்விகா, அரவிந்தசாமியுடன் ‘வணங்காமுடி’ என்ற தமிழ்ப் படத்திலும் ‘ ஆதியுடன் ‘நீவே வாரூ’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

அறிமுக நாயகன்

ஒரு சிறு நகரம். அங்கே படிப்பறிவற்ற அரசியல்வாதியாகக் கதாநாயன். அறிவை வளர்த்துக்கொள்ள அவன் செய்யும் கோமாளித்தனங்களால் அப்பகுதி மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். நாயகனுக்குப் பாடம் புகட்ட மக்கள் முடிவுசெய்யும்போது, விண்வெளிச் சுற்றுலா செல்ல இருப்பதாக நாயகன் அறிவிக்கிறார். இதுதான் சரியான வாய்ப்பு எனக் கருதிய மக்கள் அவனுக்கு எப்படிப் பாடம் புகட்டினார்கள் என்பதுதான் ‘விண்வெளிப் பயணக் குறிப்புகள்’ என்ற அவல நகைச்சுவைப் படத்தின் கதை. அத்விக் ஜலந்தர் என்ற நவீன நாடக நடிகர் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் புதியவரான ஜெயப்பிரகாஷ்.

திருட்டு நகைச்சுவை

நகைச்சுவைக் காட்சிகளுக்கான ஐடியாக்களைத் திருடுவது இருக்கட்டும். முதல் முறையாகத் திருடுபவர்கள் கூட்டணி அமைத்து அதைச் செய்யும்போது நிகழும் எதிர்பாராத நகைச்சுவைக் களேபரங்களை வைத்து எடுக்கப்படுவது ‘ஹீஸ்ட் ஹூமர்’ (Heist) வகைப் படமாம். அதைத் தமிழில் முதல்முறையாக ‘கொரில்லா’ படத்தில் முயன்றிருக்கிறேன் என்கிறார் இயக்குநர் டான் சாண்டி. ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய மூவரும் நண்பர்கள்.

இவர்கள் தங்கள் பணத் தேவைக்காக வங்கி ஒன்றைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். அதற்காக ஒரு சிம்பன்ஸி குரங்கையும் தங்கள் அணியில் இணைத்துக் கொள்கிறார்கள். அவர்களால் வங்கியைக் கொள்ளையடிக்க முடிந்ததா, இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடி ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே.

விலங்குகளுக்கு மவுசு

‘கொரில்லா’ உட்பட விலங்குகளுக்குக் கதையில் முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் தற்போது தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கின்றன. ராஜுமுருகன் இயக்கியவரும் ‘ஜிப்ஸி’ படத்தில் நடனமாடப் பழக்கப்பட்ட ஒரு குதிரை நடித்துவருகிறது. ‘பாகுபலி’ புகழ் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரபுசாலமன் இயக்கிவரும் ‘காடன்’ படத்தில் யானைகள் முக்கிய இடம்பிடித்திருக்கின்றன. இவர் இயக்கிவரும் ‘கும்கி 2’ படம் ஒரு யானைக்குட்டியை மையமாக வைத்தே கதை நகர்கிறதாம்.

அதேபோல அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்திலும் யானை இடம்பெறுகிறது. இவை ஒருபுறம் இருக்க அறிமுக இயக்குநர் ஜெகன் வெள்ளைப் பன்றி ஒன்றை மையமாக வைத்து ‘ஜெட்லி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மற்றொரு அறிமுக இயக்குநரான தினேஷ் பார்த்தசாரதி இயக்கவிருக்கும் ‘யகன்’ என்ற படத்தில் ஓநாய்களை நடிக்க வைக்க இருக்கிறார்கள். இது தவிர இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’. இதில் ‘கருப்பி’ என்ற கதாநாயகனின் செல்லநாயைச் சுற்றியே கதை நகர்கிறது.

பாலாவின் நாயகி

தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தைத் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்து இயக்கிவருகிறார் பாலா. இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ்வைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். துருவ்வுக்கு ஜோடியாக நடிக்க பல புதுமுகங்களைத் தேடி வந்த நிலையில் தற்போது மேற்கு வங்க நாடக நடிகை, கதக் நடனக் கலைஞர், மாடல் என பன்முகம் கொண்ட மேகா சௌத்ரியை தேர்வு செய்திருக்கிறார். கொல்கத்தாவில் பிறந்த வளர்ந்த மேகா, ஒரு வங்கப்படம் இரு தெலுங்குப் படங்கள் உட்பட இதுவரை மூன்று படங்களில் நடித்துவிட்டார்.

“எப்போதுமே அப்பா தான் சாக்லேட் பாய்” - கவுதம் கார்த்திக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x