Published : 25 Aug 2014 10:00 AM
Last Updated : 25 Aug 2014 10:00 AM

பாலைவனத்தைச் சாப்பிட முடியுமா?

பல வருடங்களுக்குமுன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்தேன். அப்போது Buffet விருந்தைச் சாப்பிட்டு முடித்தவுடன் ஒருவர் வந்து “Dessert சாப்பிடவில்லையா?’’ என்றார். பாலைவனத்தைச் சாப்பிட முடியுமா? என்று மலைத்துப்போனேன். “வாயைக் காட்டு’’ என்று யசோதை சொன்னவுடன் திறந்த கண்ணனின் வாயில் உலகமே தெரிந்ததே, அதுபோல நம் வாயிலும் சஹாரா, கோபி, தார் எல்லாமே தெரியுமோ என விபரீத எண்ணங்கள் வேறு வந்தன.

இப்படி எண்ணம் தறிகெட்டு ஓடியதற்குக் காரணம் Desert என்ற வார்த்தைக்கும் Dessert என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசத்தை அப்போது நான் அறியாததுதான். Desert என்பது பாலைவனம் - ஐந்து வகை நிலங்களில் – மணலும், மணலைச் சார்ந்த இடமும்.

Dessert என்பது உணவின் கடைசிப் பகுதி (அப்படியானால் நம் தென்னிந்திய உணவில் மோர் சாதம்தான் Dessertஆ என்று கேட்டு விடாதீர்கள்) பஃபே பார்ட்டிகளில் இறுதியில் எடுத்துக்கொள்ளப்படும் பழங்கள், ஸ்வீட் மற்றும் ஐஸ்க்ரீம் ஆகியவைதான் பொதுவாக Dessert எனப்படுகின்றன.

எண்ணக்கூடிய பெயர்கள்

“எண்ணிப் பார்க்கக்கூடிய ஒன்றைச் சொல்லுங்கள்’’ என்றேன் ஒரு நண்பரிடம்.

“ஒன்றென்ன? நிறையச் சொல்வேன். மத்தவங்க நமக்குச் செய்த நன்மையை எண்ணி எண்ணிப் பார்ப்பதுதான் நல்லது’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

Think என்கிற பொருளில் வரும் எண்ணிப் பார்ப்பது அல்ல, Count என்கிற பொருளில் வருகிற எண்ணிப் பார்ப்பது என்று விளக்கினேன்.

Nouns களைத்தான் Count செய்ய முடியும். ஏனென்றால் அவற்றுக்குத்தானே ஒருமை, பன்மை?

உங்கள் குடும்பத்தில் எவ்வளவு பேர்? (உங்கள் செல்ல நாயைச் சேர்த்துக் கொள்வது உங்கள் இஷ்டம்).

இந்தக் கேள்விக்கு ஏதோ ஒரு எண்ணைப் பதிலாகத் தர முடியும் அல்லவா?

இந்தக் கட்டுரையில் எவ்வளவு வார்த்தைகள்? இந்தக் கேள்விக்கும் உங்களால் ஏதோ ஒரு எண்ணைப் பதிலாகத் தர முடியும். (அதற்காகக் கட்டுரையில் உள்ள வார்த்தைகளை எண்ணிக்கொண்டிருக்காதீர்கள்).

இப்படி எண்ணக்கூடிய Nouns

எ​ல்லாம் Countable Nouns.

எண்ணமுடியாத பெயர்கள்

எண்ண முடியாத Nouns கூட உண்டா என்கிறீர்களா? ஏன் இல்லை? Water கூட ​Nounதான். அதை எண்ண முடியுமா?

“முடியுமே. நான்கு பக்கெட் தண்ணீர் எனலாமே’’ என்கிறீர்களா? நான்கு பக்கெட் தண்ணீர் எனும்போது நீங்கள் எண்ணுவது பக்கெட்டைத்தான், தண்ணீரை அல்ல.

“ஐம்பது லிட்டர் தண்ணீர் என்று சொல்லலாமே’’ என்கிறீர்களா? சரிதான். ஆனாலும் தண்ணீரை அளக்க முடியுமே தவிர, எண்ண முடியாது. We Can Measure Water. But We Cannot Count Water.

சிலவற்றை எண்ண முடியும். சிலவற்றை எண்ண முடியாது. இப்போது அதற்கு என்ன?

இந்த வேறுபாட்டை உணர்ந்து கொண்டு சரியான வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் விஷயம்.

Few வும் Less ம்

இப்போது கீழே உள்ள நான்கு வாக்கியங்களையும் ஆங்கிலப்படுத்துங்கள்.

1. நாற்காலிகள் கொஞ்சமாக இருக்கின்றன.

2. தண்ணீர் குறைவாக இருக்கிறது.

3. ஐம்பதுக்கும் குறைவான நபர்களே இருந்தனர்.

4. அவனுக்குக் குறைவான அறிவுத் திறன்தான்.

கொஞ்சமான, குறைவான என்ற வார்த்தைகளுக்கு இணையாக நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் எவை? Few? Less? ஒரே அர்த்தம் கொண்டவைதான். ஆனால் எதை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதில் வேறுபாடு இ​ருக்கிறது.

1. There Are A Few Chairs.

2. Water Is Less.

3. There Were Fewer Than Fifty Persons.

4. He Has Less Intelligence.

இரண்டு வாக்கியங்களில் Few என்ற வார்த்தையையும் மற்ற இரண்டு வாக்கியங்களில் Less என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

Few என்பதை Countable Nounக்குப் பயன்படுத்த வேண்டும். I Have Only A Few Pens என்பதுபோல.

Less என்பதை Non-Countable Nounக்குப் பயன் படுத்துவோம். There Is Less Water In The Pot என்பதுபோல.

Few–ம் A Few-ம்

இந்த இடத்தில் வேறொன்றையும் தெரிந்து கொள்வோமே. எப்போது Few? எப்போது A Few?

ஆங்கில மரபுப்படி குறைவான என்றால் A Few. எதுவுமே இல்லையென்றால் Few.

அதாவது A Few Decisions Were Taken At The Meeting என்றால் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்று அர்த்தம். மாறாக Few Decisions என்று மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அர்த்தம்.

அதேபோல அதிகமான என்பதற்கும் இரண்டு விதமான வார்த்தைகள் உண்டு. More, Much. இவற்றில் More என்பதைக் Countable Nounக்கும், Much என்பதை Non-Countable Nounக்கும் பயன்படுத்த வேண்டும். I Have More Pens. There Is Much Water In The Pot.

பாடல் வரிகளின் விடை

சென்ற முறை சில தமிழ்திரைப்படப் பாடல்களின் தொடக்க வரிகளை ஆங்கிலத்தில் அளித்திருந்தேன். விடைகள் இதோ:-

1. Are You Well? – நலந்தானா? (உடலும் உள்ளமும் நலந்தானா?)

2. Are You Well My Dear? – சவுக்கியமா கண்ணே (சவுக்கியமா?)

3. Hi Dear, Are You Well? – என்னம்மா கண்ணு சவுக்கியமா?

மேலும் சில பாடல் வரிகளை நீங்களே ஆங்கிலப்படுத்திப்பாருங்கள்.

தொடர்புக்கு:

(aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x