Last Updated : 17 Apr, 2018 10:38 AM

 

Published : 17 Apr 2018 10:38 AM
Last Updated : 17 Apr 2018 10:38 AM

புதுத் தொழில் பழகு 01: சோளம் தந்த செழிப்பு

டித்து முடித்ததும் வேலையில் சேர்வதுதான் இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். இவர்களுள் சிலருக்குத்தான் வேலை வாய்ப்பை நாமே உருவாக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படியானவர்களுள் ஒருவர்தான் ராஜேஷ்குமார். சேலத்தைச் சேர்ந்த இவர், ஒரு புதுமையான தொழில் மூலம் இன்றைக்குப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார். ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரையும் உருவாக்கியிருக்கிறார்.

Cobrightமுதலில் விவசாயம்

சேலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமாரின் தந்தை கடை நடத்திவந்துள்ளார். அவர்களுக்குச் சொந்தமாக விவசாய நிலமும் இருந்தது. 1997-ல் ராஜேஷ், கோயம்புத்தூரில் தனது கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு என்ன செய்யலாம் என யோசித்துள்ளார். வேலை தேடிச் செல்வதில்லை என்பதில் உறுதியாக இருந்துள்ளார். தொழில் என்றதும் புதிய புதிய இயந்திரங்கள் வாங்கி உற்பத்திசெய்யவும் அவர் விரும்பவில்லை. தனது ஊருக்கும் கையிருப்புக்கும் தகுந்தாற்போல தொழில்செய்யவே விரும்பினார். ஊருக்குப் பொருத்தமான தொழில் விவசாயம், கையிருப்புக்கு விவசாய நிலம் இருந்தது. அதனால் முதலில் விவசாயத்தில் இறங்கிவிட்டார். அப்போது அவருக்கு வயது 24.

அவரது தந்தையின் கடையில் விற்கும்படியான காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கினார். முதலில் தொழில் நன்றாக நடந்தது. ஆனால் சில நாட்களில் ‘காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம்’ என்ற பாட்டு வரியைப் போல் விவசாயத்தில் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது. வருமானம் இல்லை. சில நேரம் நஷ்டம் வந்தது. இப்படித்தான் விவசாயிகள் பெரும்பாலானோர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை ராஜேஷ் தன் சொந்த அனுபவத்தின் வழி உணர்ந்துள்ளார். இதற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதைத் தன் அடுத்த இலக்காகக் கொண்டார்.

Photo_KMSRAjeshKumar ராஜேஷ்குமார் தித்திக்கும் தொழில்!

அப்படித்தான் இனிப்புச் சோளம் (Sweet Corn) எனப்படும் புதிய சோள வகை வெளிநாட்டுக்குச் சென்ற அவரது நண்பர் மூலம் அறிமுகமானது. அவரிடமிருந்து அதற்கான விதைகளை வாங்கியுள்ளார். வழக்கமான காய்கறிகளுக்கு மாற்றாக இதை விளைவிக்க முடிவெடுத்துள்ளார். இனிப்புச் சோளம் 1997-ல் தமிழ்நாட்டில் அவ்வளவு பிரபலமாகவில்லை. இந்தப் புதிய தொழில் அவருக்கு வெற்றியைக் கொடுக்கும் என நம்பிக்கை கொண்டார். அதன்படி இனிப்பு மக்காச் சோளத்தைப் பயிரிட்டுள்ளார். அதற்கு ‘ஃபார்ம் ஹார்வெஸ்ட்’ என அதைப் பிராண்டிங் செய்துள்ளார். அதைச் சிறிய அளவில் சேலம், கோயம்புத்தூர் கடைகளில் விற்றுள்ளார். அது சிறு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

ஆனால் அதிலும் சில சிக்கல்கள் வந்துள்ளன. இனிப்புச் சோளம் இரு நாட்களுக்குள் கெட்டுப் போய்விடும். இதனால் கடைகளில் இருப்பிலிருக்கும் இனிப்புச் சோளம் கெட்டுப் போய் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் சில கடைகளில் விநியோகித்த இனிப்புச் சோளத்தைத் திரும்ப எடுக்க வேண்டி வந்திருக்கிறது. ஆனால், அவர் தளர்ந்துவிடவில்லை. இதை எப்படிச் சரிகட்டுவது எனப் பல வழிகளில் தேடியுள்ளார். மைசூரிலும் பெங்களூருவிலும் உள்ள உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்களுக்குச் சென்று ஆலோசனை கேட்டுள்ளார்.

அப்படித்தான் இனிப்புச் சோளத்தைக் கெடாமல் பாதுகாப்பதற்கான புதிய பேக்கிங் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார். அந்த முறையைப் பயன்படுத்தி இனிப்புச் சோளத்தைச் சந்தைப்படுத்தியுள்ளார். அது அவருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தந்தது.

இன்றைக்கு இவரது நிறுவனமான ‘ஸ்ரீ ஜெயஸ்ரீ ஃபுட் புராடெக்ட்ஸ்’, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா எனத் தன் சந்தையை விரித்துள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இதில் பணியாற்றுகிறார்கள். பல முன்னணி பல்பொருள் அங்காடிகளில் இவரது இனிப்புச் சோளம் கிடைக்கிறது. இவரது நிறுவனத்தின் மூலம் விவசாயிகள் ஆயிரம் பேர் பயனடைகிறார்கள். அது மட்டுமல்லாமல் இனிப்புச் சோள இயந்திரங்கள் மூலம் இளைஞர்கள் ஆயிரம்பேருக்குத் தொழில் வாய்ப்புள்ளது. இனிப்புச் சோளத்தை மசாலா கலந்து தயாரிக்கும் சிறிய வடிவ இயந்திரங்களை குறைந்த தொகைக்கு இளைஞர்களுக்குத் தருகிறார்கள். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறார்கள்.

தோல்வியைத் துணிந்து எதிர்கொண்டது, தன் சூழலைப் புரிந்துகொண்டது, புதிய தொழிலைக் கண்டுபிடித்தது இவையெல்லாம் ராஜேஷ்குமாரின் வெற்றிக்கான காரணங்கள். அதனால்தான் 1997-ம் ஆண்டு மாதம் ரூ.15,000 முதலில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் மாத வருமானம் பல லட்சங்களைத் தாண்டியிருக்கிறது.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x