Published : 25 Jun 2018 10:55 AM
Last Updated : 25 Jun 2018 10:55 AM

ஸ்மார்ட்போன் விற்பனையில் சீனா ஆதிக்கம்

20

14-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் ஷென்ஜென் நகரில் தனது முதலாவது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது அந்த நிறுவனம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மட்டுமே குறிவைத்து தயாரிக்கப்பட்டது இந்த ஸ்மார்ட்போன். சீன தயாரிப்புகள் என்றால் மலிவானவை, அவற்றுக்கு உத்தரவாதம் கிடையாது என்ற எண்ணத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக பிரீமியம் தயாரிப்பாக இவற்றை வெளியிட்டது.

ஆனால் நான்கே மாதங்களில் மிகப் பெரிய சந்தை வாய்ப்புள்ள இந்தியாவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என வருந்தியது அந்நிறுவனம். அந்நிறுவனம்தான் ஒன் பிளஸ். 2014-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யாதபோது, ஆன்லைன் மூலம் இந்தியாவில் கூடுதலாக ரூ.4 ஆயிரம் சுங்க வரி செலுத்தி ஒன் பிளஸ் போனை வாங்கியவர்கள் அதிகம்.

இந்தியாவில் தங்கள் தயாரிப்புகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையானது நிறுவனர்களுக்கு மிகுந்த வியப்பை அளித்தது. கூடுதல் தொகை கொடுத்து தங்கள் தயாரிப்புகளை நம்பி வாங்கிய இந்திய சந்தையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என்ற வருத்தத்தில் இந்திய சந்தையில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது.

இப்போது ஒன்பிளஸ் நிறுவன விற்பனை வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்திய விற்பனை மூலம் கிடைக்கிறது. இந்தியாவில் தங்களது சந்தையை விரிவுபடுத்த ஒன்பிளஸ் 6 அறிமுகத்தை சமீபத்தில் மும்பையில் பிரம்மாண்டமாக நிகழ்த்தியது இந்நிறுவனம். நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக அமிதாப் பச்சனை நியமித்து மேலும் பிரபலப்படுத்தி வருகிறது இந்நிறுவனம்.

கடந்த மே 21-ம் தேதி விற்பனைக்கு வந்த ஒன் பிளஸ் 6 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனை ஆன்லைனில் தொடங்கிய 10 நிமிடத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் காலதாமதமாக நுழைந்த சீன நிறுவனங்கள் இப்போது சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. இதற்கு அந்தஸ்தை பறைசாற்றும் அம்சமாகவும் ஸ்மார்ட்போன் மாறிவிட்டதும் ஒரு காரணமாகும்.

ஜியோமி (30.3%), ஓப்போ (7.4%), விவோ (6.7%), டிரான்சியன் (4.56%) உள்ளிட்ட சீன தயாரிப்புகள் மட்டுமே இந்திய சந்தையில் 49 சதவீத சந்தையை ஆக்கிரமித்துள்ளன. கொரியாவின் சாம்சங் நிறுவனம் 25.1 சதவீதத்தையும், மற்ற பிராண்டுகள் 25.9 சதவீதத்தையும் கைப்பற்றியுள்ளன.

பிரீமியம் ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில் அமெரிக்காவின் ஆப்பிள் பிராண்ட் 3 சதவீதத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்து 1.5 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது சீனாவின் ஒன் பிளஸ். நான்கே ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.

இதில் ரூ. 30 ஆயிரத்துக்கும் மேலான பிரீமியம் பிராண்டுகள் விற்பனை 4 சதவீதம்தான். ஆனால் இத்தகைய போன் தயாரிப்பு மூலம் நிறுவனங்கள் 45 சதவீத அளவுக்கு லாபம் ஈட்டுகின்றன. அதுவும் தவிர இந்திய ஸ்மார்ட்போன் சந்தை ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியை எட்டி வருகிறது.

1,000 செல்போன்கள் விற்று கிடைக்கும் லாபத்தை விட ஒரு ஸ்மார்ட்போன் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கிறது. சீன தயாரிப்புகள் என்றாலே மலிவானவை என்ற மாயை மறைந்து தரமான தயாரிப்புகளும் சீனாவிலிருந்து வரும் என்பதற்கு அதி நவீன ஸ்மார்ட்போன்களே உதாரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x