Last Updated : 24 Jun, 2018 12:19 PM

 

Published : 24 Jun 2018 12:19 PM
Last Updated : 24 Jun 2018 12:19 PM

வண்ணங்கள் ஏழு 10: வாழ்வில் வண்ணமேற்றும் ‘நிறங்கள்’!

ந்தத் தொடரை வாசிக்கும் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர். அவர்களில் மாற்றுப் பாலினத்தவர் மற்றும் மாற்றுப் பால் ஈர்ப்பு கொண்ட சிலர் பகிர்ந்துகொண்டதை இங்கே பார்க்கலாம்.

கோவையைச் சேர்ந்த விவேக், சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மாணவர். பள்ளி நாட்களிலேயே அவருக்கு ஆண் நண்பர்கள் மீதே ஈர்ப்பு இருந்திருக்கிறது. மென்மையான உடல்மொழியால் நண்பர்களின் வசைச் சொற்களுக்கும் ஆளாகியிருக்கிறார். கல்லூரியில் சேர்ந்து இரண்டு ஆண்டு சிரமத்துக்குப் பிறகுதான் இந்தச் சமூகம் கற்பித்திருக்கும் ஆணுக்கான முகமூடியை அணியப் பழகியிருக்கிறார். அதன் பிறகே அவர் மீதான விமர்சனங்கள் குறைந்தன. நம் குடும்பத்தினரிடமோ நண்பர்களிடமோ நம் பாலினத்தைப் பற்றியோ பால் ஈர்ப்பைப் பற்றியோ சொல்வதற்கு முன் அவர்களைத் தயார்படுத்தும் சில யோசனைகளை அவர் சொல்கிறார்.

திருமணம் வேண்டாமே

“என் பால் ஈர்ப்பு குறித்து யாரிடமாவது சொல்ல விரும்பினால் முதலில் அது குறித்த சில அறிவியல் உண்மைகளைத் தெளிவுபடுத்துவேன். பிறகு சில காணொலிக் காட்சிகள், இணையம் மூலமாகவும் விளக்குவேன். அதன் பிறகு என்னைப் பற்றி அறிவிப்பேன். இதுவரை இப்படித்தான் செய்துவருகிறேன். இந்த அணுகுமுறை வெற்றியும் பெற்றிருக்கிறது.

என் ஆராய்ச்சிப் பணிகளுக்கு நடுவே என்னைப் போன்ற மாற்றுப் பால் ஈர்ப்பு கொண்டவர்களின் சுதந்திரத்துக்கான செயல்களிலும் ஈடுபட்டுவருகிறேன். அது குறித்துப் புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

என்னைப் போன்றவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் முதல் செய்தி தற்சார்புடன் வாழப் பழகுங்கள் என்பதே. பொருளாதாரத் தற்சார்ப்பு அவசியம். உங்கள் பால் ஈர்ப்பு குறித்து வெளியில் சொல்வதை படித்து முடிக்கும்வரை தவிர்க்கலாம். அதுவரை அன்பும் அரவணைப்பும் தேவைப்பட்டால் இணையத்தில் இதற்கென இருக்கும் குழுக்களையோ தொண்டு நிறுவனங்களையோ அணுகலாம். மேலும் தங்கள் பால் ஈர்ப்பை மறைத்துத் திருமணம் செய்துகொள்வது தவறு. இதனால் இருவரது தனிப்பட்ட நிம்மதி மட்டுமல்ல; இரு குடும்பங்களின் நிம்மதியும் பாதிக்கப்படும்” என்றார் விவேக்.

முதல் கவுன்சலர்

விவேக்கைப் போல மாற்றுப் பால் ஈர்ப்பில் விருப்பம் கொண்டவர்களுக்கும் மாற்றுப் பாலினத்தவருக்கும் பல ஆண்டுகளாக ஆலோசனை வழங்கிவருபவர் திருநங்கை சங்கரி. தமிழகத்தில் தொழில்முறை அமைப்பின் மூலம் கவுன்சிலிங் பயிற்சிபெற்ற முதல் திருநங்கையும் இவரே. பாலினம் மற்றும் பால் ஈர்ப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களை இவர் ஒருங்கிணைத்து வருகிறார்.

மற்ற மாற்றுப் பாலினக் குழந்தைகளுடையதைப் போலவே சங்கரியின் குழந்தைப் பருவமும் துயரம் நிறைந்ததாக இருந்தது. எட்டு வயதுக்கு முன்பே தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை சங்கரி உணர்ந்துகொண்டார். ஆசிரியர்கள்கூட சங்கரியைக் கிண்டல் செய்ததோடு பெண்ணைப் போல் நடக்காதே எனக் கடிந்துகொண்டனர்.

ஆசிரியர்கள், சக மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். சங்கரியின் பெற்றோரும் அவருக்குள் ஏற்பட்ட மாற்றத்தைப் புரிந்துகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பிரச்சினைகள் அதிகரிக்க, வீட்டை விட்டு வெளியேறினார். திருநங்கை நண்பர்களுடன் வசிக்கத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் தன்னுடன் இருந்த பிற திருநங்கைகளைப் போலவே பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் போன்றவற்றில் சங்கரி ஈடுபட்டார்.

உதித்தது ‘நிறங்கள்’

சிறிது காலத்துக்குப் பிறகு சகோதரன், சென்டர் ஃபார் கவுன்சலிங் மற்றும் சங்கமா போன்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சங்கரி செயல்படத் தொடங்கினார். இது அவருக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்தது.

எல்.ஜி.பி.டி.ஐ.க்யூ. மக்களின் உரிமைக்காகவும் நலன்களுக்காகவும் உழைக்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்த சங்கரி, சிவகுமார் என்பவருடன் இணைந்து ‘நிறங்கள்’ அமைப்பைத் தொடங்கினார்.

பெண்களுக்குத் தனித்துவ சேவை

திருநங்கைகளுக்காக சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டுவந்த நிலையில், பாலினம், பால் ஈர்ப்பு அடையாளங்களுக்காக ஒடுக்கப்படும் அனைவருக்காகவும் செயல்படும் அமைப்பாக ‘நிறங்கள்’ உருவானது. பிரச்சினைகளின் போது உதவுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சட்ட ரீதியான உதவிகள் வழங்குவது போன்றவை இந்த அமைப்பின் முக்கியப் பணிகள்.

எதிர் பாலின ஆதிக்கமும் ஆணாதிக்கமும் மிக்க இந்தச் சமூகத்தில் தன்பால் ஈர்ப்பு, இருபால் ஈர்ப்பு கொண்ட பெண்களும் திருநம்பிகளும் தங்கள் சுயஅடையாளங்களை வலியுறுத்துவது கடினமானதாக மாற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோரால் பெண்ணாக மட்டுமே பார்க்கப்படுகின்றனர். இவர்கள் மீதான திருமண அழுத்தமும் அதிகம். ‘நிறங்கள்’ அமைப்பு நடத்திய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சங்கரி தனிப்பட்ட வாழ்வில் தான் எதிர்கொண்ட பல்வேறு ஒடுக்குமுறைகள் குறித்தும் பிற திருநங்கைகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்தும் குறிப்பாக லெஸ்பியன், திருநம்பிகளின் பிரச்சினைகளுக்காக சங்கரி பேசியுள்ளார்.

பிறப்பால் ஆணாக இருப்பதால் கிடைக்கும் சிறப்புரிமைகளை ஒப்புக்கொள்ளும் சங்கரி, பாலினம் மற்றும் பால் ஈர்ப்பு ஆகியவற்றின் மேலாதிக்க விதிகளோடு ஒத்துப்போகாத, பிறப்பால் பெண்ணாக இருப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கவனப்படுத்தி வருகிறார்.

‘10-வது வானவில் சுயமரியாதைப் பேரணி’ நடக்கவிருக்கும் இந்நாளில், ஒட்டுமொத்த மாற்றுப் பாலின மற்றும் பால் ஈர்ப்பு கொண்ட மக்களின் நலன்களுக்காக முனைப்போடு போராடும் சங்கரிக்கும் ‘நிறங்கள்’ அமைப்புக்கும் இது கொண்டாட்ட தருணம்.

(புரிந்துகொள்ள முயல்வோம்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

பெண்மை

இருபது வயதைத் தாண்டிய போது

எனக்குள்ளிருந்த பெண்மை

எழுந்துவிட

மோகனாக இருந்த நான்

மேனகாவாகி

சேலை அணிந்த போது

வெறுத்து

வீட்டை விட்டு

வெளியேற்றிவிட்டார்கள்

ஆணாகப் பிறந்த என்னை

ஐந்து வயதாக இருக்கும்போது

மொட்டை அடிக்க விடப்பட்ட

முடியை

இரட்டைச் சடையாகப் பின்னி

பக்கத்துவீட்டு புஷ்பாவின்

பாவாட சட்டையைக்

கடன் வாங்கி

போட்டோ பிடித்து

சுவரில் மாட்டி

அழகு பார்த்த

அப்பா அம்மா

- பொன்.குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x