Published : 17 Jun 2018 11:13 AM
Last Updated : 17 Jun 2018 11:13 AM

பார்வை: வகுப்பறை மட்டும்தான் பள்ளியா?

 

பு

திய பாடப்புத்தகங்களின் அச்சு மை வாசம் இந்நேரம் குழந்தைகளுக்குப் பழகியிருக்கும். புதிதாகப் பள்ளியில் சேர்ந்த குழந்தைகள், அழுகை மறந்து இயல்புக்குத் திரும்பியிருக்கக்கூடும். இந்த ஆண்டுக்கான கல்விப் பயணத்தைக் குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோரும் ஆசிரியர்களும் தொடங்கியிருப்பார்கள். கோடை விடுமுறையில் விரித்த சிறகுகளைப் பல குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருக்கிப் பள்ளி, படிப்பு, வீட்டுப்பாடம், டியூஷன், கோச்சிங் வகுப்பு என ஒடுங்கத் தொடங்கியிருப்பார்கள்.

school-3வெறும் இயந்திரமல்ல

கல்வியை நேரடியாக வயிற்றுப்பாட்டுடன் இணைத்துப் பார்க்கத் தொடங்கி பல காலம் ஆகிவிட்டது. குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மட்டுமே வார்த்தெடுக்க முயல்கிறோம். தங்கள் குழந்தைகள் அனைத்திலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, பந்தயக் குதிரைகளைப் போல அவர்களைத் தயார் செய்யும் பெற்றோர் இங்கு அதிகம்.

‘அவனைப் போல படி’, ‘இவளைப் போல முன்னேறு’ என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளின் தனித்தன்மையைச் சிதைத்துவிடுகிற பெற்றோர் பலர் உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை அறியாமல் தங்களின் கனவுகளை அவர்கள் மேல் திணிப்பார்கள். குழந்தை நடக்கத் தொடங்கியதுமே பள்ளியில் சேர்ப்பதும், எழுதத் தொடங்கியதுமே போட்டித் தேர்வுப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதும் கொடுஞ்செயல் என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்குக் குழந்தைகளைத் தயார்செய்யும் நோக்கில் எப்போதுமே அவர்களை புத்தகமும் கையுமாக இருக்கச் செய்வதும் நடக்கிறது. நாள் முழுக்க எப்படி ஒருவரால் படித்துக்கொண்டே இருக்க முடியும்? காலை இடைவேளை, உணவு இடைவேளை தவிர குழந்தைகளுக்குப் போதுமான ஓய்வுநேரம் இருப்பதில்லை. விளையாட்டுக்கு என வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாட்களையோ ஒதுக்கினாலும், உயர் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விளையாட்டு வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் பெற்றுப் பாடம் நடத்துவார்கள்.

வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் இளைப்பாற நேரம் கொடுக்காமல் வீட்டுப்பாடம் எழுதவோ மற்ற பயிற்சி வகுப்புகளுக்கோ அனுப்புகிற பெற்றோரும் உண்டு. நிற்கக்கூட நேரமில்லாமல் குழந்தைகளை இப்படி விரட்டிக்கொண்ட இருக்கிற நாம்தான், ‘உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே’ என்று அவர்களை மனப்பாடம் மட்டும் செய்யச் சொல்கிறோம்.

நெறியும் வேண்டும்

கல்வி என்பது சொற்களையும் எண்களையும் மனப்பாடம் செய்கிற எல்லையோடு பல நேரம் முற்றுப்பெற்றுவிடுகிறது. அந்த எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் செயல்வழிக் கற்றல் முறை, புதிய பாடத்திட்டம், தொடுதிரைவழிக் கல்வி எனப் பலவற்றை அரசு அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதை மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்கும் அளவுக்கு ஆசிரியர்கள் செயல்படுகிறார்களா என்பதையும் பொறுத்துதான் மாணவர்களின் அறிவு வளர்ச்சி அமையும். பாடப் புத்தகங்களில் இருக்கிற தகவல்கள் தவிர பொது அறிவு, அரசியல், சமூகம் குறித்த எந்த அறிவும் குழந்தைகளுக்குத் தேவையில்லை என்பதைத்தான் பாடத் திட்டத்தை வடிவமைக்கிறவர்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள்போல.

அரசுப் பள்ளிகளில் மதிப்புக் கல்வி வகுப்பு இருக்கிறது. ஆனால், அதற்கெனத் தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா, பாடப் புத்தகம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. பல பள்ளிகளில் நன்னெறிக் கல்வி, நீதிபோதனை வகுப்புகளுக்கு இடமில்லை. உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்ட இந்நாளில் குழந்தைகள் தடம்மாற ஆயிரம் வாசல்கள் திறந்திருக்கின்றன. அவர்களை இதுபோன்ற பாடம் சாராத நன்னெறி வகுப்புகளின் வாயிலாக ஓரளவாவது நேர்படுத்தலாம் என்பதையும் ஆசிரியர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

கழிவறைகள் கட்டாயம்

எனக்குத் தெரிந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட ஆறு லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்வார். பள்ளியில் தண்ணீர் வருவதில்லை என்பதால் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவவும் குடிக்கவும் இவ்வளவு தண்ணீர் தேவைப்படுவதாகச் சொன்னார். மாணவர்களின் நிலை? “அதை ஏன் கேட்கறீங்க. குழந்தைங்க சத்துணவு சாப்பிட்டுவிட்டுத் தட்டை எடுத்துக்கிட்டுத் தெருக்குழாய்க்கோ பக்கத்துல இருக்கற வீடுகளுக்கோ போவாங்க. பார்க்கவே கஷ்டமா இருக்கும். என்ன செய்ய?” என்றார். கழிவறை குறித்துக் கேட்டபோது, “குடிக்கவே நல்ல தண்ணி இல்லை. இதுல பாத்ரூமுக்கு எங்க போக?” என நொந்துகொண்டார்.

school-4right

வகுப்பறைகள் மட்டுமல்ல, அந்தக் கட்டிடத்தோடு இணைந்த கழிவறைகளும் சேர்ந்த கட்டுமானமே பள்ளி. ஆனால், படிப்புக்குத் தருகிற முக்கியத்துவத்துவத்தில் கொஞ்சத்தைக்கூட கழிவறைகளுக்கு நம் சமூகத்தில் கொடுப்பதே இல்லை. இதில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற பாகுபாடெல்லாம் இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் போதுமான கழிவறைகள் இருப்பதில்லை. ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படிக்கிற பள்ளிகளில் பத்து, இருபது கழிவறைகள் மட்டுமே இருப்பது மாணவர்களின் உடல்நலக் கேட்டுக்கு வழிவகுக்கும்.

இப்படிச் சுகாதாரமற்ற, தண்ணீர் இல்லாத கழிவறைகளால் பல மாணவர்கள் சிறுநீரை அடக்கிவைக்கப் பழகிவிடுகின்றனர். மாலை வீடு திரும்புவதுவரை அவர்கள் முறையாகத் தண்ணீரும் குடிப்பதில்லை. போதுமான தண்ணீர் குடிக்காமல் எட்டு மணி நேரத்துக்கும் மேல் இயற்கை உபாதையை அடக்கிவைப்பதால் நோய்த்தொற்றில் தொடங்கி சிறுநீரகச் செயலிழப்புவரை ஏற்படக்கூடும் என்பதை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. இருந்தாலும் கழிவறை விஷயத்தில் அதிகாரிகளும் பெற்றோரும் அசட்டையாகவே இருக்கின்றனர். தங்கள் குழந்தைகளின் மதிப்பெண் குறித்துக் கவலைப்படும் பல பெற்றோர், அவர்களின் ஆரோக்கியம் குறித்த அக்கறையின்றி இருக்கிறார்கள்.

அதற்கு சிறந்த உதாரணம் கழிவறை பிரச்சினையால் மாதவிடாய் நாட்களில் மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாவதுதான். குறிப்பிட்ட இடைவேளையில் மாதவிடாய் துணியையோ நாப்கினையோ அவர்களால் மாற்ற முடிவதில்லை. இதனாலேயே பல மாணவிகள் மாதவிடாய் நாட்களில் விடுப்பு எடுத்துக்கொள்கிறார்கள். கிராமங்களிலோ நிலைமை இன்னும் மோசம். பெண் குழந்தைகள் பருவம் அடைந்ததுமே பள்ளியை விட்டு நிறுத்திவிடுவது இன்னும் தொடர்கிறது. குழந்தைகள் பள்ளி இடைநிற்றலுக்கான காரணங்களில் ஒன்றாக மாதவிடாயும் சொல்லப்படுவதை எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது. குழந்தைகளின் கல்விக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் பள்ளிதானே பொறுப்பேற்க வேண்டும்?

குழந்தைகளுக்குக் கல்வியையும் நல்லொழுக்கத்தையும் கற்பிப்பதோடு ஆரோக்கியமான சூழலும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் பொறுப்பும் கடமையும். இவை குழந்தைகளுக்குக் கிடைக்கின்றனவா எனத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இப்படி அனைத்தும் இணைந்தால்தான், ஆரோக்கியமான உடலும் அறிவுபூர்வமான அணுகுமுறையும் கொண்ட மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் நமக்கு வாய்ப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x