Published : 14 May 2018 11:07 AM
Last Updated : 14 May 2018 11:07 AM

சுங்க வரி குறைப்பால் அதிகரிக்கும் சூப்பர் பைக் விற்பனை

ஒரு மோட்டார் சைக்கிளின் விலையில் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு சிறிய ரக கார்களை வாங்கி விட முடியும். ஆனாலும் இத்தகைய சூப்பர் பைக்குகள் மீதான மோகம் குறையவே குறையாது. தற்போது இத்தகைய சூப்பர் பைக்குகள் மீதான சுங்க வரியும் குறைக்கப்பட்டு விட்டதால் இவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது.

500 சிசி மற்றும் அதற்கும் மேற்பட்ட திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீது முன்னர் 25 சதவீதமாக இருந்த சுங்க வரி தற்போது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் இறக்குமதி அதிகரித்துள்ளதோடு விற்பனையும் இரட்டை இலக்கமாக உயர்ந்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் மற்றும் டிரையம்ப் உள்ளிட்ட வாகனங்கள் இறக்குமதி அதிகரித்துள்ளது. பொதுவாக உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை இங்கு அசெம்பிள் செய்து விற்பனை செய்வது வழக்கம். மாறாக அங்கிருந்து முழுமையான மோட்டார் சைக்கிளாக இறக்குமதி செய்தாலும் அதற்கு 5 சதவீதம்தான் இறக்குமதி என்று அறிவிக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளாக இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சூப்பர் பைக் விற்பனை மந்த கதியில் இருந்தது. ஆனால் தற்போது இது சூடுபிடித்துள்ளது.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இத்தகைய சூப்பர் பைக்குகளின் விற்பனை 12 சதவீதம் அதிகரித்து 1,391 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 1,000 சிசி திறனுக்கு மேற்பட்ட வாகனங்களின் விற்பனை 40 சதவீதம் அதிகரித்து 500 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆண்டுக்கு 7 ஆயிரம் சூப்பர் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பெல்லாம் 800 சிசி மற்றும் அதற்குக் குறைவான மோட்டார் சைக்கிளுக்கு 60 சதவீதம் சுங்க வரி விதிக்கப்பட்டிருந்தது. 800 சிசி திறனுக்கு மேலான வாகனங்களுக்கு 75 சதவீதம் சுங்க வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த இரு பிரிவுகளுக்கும் சுங்க வரி 50 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவித்தது. இதனால் இவற்றின் விலை ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை குறைந்தது. அதேபோல இன்ஜின், கியர் பாக்ஸ் உள்ளிட்டவை அப்படியே இறக்குமதி செய்யப்பட்டால் அவற்றின் மீதான சுங்க வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தாராள வர்த்தக ஒப்பந்தம் அமலில் உள்ள தாய்லாந்திலிருந்து மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்தால் அதற்கு வரி கிடையாது. உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு 15 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. உள்ளூரில் தயாரிப்பதைக் காட்டிலும் இறக்குமதி செய்வதே லாபகரமானதாக இருக்கும் என்று வெளிநாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x