Published : 26 May 2018 11:45 AM
Last Updated : 26 May 2018 11:45 AM

அந்தக் கரங்களுக்கு ஆயிரம் நன்றி!

ருத்துவமனைகள் தோறும் அந்தக் காட்சியைப் பார்க்க முடியும். நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘எப்படியாவது அவரைக் காப்பாத்திடுங்க டாக்டர்!’ என்று நா தழுதழுப்பார்கள். அந்த மருத்துவர் அறுவைசிகிச்சைக்கான நீல நிற அல்லது பச்சை நிற உடையை அணிந்திருப்பார். தன் கரங்களைப் பிடித்துக் கெஞ்சும் மனிதர்களின் தோளில் ஆதரவாகத் தட்டிவிட்டுச் செல்வார்.

ஆம்… அற்புதங்களை நிகழ்த்துகிற கருவிகள், அந்தக் கரங்கள்தான். ஆங்கிலத்தில் அறுவைசிகிச்சையை ‘சர்ஜரி’ என்று சொல்கிறார்கள். அந்த ஆங்கிலச் சொல் பிறப்பதற்கு முன்பு, அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்களை ‘கிரூர்ஜியன்’ என்று அழைத்தார்கள். அந்தச் சொல், கிரேக்க மொழியின் ‘கிரூர்ஜியா’ எனும் சொல்லில் இருந்து வந்தது. அப்படி என்றால், ‘கைகளால் குணமாக்குபவர்’ என்று பொருள். நவீன மருத்துவத்தின் ‘கைவேலைப்பாடு’ அறுவைசிகிச்சை என்று சொன்னால் அது மிகையில்லை. அந்தக் கரங்களுக்கு எத்தனை ஆயிரம் முறை நன்றிகள் சொன்னாலும் தகும்தானே?

‘அறுவை’ எனும் சிகிச்சை

‘மருத்துவத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிற ஹிப்போகிரேட்டஸ், ‘வயிற்றுப் பிரச்சினைகளுக்கு வயிற்றை அறுப்பது ஆபத்தானது’ என்றார். ஆனால், நாளடைவில் வயிற்றை அறுத்து ‘அப்பெண்டிசிட்டிஸ்’, பித்தக் கற்கள் உட்பட பல நோய்களைக் குணப்படுத்தியிருக்கிறார்கள் நவீன மருத்துவர்கள். ஆம்… ‘அறுவை’யே சிகிச்சையானது, அப்போதுதான்!

26CHVAN_Arnold_Van_De_larr.jpg அர்னால்ட்

இந்த அறுவைசிகிச்சை, ஆதிகாலத்திலிருந்து இப்போதுவரை எப்படியெல்லாம் வளர்ந்து வந்திருக்கிறது என்ற வரலாற்றைச் சொல்கிறது, சமீபத்தில் வெளியான ‘அண்டர் தி நைஃப்’ எனும் புத்தகம். ஜான் மர்ரே பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் அர்னால்ட் வான் தெ லார்.

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரின் ‘ஸ்லோடர்வார்ட்’ மருத்துவமனையின் லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணராக இவர் பணியாற்றுகிறார். முதன்முதலில் டச்சு மொழியில் வெளியான இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆண்டி பிரவுன்.

அறுவைசிகிச்சை மேற்கொள்வதைக் குறிக்க ஆங்கிலத்தில் ‘அண்டர் தி நைஃப்’ என்று மரபுத் தொடராகப் பயன்படுத்துவார்கள் (தமிழிலும் உடலில் ‘கத்தி படுவது’ என்று இது அறியப்படுகிறது). அதையே புத்தகத்தின் தலைப்பாக்கியதிலிருந்து, புத்தகத்தின் பின் அட்டைவரைக்கும், வரலாற்றில் தோய்த்து எடுத்த தகவல்களைக் கவித்துவ மொழியில், விறுவிறுப்பான நாவல் நடையில் அறுவைசிகிச்சையின் வளர்ச்சியைப் பற்றிச் சொல்வதில் வெற்றிபெற்றிருக்கிறார் நூலாசிரியர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி, விக்டோரியா மகாராணி, பாடகர் பாப் மார்லி, விஞ்ஞானி ஐன்ஸ்டீன் என்று புகழ்பெற்ற மனிதர்களுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள், அதற்காக அவர்கள் மேற்கொண்ட சிகிச்சைகளின் வழியே, அறுவைசிகிச்சையின் படிப்படியான வளர்ச்சியை ஆசிரியர் தொட்டுச் செல்கிறார்.

மருத்துவத்தில் ‘டயக்னாசிஸ்’ (நோயைக் கண்டறிதல்) என்ற சொல் முக்கியமானது. ‘ஒரு குற்றத்துக்கு என்ன பின்னணி என்பதை எப்படி ஒரு துப்பறிவாளர் தேடிக் கண்டுபிடிப்பாரோ, அதுபோல நோய் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை ஒரு மருத்துவர் கண்டறிகிறார்’ என்று சொல்கிறார் நூலாசிரியர்.

அதை விளக்குவதற்கு அகதா கிறிஸ்டியின் நாவல்களில் வருகிற ‘ஹெர்கியூல் பைராட்’ எனும் துப்பறிவாளர், எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயல் உருவாக்கிய ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ எனும் துப்பறிவாளர் ஆகிய கதாபாத்திரங்களை உதாரணமாக எடுத்துக்கொள்கிறார் அர்னால்ட். இப்படி, இலக்கியத்தையும் அறிவியலையும் சேர்த்தே சொல்வதால், புத்தகத்தைச் சலிப்பு தட்டாமல் ஒரே மூச்சில் வாசித்துவிட ஆர்வம் ஏற்படுகிறது!

மனிதப் பரிணாமம் நல்லதா?

‘மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள்… ஆப்பிரிக்காவிலிருந்தா..?’ என்கிற கேள்விக்கு, ‘ஆம்’ என்று ஒரு சாராரும், ‘இல்லை’ என்று ஒரு சாராரும் வாதம் செய்ய, அது தொடர்பான ஆய்வுகள் இன்று உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. மனிதர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் இன்று நாம் உடல்ரீதியாகச் சந்திக்கிற பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், நாம் நான்கு கால்களிலிருந்து இரண்டு கால் உயிரினங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைந்ததுதான் என்று சொல்கிறார் அர்னால்ட்.

1974-ல் எத்தியோப்பியாவில் படிம மானுடவியலாளர்கள் டொனால்ட் ஜோஹான்சன், டாம் கிரே ஆகியோர், 32 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த எலும்புக்கூட்டின் சில பகுதிகளைக் கண்டுபிடித்தார்கள். அது 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் எலும்புக்கூடு. அந்த எலும்புக்கூட்டை அவர்கள் கண்டுபிடித்தபோது, ‘லூசி இன் தி ஸ்கை வித் டையமண்ட்ஸ்’ எனும் ‘பீட்டில்ஸ்’ இசைக் குழுவின் பாடல் வானொலியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர்கள், அந்த எலும்புக்கூட்டுக்கு ‘லூசி’ என்று பெயரிட்டார்கள். மனிதர்களின் பரிணாம வளர்ச்சி லூசியிடமிருந்துதான் தொடங்குகிறது என்று சொல்லப்படுகிறது.

26CHVAN_UndertheKnife.jpgright

தனது மலக்குடலில் மூன்று சிறிய ரத்த நாளங்களைக் கொண்டிருந்திருக்காவிடில், லூசி, முதல் இரண்டு அடிகளை எடுத்து வைத்தவுடன், ‘யப்பா… சாமி… இரண்டு காலில் நடக்க வேண்டாம்’ என்று முடிவெடுத்துவிட்டு, மீண்டும் பழையபடி நான்கு கால்களில் நடந்திருப்பார். நாமும் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க மாட்டோம். ஆனால் என்ன செய்ய..? நம்மால் பழமையை மறக்க முடியுமா..? இன்றுவரையிலும் இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டுமென்றால், 90 டிகிரியில் நம் இடுப்பை வளைத்து உட்கார்ந்து ‘கடமை’யை முடிக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே இன்று மூலநோய், உறுப்பு இடப்பெயர்வு, மலச்சிக்கல் போன்ற பல பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

லூசி எனும் ஆச்சரியம்

மேலும் நாம் நேராக நிமிர்ந்து நடப்பதால், நம்மில் பலருக்கு ‘க்ராயின் ஹெர்னியா’ எனும் நோய் ஏற்படுவதற்கு 25 சதவீத சாத்தியம் இருக்கிறது. தவிர, நாம் இரண்டு கால் உயிரினங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைந்ததால், தற்போது நம்முடைய முழு உடல் எடையை நமது இடுப்பும் மூட்டுகளும் இரண்டு மடங்கு அதிகமாகச் சுமக்க வேண்டியிருக்கிறது. இப்படி இடுப்புக்கும் மூட்டுகளுக்கும் முதுகுக்கும் அதிக ‘லோடு’ ஏறியதே மருத்துவத்தில் ‘ஆர்தோபீடிக்ஸ்’ எனும் எலும்பு நோய்த் துறை பிறப்பதற்குக் காரணமாக இருந்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.

கால்களில் ‘வெரிகோஸ் வெயின்’ பாதிப்பு ஏற்படுவது போன்றவற்றுக்கும்கூட, லூசி இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கியதே காரணம். இப்படி, இன்று நாம் சந்திக்கிற பல உடல் பிரச்சினைகளுக்கு அடிப்படை ஆதாரம் எங்கிருக்கிறது என்று பார்த்தால், அது லூசியின் பாதங்களில் முடிகிறது!

என்றாலும், நாம் லூசியைக் குறை சொல்ல முடியாது. மனிதர்களாகப் பரிணாம வளர்ச்சி அடையாமல் இருந்திருந்தால், இன்று நாம் அனுபவிக்கும் வசதிகளைப் பெற்றிருக்க முடியுமா? பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். அதற்கான தீர்வுகளும் கிடைத்தே தீரும். ‘லூசி எவ்வளவு பெரிய பாதிப்புகளை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்!’ என்று மருத்துவர்கள் வியந்த காரணத்தால்தான், இன்று ரத்தம், வலி எதுவும் இல்லாமல் ‘மினிமல் இன்வேஸிவ் சர்ஜரி’ வரை அறுவைசிகிச்சை வளர்ந்திருக்கிறது. எத்தியோப்பிய மொழியில் லூசிக்கு இன்னொரு பெயரும் உண்டு… ‘தின்கைன்ஸ்!’. அதாவது, ‘ஆச்சரியத்துக்கு உரியவள்!’ என்று பொருள். அறுவைசிகிச்சையாளர்கள் நிச்சயம் அதை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x