Published : 19 May 2018 11:32 AM
Last Updated : 19 May 2018 11:32 AM

கலைடாஸ்கோப் 02: காலத்தில் கரையாத ‘கண்ணம்மா’

‘கண்ணம்மா'

- மகாகவி பாரதி தனி அர்த்தம் கொடுத்துச் சென்ற பல தமிழ்ச் சொற்களில் ஒன்று. பாரதி மட்டும் இல்லையென்றால் தமிழ் சினிமா, கதைகள், இதழ்கள், ஊடகங்கள் தலைப்புகளுக்கும் கவித்துவச் சித்தரிப்புகளுக்கும் பரிதவித்துப் போயிருக்கும்.

எழுதிய காலம் தொடங்கி இன்றுவரை, தன் கவி மனதாலும் எழுத்தாலும் தமிழுக்குத் தனி அடையாளம் தந்து வருகிறார் பாரதி. அவற்றில், ‘காற்று வெளியிடைக் கண்ணம்மா’ பாடல், தனி அழகு பொருந்தியது.

இந்தப் பாடலை வெகுமக்களுக்கு முதலில் எடுத்துச் சென்றது பி.ஆர். பந்துலு இயக்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ படம். அந்தப் படத்தில் பாரதி எழுதிய ஒன்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஜி. ராமநாதனின் இசையமைப்பில் ‘காற்று வெளியிடை’ பாடலில் தோன்றியவர்கள் ஜெமினியும் சாவித்திரியும். அப்படியிருக்க, பி.பி. ஸ்ரீநிவாஸும் சுசிலாவையும் தவிர வேறு யார் அந்தப் பாடலைப் பாடியிருக்க முடியும். ‘மோகனம்’ ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் கர்னாடக இசைப் பாணியை அடியொற்றி அமைந்த ஒன்று.

‘கண்ணம்மா’ பிரதீப்

நவீனத்தை மகிழ்ச்சியுறத் தழுவி ஏற்றுக்கொள்ளும் ஆற்றலையும் பாரதியின் பாடல்கள் கொண்டிருக்கின்றன. பல்வேறு பரிசோதனை முயற்சிகளுக்கு ‘யூடியூப்’ களம் அமைத்துக் கொடுத்து வருகிறது. கர்னாடக இசையில் நவீனத்தைப் புகுத்தும் முயற்சிகளும் அவற்றில் ஒன்று. ‘காற்று வெளியிடைக் கண்ணம்மா’வின் நவீன வடிவம் அப்படி ஹிட் ஆன பாடல்களில் ஒன்று. ‘காற்று வெளியிடை’படத்தால் நொந்து போனவர்கள், தைரியமாக இந்தப் பாடலைக் கேட்கலாம். ‘BP Collective’என்ற பெயரில் இயங்கும் இசைக் கலைஞர் பி. பிரசன்னாவின் முயற்சி இது. இசை வீடியோவை இயக்கியிருப்பவர் கௌரி ஷங்கர்.

இந்தக் கண்ணம்மா பாடலைப் பாடியவர் வேறு யாருமில்லை - பிரதீப் குமார். ‘காலா’படத்தின் ‘கண்ணம்மா’ பாடலைப் பாடிய அதே பிரதீப் குமார்தான். அவரும் கீர்த்தனா வைத்தியநாதனும் இந்த வீடியோவின் முதன்மைப் பாடகர்கள். இவர்களுடன் இன்னும் பல இளம்குரல்கள் சேர்ந்திசைத்திருக்கின்றன. பாடலின் பல இடங்களில் குரல்களின் சங்கமம் ரசிக்க வைக்கிறது.

பாடலின் ரீங்காரம்

தன்னைவிட வேறு யாராலும் இந்தப் பாடலைச் சிறப்பாகப் பாடியிருந்திருக்க முடியாது என்பதை பிரதீப் குமார் நிரூபிக்கிறார். விரிவும் ஆழமும் கொண்ட அவருடைய குரலுடன் வருடும் கீர்த்தனாவின் குரலும் சேர்ந்து இழைந்துவிடுகிறது. ஒவ்வொரு பாடகரும் வார்த்தைகளில் அமிழ்ந்து அனுபவித்துப் பாடும்போது வெளிப்படும் அங்க அசைவுகள் வீடியோவுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.

ஓரிடத்தில் மேற்கத்திய ஓபரா பாணியில் ‘கண்ணம்மா’ என்று உச்ச ஸ்தாயியிக்குத் தாவிச் செல்லும் அதே நேரம், பல இடங்களில் கேபா ஜெரிமியாவின் மென்மையான கிதார் மீட்டல்கள் பாடலை மனதுக்குள் ரீங்கரிக்க வைத்துவிடுகின்றன.

தனிப் பொலிவு

பாடலின் நவீன வடிவம் இப்படி ஈர்க்கும் நிலையில், அதையும் தாண்டிக் காட்டு மலரின் தனிஅழகுபோல வசீகரிப்பவை பாரதியின் கவிரசம் சொட்டும் சொற்கட்டுகள். ‘அமுதூற்றினை ஒத்த இதழ்கள்’, ‘நிலவூறித் ததும்பும் விழிகள்’ - போன்ற வரிகள் நூறாண்டுகளைக் கடந்தும் பொலிவு குன்றாமல் திகழ்கின்றன.

‘கண்ணன் பாட்டு’ என்ற பாடல் தொகுப்பை எழுதியுள்ள பாரதி, அதைத் தாண்டியும் கண்ணனை விளித்துப் பல பாடல்களை எழுதியுள்ளார். அந்த வகையில் தோத்திரப் பாடல்கள் வரிசையில் ‘கண்ணம்மா (3)’ என்று வரும் பாடலே ‘காற்று வெளியிடை’.

உற்சாகமும் துள்ளலும் நிறைந்த பாடலின் இந்த நவீன வடிவம், எழுத்துக்கும் இசைக்கும் எந்த எல்லைகளும் தடைகளும் இல்லை என்பதை அழுத்தமாகவே சொல்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x