Last Updated : 20 May, 2018 09:52 AM

 

Published : 20 May 2018 09:52 AM
Last Updated : 20 May 2018 09:52 AM

விரியும் சிறகு: வானையும் கடலையும் அளப்போம்!

ங்களது ‘சாவித்திரிபாய் ஃபூலே’ பயணக் குழுவின் விதிகள் அலாதியானவை. நாங்கள் தோழிகளாக இணைந்து காடு, மலை, கடற்கரை, பாலைவனம் என்று பயணிக்கிறோம். பெண்கள் மட்டுமே செல்லும் பயணங்கள். அம்மா, பெண் வரலாம். ஆனால், மகள் என்பதால் அம்மாவிடமும் அம்மா என்பதால் மகளிடமும் எந்தச் சலுகையும் கிடைக்காது. இங்கு அனைவரும் தோழர்கள்தாம். குழு உறுப்பினர்கள் யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது, சண்டை போடக் கூடாது. தமது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லலாம். விருப்பான உணவைச் சாப்பிடலாம். பயணச் செலவைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

நனவாகும் கனவு

பெரும்பாலான பெண்களுக்குப் பயணம் போவது என்பது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கும் வழிபாட்டுத்தலங்களுக்கும் போவதாகவே அமைந்துவிடுகிறது. அம்மா, மனைவி, மருமகள், மாமியார், பாட்டி, மகள், சகோதரி என்ற எந்தப் பொறுப்பும் இல்லாமல் சுதந்திரமாகத் தோழிகளுடன் இணைந்து இயற்கையை ரசிப்பதற்கான பயணம், பெண்ணுக்கு எட்டாக்கனவுதான். இந்தக் கனவை நனவாக்குவதே எங்கள் பயணக் குழுவின் நோக்கம்.

நான்காண்டுகளுக்கு முன், உலக உழைக்கும் மகளிர் நாளன்று திண்டிவனம் அருகிலுள்ள பனைமலை, மண்டகப்பட்டு, தளவானூர் ஆகிய தொல்லியல் இடங்களுக்கு ஒரு நாள் பயணமாகச் சென்றோம். அதுதான் முதல் பயணம். ராஜஸ்தானின் ஆரவல்லிமலைத் தொடர் - தார் பாலைவனம், கர்நாடகாவில் தலைக்காவிரி-ஹளபேடு-பேளூர், கோவா, கேரளாவின் பரம்பிக்குளம், கொல்கத்தாவின் சுந்தரவனக் காடுகள், புதுச்சேரி, தமிழகத்தில் ஜவ்வாதுமலை, டாப் ஸ்லிப் என்று குழுவின் பயணம் தொடர்கிறது.

சாவித்திரிபாய் ஃபூலே பெண் பயணக் குழுவின் பயணங்கள் இரண்டுவிதமானவை. ஒன்று, நாங்களாக ஏற்பாடு செய்துகொள்ளும் இரண்டு அல்லது மூன்று நாள் பயணம். இரண்டாவது, யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு ஏற்பாடுசெய்யும் ட்ரெக்கிங் நிகழ்வில் இணைந்து செல்லும் ஏழெட்டு நாள் தொலைதூரப் பயணங்கள். யூத் ஹாஸ்டல் பற்றிச் சொல்லியாக வேண்டும். பயணம் போக விரும்பும் பெண்கள் இந்தத் தன்னார்வ அமைப்பில் உறுப்பினராகி, நாடெங்கிலும் அவர்கள் ஏற்பாடு செய்யும் ட்ரெக்கிங்கில் பங்கேற்கலாம். செலவும் குறைவு, பாதுகாப்பான அமைப்பும்கூட. இவர்களது http://www.yhaindia.org/ என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் பெறலாம்.

மாறும் பார்வை

சக தோழிகளுடன் பயணிப்பது பெண்ணுக்கு மகிழ்வளிக்கிறது. அவளது மனதை மலரச் செய்கிறது. புதிய இடம், இதுவரை பார்த்திராத நிலப்பரப்பு, அறிமுகமற்ற மனிதர்கள், பழக்கமற்ற உணவு வகைகள் என்று எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் குழந்தையைப் போன்ற குதூகலத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன. இதுவரை குடும்பத்தினருடன் மட்டுமே பயணம்போன தோழிகள் எங்கள் குழுவில் இணைந்து பயணிக்கும்போது, அவர்களிடம் வெளிப்படும் ஆளுமையும் திறமைகளும் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துகளும் வியக்க வைக்கின்றன. எந்த முகமூடியும் இல்லாமல் பேசிக்கொள்ள நம்பிக்கையான பரந்தவெளியைப் பயணம் உண்டாக்குகிறது. பயணம் போய் வந்தபின் அவர்கள் வாழ்க்கையை முற்றிலும் வேறுவிதமாக, பக்குவமாக எதிர்கொள்வதைக் கவனிக்கிறேன்.

அனுபவம் புதுமை

67 வயது தோழி, தனது நீண்ட வாழ்க்கையில் குடும்பத்தினர் இல்லாமல் வந்த முதல் பயணம் எங்களுடன்தான். 55 வயதுத் தோழி வாழ்க்கையில் முதன்முறையாக ஜீன்ஸ் அணிந்ததும் (மருமகளின் பரிசு) எங்களுடனான பயணத்தில்தான். 57 வயது தோழிக்கு முதன்முறையாக டீஷர்ட்டும் டிராக் பேண்ட்டும் போட்ட சிறப்பு நிகழ்வும் இங்கேதான் நடந்தது. குழந்தைகள் யாஷ்னா, அபிராமி, ஷைலு, நேஹா முதல் டீன் ஏஜில் நுழைந்திருக்கும் ரித்திகா, நிலா, ரித்தி மேகவதிவரை எல்லாருக்கும் குழுவில் சம உரிமை உண்டு. குழுவின் பயணத் திட்டத்தை வடிவமைக்கும்போதும் செயல்படுத்தும்போதும் இவர்களும் பங்கேற்பார்கள்.

ஒரு நிலப்பரப்பைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பொதுவான கருத்துகளைப் பயணங்கள் மாற்றியமைத்திருக்கின்றன. ராஜஸ்தான் என்றாலே வறட்சி என்ற பிம்பம்தான் பொதுவாகத் தோன்றுகிறது. ஆனால், அடர்ந்த பசுமையான காடுகள், நீர் நிரம்பியிருக்கும் ஏரிகள் என ஆரவல்லி மலையேற்றம் அந்த மாநிலத்தின் அழகைக் காட்டியது. கோவா ட்ரெக்கிங்கில் இரண்டு நாள் கடற்கரையோரமாக நடந்தோம். அப்போது ‘பாரா செய்லிங்’ எனப்படும் படகில் இணைத்திருக்கும் பாராசூட்டில் விண்ணில் பறந்தது பரவச அனுபவம்!

பரம்பிக்குளம் சென்றபோது, பெரியாற்றில் ‘பேம்பூ ராஃப்டிங்’ எனப்படும் மூங்கில் மிதவையில் பயணித்தோம். கொட்டும் மழையில் காட்டில் யானை சவாரி சென்றோம். கேரள வனத்துறையினர் உடன் வந்து அனைத்து உதவிகளும் செய்தனர்.

கொல்கத்தா நகரைச் சுற்றியபோது சாப்பிட்ட சாலையோர உணவும் மண்குவளைத் தேநீரும் சுவையோ சுவை, விலையும் மலிவு.

எல்லையில்லாப் பயணம்

ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் ட்ரெக்கிங் சென்றோம். பகலெல்லாம் வெயிலில் நடந்து இரவில் கடும்குளிரில் கூடாரங்களில் தங்கினோம். பாலைவன மணலில் விழுந்து புரண்டு விளையாடிய போதும் ஒட்டகச்சவாரியின் போதும் வயதை மறந்து சிறுமிகளானோம்.

பெண்கள் தனியே பயணம் செல்வது பாதுகாப்பானது அல்ல என்ற நம்பிக்கை தவறு. நாங்கள் சென்ற எந்தப் பயணத்திலும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டதில்லை. ‘ரக்சாக்’ எனப்படும் பையை முதுகில் சுமந்துகொண்டு பயணிக்கும் பத்து, இருபது பெண்களைப் பார்க்கும் மக்கள் புன்னகையுடனும் நட்புடனும் எதிர்கொள்கின்றனர். உதவத் தயாராக இருக்கின்றனர்.

உடைக்கும் நகைக்கும்தான் பெண்கள் செலவழிக்கிறார்கள் என்ற பொய்ப் புகாரைப் புறந்தள்ளி வசதியான பயணத்துக்குப் பணம் ஒதுக்குகிறோம். பேருந்து, ரயில் தவிர விமானத்திலும் பயணிக்கிறோம்.

சுந்தரவனக் காடுகள் சென்றபோது வங்கதேச எல்லையையும் தார் பாலைவன ட்ரெக்கிங்கில் பாகிஸ்தான் எல்லைப் புறத்தையும் பார்த்தோம். பெண்களின் பயணத்துக்கு எல்லையே இல்லை. நம் அடிகளால் பிரபஞ்சத்தை அளப்போம்!

கட்டுரையாளர், ஆவணப்பட இயக்குநர்.

தொடர்புக்கு: geetaiis@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x