Published : 21 Apr 2018 10:21 AM
Last Updated : 21 Apr 2018 10:21 AM

கடலம்மா பேசுறங் கண்ணு 50: கடலைப் பாடுதல்...

ஒரு திணை நிலத் தொழிற்குழுவின் வரலாற்றில் இலக்கியத்தின் இடம் என்ன? பதிவுகளிலிருந்து விலகி நிற்கும் எந்தச் சமூகமும் வரலாற்றிலிருந்தும் வளர்ச்சியிலிருந்தும் அந்நியப்பட்டுவிடும் என்பது உலகப் பண்பாட்டு வரலாற்றிலிருந்து நாம் பெறும் செய்தி. ‘ஒவ்வொரு தொழிற்குழுவும் வரலாற்றில் தனக்குரிய இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு எழுத்து ஒன்றே வழி’ என்கிறார் ஜெயமோகன். ‘மொழியில் வாழாத சமூகம் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிடும்’ என்கிறார் இலக்கிய விமர்சகர் வேதசகாயகுமார்.

இந்தியப் பழங்குடிகளின் வரலாறு சுமார் 13 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. எனினும், மீனவப் பழங்குடிகளின் இலக்கிய வரலாறு 2,500 ஆண்டுகளுக்கு உட்பட்டது. சங்க காலக் கவிதைகளில் நெய்தல் மக்கள் ‘பரதவர்’ தொடங்கி கடலர், துறைவன், கொண்கன், சேர்ப்பன், புலம்பன், நுளையர், திமிலர், பஃறியர், வலைஞர், மீன் வேட்டுவர், சாலர், உமணர் எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வந்துள்ளனர். அவர்களின் தொழில்முறை மீன்பிடித்தல், முத்துக்குளித்தல், சங்கறுத்தல், உப்பு விளைவித்தல், மீன் உலர்த்தல், கடல் வாணிபம், கலம் கட்டுதல் என்பதாக விரிகின்றன.

சங்கப் பாடல்களில் நெய்தல்

கடற்செலவுக்குக் கடலோடிகள் கட்டு மரம், திமில், வங்கம், நாவாய், அம்பி, தோணி, பாய்மரக் கப்பல் முதலிய பல வகைக் கலன்களைப் பயன்படுத்தினர். சங்க காலத்தில் மீனவர்கள் பயன்படுத்திய ‘வடிக்கதிர் திரித்த வல்ஞாண் பெருவலை’ (நற்றிணை 74:1) உலகின் தொன்மையான வலை என்கிறார்கள். மீன்பிடித்தலுக்கு வில் அம்பு, தூண்டில், ஈட்டி, வலைகள் தவிர ‘கயிறு கடையாத்த கடுநடை எறி உளி…’ (குறுந்தொகை 388) உள்ளிட்ட பலவகை உளிகளையும் மீனவர்கள் பயன்படுத்தியுள்ளனர். முக்கியமாக, சுறா வேட்டை குறித்த குறிப்புகள் சங்க காலக் கவிதைகளில் ஏராளம் தென்படுகின்றன. சுறா முள் வழிபாடு குறித்த குறிப்புகள் குலக்குறியியல் முக்கியத்துவம் பெறுவதாகும்.

மேலே தொட்டுக் காட்டியவை உள்ளிட்ட துறைவர் வாழ்க்கைக் கூறுகள் 190-க்கு மேற்பட்ட சங்க காலப் படைப்புகளில் பாடுபொருளாய் உள்ளன. அவற்றைப் பாடியோரில் நெய்தல் நிலக் கவிஞர்கள் நல்லந்துவனார், நப்பூதனார் உள்ளிட்ட அறுவர் மட்டுமே. சங்கம் மருவிய காலம், நெய்தல் இலக்கியத்தின் வறட்சிக் காலம்.

கடலை அறிவதற்கு இலக்கியம்

16-ம் நூற்றாண்டு தொடங்கி, தென் தமிழக நெய்தல் வாழ்க்கை பற்றிய குறிப்புகளை ஐரோப்பிய ஆவணங்களிலும் மிஷனரி சேவியரின் கடிதங்களிலும் கோயில் குறிப்புகளிலும் மட்டுமே காண முடிகிறது. முத்துக்குளித்துறை, பேசாலை (இலங்கை) பகுதிகளில் 18 முதல் 21-ம் நூற்றாண்டுவரை வாழ்ந்த 97 மரபுக் கவிஞர்களின் படைப்புகளைப் பாதிரியார் ஸ்டீபன் கோமஸ் 2014-ல் தொகுத்து வெளியிட்டுள்ளார். 1742-ல் பெயரறியாத கோவளம் பகுதிக் கவிஞன் பாடிய ‘செண்பகராமன் பள்ளு’ சிற்றிலக்கியமும் இதில் உட்படும்.

அச்சுப் பதிப்புக்கு முந்தைய காலத்தில் ‘ஐவர் ராசாக்கள் கதை’ உள்ளிட்ட சில கதைப்பாடல்களும் வாய்மொழிக் கதைகளும்தான் நெய்தல் பண்பாட்டு வரலாற்றின் தடயங்களாகக் கிடைக்கின்றன. 20-ம் நூற்றாண்டில் பாரதிதாசன், பரிதிமாற் கலைஞர் தொடங்கி ஏறத்தாழ 20 கவிஞர்களின் கவிதைகளில் நெய்தல் இடம்பெறுகிறது.

புதினம் என்னும் இலக்கிய வகைமை தமிழுக்கு அறிமுகமான 200 ஆண்டுகளில் நெய்தல் புதினங்களின் வயது 45 தான். அதில் இலங்கையின் கைலாசநாதன், யோகநாதன் புதினங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதன்முதலாக அச்சேறியது வலம்புரி ஜானின் ‘நீர்க் காகங்கள்’ (1974). 45 ஆண்டு கால நெய்தல் புதின வரலாற்றை ‘ஆழி சூழ் உலகு’க்கு முன், பின் என்று பகுத்துவிடலாம். நாஞ்சில் நாடனின் சொற்களில், ‘மற்றவர்கள் எல்லோரும் கரையிலிருந்து கடலைப் பார்த்தவர்கள். ஜோ டி குரூஸ் மட்டுமே கடலிலிருந்து கரையைப் பார்த்தார்’.

2004 ஆழிப் பேரிடர் நெய்தலைக் குறித்த அறிதலுக்கான தேவையை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து புனைவு, அபுனைவு எழுத்துகளும் பெருகின. ‘ஆழி சூழ் உலகு’ நெய்தல் புனைவு இலக்கியத்தின் கட்டளைப்படி என்று சொன்னால், பத்திரிகையாளர் சமஸ் எழுதிய ‘நீர் நிலம் வனம்’ தொடர் ஒரு வெகுஜன இதழியல் புரட்சி என்று சொல்ல வேண்டும் (நெய்தல் தொடர்பான மேலதிகப் புத்தகங்களுக்குப் பார்க்க பெட்டிச் செய்தி).

அன்புமிகும் வாசகர்களே, மற்றொரு தருணத்தில் எழுத்தின் வழி நாம் மீண்டும் சந்திக்கும்வரை நன்றியுடன் விடைபெறுகிறேன்.

நெய்தலை வாசிக்க…

நாவல்

நீலநிறப் பறவைகள் – பானுமதி பாஸ்கோ (உயிர் எழுத்து – நெய்தல் வெளி)

அலைவாய்க்கரையில் – ராஜம் கிருஷ்ணன் (தாகம்)

தேடல் – பொன்னீலன் (என்.சி.பி.எச்.)

கூனன் தோப்பு – தோப்பில் முஹம்மது மீரான்

ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ் (தமிழினி)

சிறுகதைகள்

தூரத்துச் சொந்தங்கள் – பானுமதி பாஸ்கோ (உயிர் எழுத்து – நெய்தல் வெளி).

கடலுக்குள்ளே கடலுக்குள்ளே – குறும்பனை சி.பெர்லின் (கலகம்)

செள்ளு – செல்வராஜ் (பாரதி புத்தகாலயம்)

கடல் முற்றம் – அருள் சினேகம் (கடல்வெளி)

கவிதைகள்

மெசியாவின் காயங்கள் – ஜெ.ஃபிரான்சிஸ் கிருபா

வலியோடு முறியும் மின்னல் – ஜெ.ஃபிரான்சிஸ் கிருபா

21chnvk_vareeth10.jpgrightஅபுனைவுகள்

எக்கர் (வேதசகாயகுமாரின் உரைகள்). தொகுப்பு– வறீதையா கான்ஸ்தந்தின்

பழவேற்காடு முதல் நீரோடிவரை

– வறீதையா கான்ஸ்தந்தின் (எதிர் வெளியீடு)

கடல் (நிலம், நீர், வனம்) – சமஸ் (தி இந்து).

மொழிபெயர்ப்பு

நினைவலைகள் – பால் தாமஸ் (எதிர் வெளியீடு)

(நிறைந்தது)

கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்

தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x