Last Updated : 05 Aug, 2014 09:10 AM

 

Published : 05 Aug 2014 09:10 AM
Last Updated : 05 Aug 2014 09:10 AM

ஆரோக்கியம் காக்கும் சிவகாசி தொழிலாளி

கையில் சின்னச் சின்ன பொட்டலங்கள் அடங்கிய பையைச் சுமந்துகொண்டு, விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார் அந்த மனிதர். பார்ப்பதற்கு வழக்கமான சுண்டல் விற்பவரைப் போலத் தெரியவில்லை. ஆளைப் போலவே அவர் விற்கும் சுண்டலும் வித்தியாசமானதுதான்.

முளைகட்டிய கடலை, கேழ்வரகு, கம்பு, பாசிப் பயறு, கொள்ளு, ஊறவைத்த அவல் மற்றும் கேரட், தேங்காய், வெள்ளரி கலவை ஆகியவற்றைக் கொண்ட பொட்டலங்கள் அவரிடம் இருக்கின்றன. அத்தனையும் சத்து மிகுந்த, ஆரோக்கியமான சிற்றுண்டிகள். இதை வெறும் விற்பனையாக நினைக்காத அவர், சிவகாசி கொங்கலாபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் (48).

எது ஆரோக்கியம்?

பணியின் இடையே வயிற்றுக்குச் சிறிது ஈய நினைக்கும் அரசு அலுவலர்களையும், ஊழியர்களையும் நிறுத்தி முளைகட்டிய நவதானியங்களை வாங்கச் செய்கிறார் சுப்புராஜ். அவர்களது வயதுக்கேற்ப எந்தெந்தப் பயறு வகைகளைச் சாப்பிட்டால் நல்லது என்று விளக்குவதுடன் எண்ணெய் பலகாரங்களை உண்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூறுகிறார். ஆரோக்கியம் தரும் முளைகட்டிய நவதானியங்களைக் குறைந்த விலைக்கு அவர் விற்பதுதான் இதில் ஹைலைட்.

"டி.கல்லுப்பட்டில ஐ.டி.ஐ. படிச்சப்போ, அதே பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு உதவியா சில வேலைகளைச் செஞ்சுவந்தேன். படிச்சு முடிச்சதும், மக்களுக்காக நானும் ஏதாவது செய்ய நினைச்சு அவர்கிட்ட ஆலோசனை கேட்டேன். முளைகட்டிய தானியங்கள்ல உள்ள சத்துகள், நன்மைகளை விளக்கினார். அன்னைலேர்ந்து முளைகட்டிய நவதானியங்களை விற்க ஆரம்பிச்சுட்டேன்" பொட்டலத்தைக் கொடுத்துக்கொண்டே சொல்கிறார்.

காசா முக்கியம்?

தொடக்கத்தில் ஸ்ரீவில்லி புத்தூர் நீதிமன்றத்திலும், கடந்த 2 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் சுண்டல் விற்பனை செய்துவருகிறார். கேழ்வரகு, கம்பு, பாசிப்பயறு, கொள்ளு, காய்கறிகள், அவல், கடலை, உளுந்து போன்றவை நன்கு விற்பனையாகின்றன. தினமும் 15 கிலோ நவதானியங்களை விற்கிறார். தானியங்களை அப்படியே சாப்பிடுவதைவிட முளைகட்டுவதால் கிடைக்கும் நன்மைகளை உணர்ந்து, முளைகட்டியே விற்கிறார். ஒரு பொட்டலம் 5 ரூபாய்தான். இவரது மனைவி ருக்மணியும் இந்தப் பணிகளில் இவருக்குக் கைகொடுக்கிறார்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, அல்சர் போன்ற பல்வேறு நவீன கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், இவரது வாடிக்கையாளர்களாகி விட்டனர். விரைவில் மூலிகை சூப் விற்கும் திட்டமும் இவரிடம் உள்ளது.

"அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ. 500 வரைகூட லாபம் கிடைக்கலாம். ஆனா, அதாங்க முக்கியம்? மக்கள் ஆரோக்கியமா இருக்கிறதுக்கு உதவுறதவிட, வேறென்னப் பெரிய மனநிம்மதி வேண்டும்" என்று அர்த்தத்துடன் கேட்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x