Last Updated : 22 May, 2018 11:10 AM

 

Published : 22 May 2018 11:10 AM
Last Updated : 22 May 2018 11:10 AM

புதுத் தொழில் பழகு 06: சீசன் வியாபாரத்தை பிராண்ட் ஆக்கியவர்கள்

கோடைக்காலம் வந்துவிட்டால் சில புதிய தொழில்களும் மாம்பழங்கள்போல சந்தைக்கு வந்துவிடும். பதநீர், நுங்கு, சர்பத் எனச் சாலையோரங்களில் புதிய கடைகள் முளைக்கத் தொடங்கும். இவை சீசன் வியாபாம். இம்மாதிரியான தொழில்களுள் ஒன்று கரும்புச் சாறு. இந்த மாதிரியான தொழிலில் பிராண்ட் (brand) கிடையாது.

யார் வேண்டுமானாலும் இயந்திரத்தைச் சாலையோரங்களில் நிறுவி வியாபாரத்தைத் தொடங்கிவிடுவார்கள். இதில் ஒரு பிராண்டை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள் தாராபுரத்தைச் சேர்ந்த மணிகண்டனும் அருண் பிரசாத்தும். அவர்கள் உருவாக்கிய பிராண்ட் ‘டாக்டர் கரும்பு’ (Dr. Karumbu). கோயம்புத்தூரில் ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி ஆகிய இடங்களில் இது இயங்கிவருகிறது.

இணைத்த ஆர்வம்

மணிகண்டன், அருண் பிரசாத் இருவரும் ஒரே கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டயம் படித்தவர்கள். படித்து முடித்து எல்லோரையும்போல வேலை தேடி, மணிகண்டன் கோயம்புத்தூர், அருண் பெங்களூரு என ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிரிந்துவிட்டார்கள். ஆனால், சொந்தமாகத் தொழில்செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருவரையும் தூரத்திலிருந்தாலும் சேர்த்து வைத்திருக்கிறது. அருண் பெங்களூருவில் கரும்புச் சாறைப் பிராண்டாக மாற்றுவதைப் பார்த்திருக்கிறார். கரும்பு அதிகம் விளையக்கூடிய ஈரோடு பகுதி அருகில் இருப்பதால் நாமும் அதையே தொடங்கலாம் எனத் தோன்றியிருக்கிறது.

arun அருண் பிரசாத்

மணிகண்டனும் அருணும் சேர்ந்து 2009-ல் அதற்கான முதல் படியை எடுத்துவைத்தார்கள். முதலில் ஒரு நிறுவனத்தின் முகவராகத்தான் தங்கள் தொழிலைத் தொடங்கினார்கள். கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸில் தொடங்கிய அந்தக் கடையில் சில துரித உணவுப் பண்டங்களையும் விற்பனைசெய்துவந்துள்ளனர். ஆனால், சில நாட்களில் மக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்று அதை நிறுத்திவிட்டார்கள். இன்னொரு நிறுவனத்தின் முகவராக இருப்பதிலிருந்து விலகித் தனியே ஒரு பிராண்டை உருவாக்கினார்கள். அதுதான் ‘டாக்டர் கரும்பு’.

சாறும் உரமும்

‘டாக்டர் கரும்பின்’ முதல் கிளையைக் கோயம்புத்தூர் நேரு நகரில் தொடங்கினார்கள். ஆரோக்கியமான உணவை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதால் தாங்கள் தயாரிக்கும் புதிய கரும்புச் சாற்றில் பதப்படுத்துவதற்கான ரசாயனம் எதையும் சேர்ப்பதில்லை. சுத்தமான கரும்புச் சாறு மட்டும்தான் கொடுக்கிறார்கள். இவர்கள் பயன்படுத்தும் இயந்திரத்`தில் ஒரு துளையின் வழியாகக் கரும்புத் துண்டுகளைப் போட்டால் அதுவே சாறு பிழிந்து, வடிகட்டி சுத்தமான கரும்புச் சாறாகக் குழாயின் வழியாகத் தரும். கரும்புச் சக்கை தனியாக அதற்கான இடத்தில் சென்று சேர்ந்துவிடும்.

கரும்புச் சக்கை நிறைந்ததும் அதை வெளியே எடுத்து இயற்கை உரமாக விளைநிலங்களுக்கு இலவசமாகக் கொடுத்துவருகிறார்கள் இந்த இளைஞர்கள். கரும்புச் சாறும் தனியாக மட்டுமல்லாது மற்ற பழச் சாற்றுடன் கரும்புச் சாற்றை வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாகக் கலந்துப் பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்தச் சாறு முழுவதும் உடல்நலத்துக்கு ஆரோக்கியமானது.

manikan மணிகண்டன் right

தொழில் தொடங்கிய புதிதில் பல சிரமங்களையும் சந்தித்துள்ளனர். கணினி அறிவியல் படித்த இவர்களுக்கு இது முற்றிலும் புதிய தொழில். அதனால் சில பாதகமான ஆலோசனைகளைச் சுற்றியுள்ளவர்கள் வழங்கியுள்ளனர். முதலில் தொடங்கிய ரேஸ்கோர்ஸ் கிளையை மூடும் சூழல்கூட வந்தது. ஆனாலும் மனம் தளராமல் செயல்பட்டார்கள்.

புதிய பிராண்டை உருவாக்கி ஒரு கிளையை தொடங்கினார்கள். அதையும் வேறு இடத்துக்கு மாற்றிப் பார்த்தார்கள். புதிய சாறு வகையையும் அறிமுகப்படுத்தினாரகள். லாபம் மட்டும் நோக்கம் என்று இல்லாமல் தொடர்ந்து செயலாற்றி வந்ததால் இன்றைக்கு வெற்றி முகம் கண்டிருக்கிறார்கள். ஆறு வகை குளிர்பானச் சாறு, இன்றைக்கு 40 வகைக்கும் மேற்பட்ட குளிர்பான வகையாகக் கூடியுள்ளது. ஒரு கிளை இன்றைக்கு மூன்றாக விரிவடைந்துள்ளது.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x