Last Updated : 25 May, 2018 10:55 AM

 

Published : 25 May 2018 10:55 AM
Last Updated : 25 May 2018 10:55 AM

கலாட்டா கல்யாணம் பொன் விழா: ஹார்வர்டில் சிவாஜியின் பாடல்!

‘நடிகர் திலக’த்தைக் கொண்டாட்டமான இளமைத் துள்ளல் மிக்க கதாபாத்திரங்களில் வடித்தெடுத்த இயக்குநர் சி.வி.ராஜேந்திரன். சிவாஜியுடன் இயக்குநராக அவர் இணைந்த முதல் படம் ‘கலாட்டா கல்யாணம்’. பொன்விழா ஆண்டைத் தொடும் சிவாஜியின் ‘லேண்ட் மார்க்’ படங்களுக்கு மாதந்தோறும் விமரிசையாக விழா எடுத்துவரும் என்.டி.பேன்ஸ் சங்கம் (NT Fans ), இம்முறை ‘கலாட்டா கல்யாணம்’ படத்துக்கு விழா எடுக்க விரும்பியது.

அதை ‘ஊட்டி வரை உறவு’ திரைப்படத்தின் பொன்விழாவில் அறிவித்தபோது “கலாட்டா கல்யாணம் படத்தின் பொன்விழாவை உங்களுடன் இணைந்து நானே முன்னின்று நடத்த விரும்புகிறேன்” என்று சி,வி,ஆர். தெரிவித்திருந்தார்.

அவர் வழிகாட்டுதல்படியே விழாவுக்கான ஏற்பாடுகளை நடத்திவந்த வேளையில் எதிர்பாராதவிதமாக சி.வி.ஆர் இயற்கை எய்திவிட்டார். எந்த நாள் விழா நடத்த வேண்டும் என்று இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் விரும்பினாரோ அதே நாளில் ‘கலாட்டா கல்யாணம்’ படத்தின் பொன்விழாவையும் சி.வி.ஆர். அஞ்சலி நிகழ்ச்சியையும் ஒருங்கிணைந்திருந்தது என்.டி.ஃபேன்ஸ் சங்கம்.

‘கலாட்டா கல்யாணம்’ படத்தின் பல துறைகளிலும் பங்களிப்பு செய்தவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். அவர்களில் அந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதிய ‘சித்ராலயா’ கோபு, குமாரி சச்சு, ‘உறவினில் ஃபிஃப்டி’ பாடலில் நடனமாடியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த திருமதி ஷமீம், படத்தில் செந்தாமரையின் அண்ணனாக நடித்த நட்டி என்கிற நடராஜ், ஜெயந்தி கண்ணப்பன், மூத்த நடிகை சுந்தரிபாய் சார்பாக அவருடைய புதல்வி லலிதா சபாபதி, தங்கவேலு - சரோஜா தம்பதியினரின் மகள் சுமதி என ரஷ்யக் கலாச்சார மையம் நிரம்பி வழிந்தது.

காதலிக்கக் கற்றுக்கொடுத்த படம்

என்.டி.ஃபேன்ஸ் சங்கத்தின் தலைவர் ஒய்.ஜி.மகேந்திரா பேசும்போது “ கலாட்டா கல்யாணம் படத்துக்கு என் வாழ்க்கையில் முக்கியமான இடம் உண்டு. நான் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. இந்தப் படம் பார்த்தபிறகுதான் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன். காரணம் இது போன்ற படங்களின் பொன்விழா மற்றும் வைர விழாக்களைக் கொண்டாடி அதில் பங்குபெற்ற கலைஞர்களையெல்லாம் அவர்களது வாரிசுகளையும் பாராட்டி கவுரவிக்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைப்பதில் பெருமிதம் அடைகிறேன் ” என்றார்.

தொடர்ந்து பேசி மகேந்திரா, “படமாக வெளிவரும் முன், 30 நிமிட நாடகமாக நடிக்கப்பட்டுவந்த கதை இது. அதை நான் பார்த்திருக்கிறேன். அந்த 30 நிமிட ஸ்கிரிப்டை ஒரு முழு நீள படமாக ஆக்கிய கோபு – சிவிஆர் கூட்டணியின் திறமை இன்று காண்பது அபூர்வம். அப்படியொரு ஒத்திசைவு. தரமான நகைச்சுவைக்காக மட்டுமல்ல, கோபு - சி.வி.ஆர் இணையின் பெருமையை இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்தப் படம் சொல்லிக்கொண்டிருக்கும்” என்று பாராட்டி அமர்ந்தார்.

நண்பனே எனது உயிர் நண்பனே..

87 வயது முதுமையிலும் இளைஞரைப்போல எழுந்துவந்து அடுத்து மைக் பிடித்தார் கோபு. “இந்தப் படம் உருவாகக் காரணம் பாகிஸ்தான். 1965-ல் இந்திய - பாகிஸ்தான் போரின்போது எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் மத்தியில் தமிழ் திரைப்பட கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதற்கு சிவாஜி தலைமை வகித்தார். அதற்காக எழுதப்பட்ட 30 நிமிட நாடகம்தான் ‘கலாட்டா கல்யாணம்’ இதை இரண்டே நாட்களில் எழுதி முடித்தேன். யுத்த நிவாரண நிதி திரட்ட தமிழகத்தின் முக்கிய ஊர்களிலெல்லாம் நடிக்கப்பட்டது. அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த சிவாஜி இந்தக் கதையை சிவாஜி பிலிம்ஸ் ஆடிட்டர்கள் சம்பத் மற்றும் நாகபூஷணம் இருவரும் தயாரிக்க அதை சிவாஜியே வாங்கி வெளியிட்டார்.

படத்தின் இயக்குநராக முதலில் பி.மாதவன் பெயர் பரிசீலிக்கப்பட்டது. பிறகு சிவாஜிதான் ராஜியே (சிவிஆர்) இயக்கட்டும் என்று சொன்னார். சிவாஜி- ஜெயலலிதா என்று பெரிய கலைஞர்கள் இருந்தும் எந்தக் குழப்பமும் இல்லாமல் சி.வி.ஆர் படத்தை இயக்கினார்” என்று சிலாகித்தார் கோபு. அதன்பிறகு பல படங்களில் சி.வி.ஆருடன் தொடர்ந்த கூட்டணியை குறிப்பிட்டுபேசிய கோபு, “சி.வி.ஆர் ஒரு முறை, ‘கோபு, உன் ஸ்கிரிப்ட் ஸ்ரீதருக்கு ஊறுகாய் என்றால் என் படங்களுக்கு அதுதான் சோறு’ என்று குறிப்பிட்டதை மறக்கவே முடியாது. அவர் இல்லாத இந்த விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார்.

25chrcj_cvr photo சி.வி.ராஜேந்திரனுக்கு அஞ்சலி rightசிவாஜிக்குப் போட்டி சிவாஜிதான்

கோபுவைத் தொடர்ந்து குமாரி சச்சு, மதுவந்தி ஆகியோர் பேசிமுடிக்க என்.டி.ஃபேன்ஸ் அமைப்பின் பொருளாளர் முரளி ‘கலாட்டா கல்யாணம்’ வெளியான காலகட்டத்தை திரளாகக் கூடியிருந்த சிவாஜி ரசிகர்களுக்கு விளக்கினார்.1968 ஏப்ரலில் நடிகர் திலகத்தின் திருமால் பெருமை 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்ததையும் ‘கலாட்டா கல்யாணம்’ வெளியான முதல் தினம் (ஏப்ரல் 11) சிவாஜியின் மற்றொரு படமான ‘ஹரிச்சந்திரா’ வெளியானதையும் ‘கலாட்டா கல்யாணம்’ 50 நாட்களைக் கடக்கும்போது சிவாஜியின் ‘என் தம்பி’ வெளியானதையும் எடுத்துக்காட்டி “இந்தப் போட்டிகளுக்கும் நடுவில் ‘கலாட்டா கல்யாணம்’ 100 நாட்கள் ஓடியது பெரிய சாதனை” என்றார்.

ஹார்வர்டில் ஒரு பாடல்!

‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் இடம்பெற்ற ‘எங்கள் கல்யாணம்…’ பாடல் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் இசை மாணவர்களுக்கு ‘கலெக்டீவ் பிலிம் மியூசிக்’ பிரிவில் ஒரு பாடமாக இடம் பெற்றிருந்ததைப் பற்றிய ஆச்சரியமானத் தகவலை சங்கத்தின் செயலாளர் ராகவேந்திரன் பகிர்ந்து கொண்டதுடன் விழா நிறைவுபெற ‘கலாட்டா கல்யாணம் படத்தின் திரையிடல் தொடங்கியது. “அந்தப் படம் வெளியானபோது எத்தனைக் கொண்டாட்டமாக ரசித்தோமோ அதேபோன்ற உணர்வை இன்றும் பெற்றோம்” என்று திரையிடலின் முடிவில் முகம் மலர்ந்து கூறினார்கள் மூத்த ரசிகர்கள்.

“வீட்டிலேயே தயாரிப்பாளர் இருக்கும்போது, வெளிநிறுவனத்துக்குப் படம் இயக்கியது ஏன்?” - கிருத்திகா உதயநிதி விளக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x