Published : 28 May 2018 11:40 AM
Last Updated : 28 May 2018 11:40 AM

வழிகாட்டும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்

பல்வேறு மோசடிகள், வாராக்கடன்கள் மூலம் இந்திய வங்கிகள் திணறி வருகின்றன. இவற்றை சமாளிக்க அரசின் முதலீட்டு உதவி, ரிசர்வ் வங்கியின் பிசிஏ நடைமுறை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் எல்லா வங்கிகளிலும் பிரச்சினைகள் இருப்பதாக சொல்ல முடியாது. சமீபத்தில் வெளியான ப்ளூம்பெர்க் நிறுவன அறிக்கையொன்று இதனை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் மிக மோசமான வங்கிகள் இந்தியாவில் இருக்கும் அதே வேளையில் உலகின் மிக சிறப்பான வங்கிகளும் இந்தியாவில் இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எனவே சிக்கல் என்பது ஒட்டுமொத்த வங்கி அமைப்பு சார்ந்த சிக்கலாக இல்லாமல் ஒவ்வொரு தனித்த வங்கியினுடைய நிர்வாகம் சார்ந்த சிக்கலாகவே இருக்கிறது.

ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபொழுது அனுமதி அளித்த இந்திய ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மொத்த சந்தை மதிப்பு 200 கோடி டாலருக்கு அதிகமாக இருக்கும் வங்கிகளை மட்டும் இந்த ஆய்வுக்கு ப்ளூம்பெர்க் நிறுவனம் எடுத்துக்கொண்டுள்ளது. இந்திய ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் பங்கு மூலம் கிடைக்கும் வருவாய் 56 சதவீதமாக உள்ளது.

இது உலக அளவில் மிகவும் அதிகமாகும். மார்கன் ஸ்டான்லி நிறுவனம் சிறந்த ரேட்டிங்கை இந்த வங்கிக்கு அளித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த டெமாசெக் (temasek) ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் 5 சதவீதப் பங்குகளை இந்த மாதம் 14.7 கோடி டாலருக்கு வாங்கி இருக்கிறது. இந்த வங்கியின் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் 10 சதவீதத்துக்கு மேலாக உள்ளது. இதேபோன்று குறிப்பிடத்தக்க இன்னொரு வங்கியாக பந்தன் வங்கி உள்ளது. இதன் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் 3.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை இந்தியாவின் ஹெச்டிஎஃப்சி வங்கி, உலகின் மிகச் சிறப்பான வங்கிகளில் ஒன்றாக உள்ளது. கடந்த ஜனவரியில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த சந்தை மதிப்பு 7,300 கோடி டாலராக உள்ளது. இந்த இலக்கை அடையும் இந்தியாவின் மூன்றாவது நிறுவனமாக ஹெச்டிஎஃப்சி உள்ளது. ஹெச்டிஎஃப்சியின் மொத்த சந்தை மதிப்பு 2020-ம் ஆண்டு 10,000 கோடி டாலரை தொடும் என்கிறது கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம். இண்டஸ்இந்த் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி போன்றவற்றின் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளன.

ரூ.13,500 கோடி அளவுக்கான மோசடி காரணமாக பஞ்சாப் நேஷனல் வங்கி உலகின் மிக மோசமான வங்கிகள் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குறைந்தபட்ச வருவாய் காரணமாக பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கியும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஜப்பானின் சுருகா வங்கி, சீனாவின் ஜியாங்சு வங்கி போன்றவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற வங்கிகள்.

பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தவிர்த்த பிற தனியார் வங்கிகளும், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் நிலை மிக மோசமாக உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மோசமான நிலைமை காரணமாக இந்திய பொருளாதாரத்துக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் என்கிறது இந்த அறிக்கை. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 100 கோடி டாலர் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது.

15 சதவீதம் அளவுக்கு இந்த ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் சரிவை சந்தித்திருக்கின்றன. ஏறக்குறைய 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சந்தை மதிப்பை கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் வாராக் கடன் அளவும் 2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வாராக் கடன் அதிகரிப்பால் 22 பொதுத்துறை வங்கிகளில் 11 வங்கிகள் பிசிஏ நடைமுறைக்குள் ரிசர்வ் வங்கியால் கொண்டுவரப்படுள்ளன. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துவரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

கார்ப்பரேட் கடனை அதிக அளவில் அளிக்கும் பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து சிக்கலை சந்தித்துவரும் நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர கடன் அளிக்கும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் சிறப்பான லாபமீட்டி வருகின்றன. வாராக்கடன் எண்ணிக்கையில் கார்ப்பரேட் கடன்கள் முதலிடத்தில் இருக்கும் நிலையில் அரசியல், அதிகார குறுக்கீடுகளற்று சரியான நபர்களுக்கு மட்டும் இனிவரும் காலங்களில் பொதுத்துறை வங்கிகள் கார்ப்பரேட் கடன் அளிப்பதன் வழியாகத்தான் அவை இழந்த பெருமையை மீட்ட இயலும் என்பதை மறுப்பதற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x