Last Updated : 22 Apr, 2018 10:24 AM

 

Published : 22 Apr 2018 10:24 AM
Last Updated : 22 Apr 2018 10:24 AM

விவாதம்: பெண்களை ஒடுக்கும் கட்சி?

பொ

து வாழ்வில் முனைப்புடன் செயல்படும் பெண்கள் எதிர்மறை விமர்சனத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்படுவது தெரிந்தாலும், சமீபகாலமாக அது மோசமாக அதிகரித்துவருகிறது. அதுவும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் சிலர், பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் குறித்துத் தொடர்ச்சியாக அவதூறு செய்து கருத்துகளைப் பரப்பிவருகிறார்கள். தமிழக மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மகளிர் அணி தலைவியுமான கனிமொழி குறித்து பாஜகவின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான ஹெச். ராஜா சொல்லியிருக்கும் கருத்து, அருவருப்பின் உச்சம். பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளரின் கன்னத்தைத் தட்டிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலைப் பத்திரிகையாளர்கள் கண்டித்தனர். அதற்கு எதிர்வினையாற்றிய ‘துக்ளக்’ இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, “பத்திரிகையாளர்களுக்குப் போதிய பயிற்சியில்லை. அவர்கள் அளவுக்குத் தரம் இறங்கிப்போவதற்குப் பதில், அவர்களைச் சந்திக்காமல் இருப்பதே நல்லது” என்று சொல்லியிருக்கிறார். இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல் அரிய செயலைச் செய்திருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர். ஆளுநரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த பெண் நிருபரைத் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்து, ஊடகத் துறையில் பணியாற்றும் பெண்கள் அனைவரையும் நெறி தவறியவர்கள் என திருமலை என்பவர் எழுதிய பதிவைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எஸ்.வி. சேகர் பகிர்ந்திருந்தார். பிறகு தான் அதைச் சரியாகப் படிக்காமல் பகிர்ந்துவிட்டதாகச் சொன்னதுடன் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியிலும் அதன் சார்பு அமைப்புகளிலும் குறிப்பிடத்தகுந்த பொறுப்பில் இருக்கிறவர்களின் இத்தகைய செயல்பாடு, பெண்கள் குறித்த அந்தக் கட்சியின் மதிப்பீடு குறித்த கேள்விகளை மிக வலுவாக எழுப்புகிறது. அரசியல், ஊடகம் போன்ற சவால் நிறைந்த துறைகளில் அங்கம் வகிக்கும் பெண்களையே இவர்கள் இப்படித் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள் என்றால், மற்ற பெண்கள் குறித்த இவர்களின் மதிப்பீட்டை எப்படிப் புரிந்துகொள்வது? எல்லாத் துறைகளிலும் பெண்கள் எத்தனையோ நேரடி, மறைமுகத் தடைகளைத் தாண்டித்தான் நுழையவே முடிகிறது. நிலைமை இப்படியிருக்கும்போது இவர்களின் தரம் தாழ்ந்த, அருவருப்பான செயல்பாட்டைப் பொதுவெளியில் இயங்கிவரும் பெண்களுக்கு எதிரான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்க முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x