Last Updated : 09 Apr, 2018 11:18 AM

 

Published : 09 Apr 2018 11:18 AM
Last Updated : 09 Apr 2018 11:18 AM

வெளிநாடுகளில் முதலீடு செய்யலாமா?

ங்களுடைய மொத்த முதலீடுகளும் உள்நாட்டில் இருக்கிறதா அல்லது வெளிநாடுகளிலும் முதலீடு செய்திருக்கிறீர்களா? இந்த கட்டுரையில் உள்நாட்டில் மட்டும் முதலீடுகளை வைத்துக்கொள்ளலாமா அல்லது வெளிநாடுகளிலும் முதலீடுகளை மேற்கொள்ளலாமா என்பது குறித்து விவாதிக்கப்போகிறோம்.

உள்நாடு vs வெளிநாடு

உங்களது மொத்த முதலீடும் உள்நாட்டில் இருக்கும் பட்சத்தில் அதனை நேட்டிவ் போர்ட்போலியோ என்று சொல்லுவார்கள். உங்களது மொத்த முதலீடும் வெளிநாட்டில் இருந்தால் அதனை ஏலியன் போர்ட்ஃபோலியோ என்று சொல்லுவார்கள். நீங்கள் இந்தியாவில் இருந்துகொண்டு உங்களது மொத்த முதலீடும் இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் இருந்தால் அது நேட்டிவ் போர்ட்போலியோ. நீங்கள் இந்தியாவில் வசித்து உங்களது முதலீட்டை அமெரிக்க சந்தையில் வைத்திருக்கும் பட்சத்தில் அது ஏலியன் போர்ட்ஃபோலியோ.

உங்கள் வாழ்க்கைத் தேவைக்கு ஏற்ப உங்களது முதலீட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எந்த நாட்டில் சென்று உங்கள் வாழ்க்கையின் ஓய்வு காலத்தை செலவு செய்யப்போகிறீர்கள், உங்கள் குழந்தைகளின் கல்வி இந்தியாவிலா அல்லது வெளிநாட்டிலா என்பதை பொறுத்துதான் எங்கு முதலீடு செய்வது என்பதை முடிவு செய்ய முடியும்.

உதாரணத்துக்கு நீங்கள் இப்போது அமெரிக்காவில் வேலை செய்கிறீர்கள். ஆனால் ஓய்வு காலத்தை இந்தியாவில் கழிக்க விரும்புகிறீகள் என்றால் உங்கள் முதலீடுகள் வெளிநாட்டில் (அதாவது இந்தியாவில்) இருக்க வேண்டும். அமெரிக்க டாலரில் சம்பாதித்து கொண்டு ஏன் இந்திய ரூபாயில் முதலீடு செய்ய வேண்டும்.?

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு காரணம் இருக்கிறது. இந்தியாவுக்கு வந்த பிறகு உங்களது தேவையானது இந்திய ரூபாய்தான். அதனால்தான் நீங்கள் பணியாற்றும் போது தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்து வரும் பட்சத்தில், உங்களது ஓய்வு காலத்துக்கு இந்தியாவில் செய்துள்ள முதலீடு பயன்படும்.

அதே சமயத்தில் நீங்கள் வேலையில் இருக்கும் சமயத்தில் அமெரிக்காவில் முதலீடு செய்துவிட்டு, அமெரிக்காவில் இருந்து மொத்தமாக கிளம்பும் போது, அமெரிக்க டாலர்களை விற்று ரூபாயாக்கலாம். ஆனால் இதில் கரன்ஸி ரிஸ்க் இருக்கிறது. நீங்கள் இந்தியாவுக்கு திரும்பும் சமயத்தில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்கா டாலர் சரியும் பட்சத்தில் உங்களுக்கு இழப்பு ஏற்படலாம்.

அதனால் அமெரிக்காவில் நீங்கள் பணிபுரியும் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் முதலீடு செய்யலாம். இதேபோல இந்தியாவில் பணிபுரிபவர்கள் இந்தியாவிலே ஓய்வு பெற விரும்பினால் இந்திய சந்தையில் முதலீடு செய்யலாம்.

அதாவது எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் எந்த கரன்ஸியில் உங்களின் எதிர்கால தேவை இருக்கிறதோ அந்த கரன்ஸியில் முதலீடு செய்யலாம். உங்கள் குழந்தையை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்ப திட்டமிட்டால் இப்போதே சம்பந்தப்பட்ட நாடுகளில் முதலீடு செய்ய தொடங்குங்கள்.

ஆனால் அதே சமயம் ஒரே தேவைக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய வேண்டாம். நீங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வது என்பது உங்களின் தேவைக்காக மட்டுமே தவிர உங்களின் போர்ட்ஃபோலியோவின் ரிஸ்க்கை குறைப்பதற்காக அல்ல. அதனால் தேவையை பொறுத்து முதலீடு செய்யுங்கள்.

போர்ட்ஃபோலியோ மாறுதல்

சமயங்களில் உங்களின் இலக்கில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் உங்களின் போர்ட்ஃபோலியோவையும் மாற்ற வேண்டி இருக்கும். உதாரணத்துக்கு உங்கள் குழந்தைகள் இந்தியாவில் படிப்பதற்காக நீங்கள் இந்தியாவில் முதலீடு செய்திருப்பீர்கள். ஆனால் கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் என்ன செய்வீர்கள்.

படிப்பின் ஒவ்வொரு ஆண்டு காலத்திலும் உங்களது இந்திய முதலீட்டை சம்பந்தப்பட்ட நாட்டின் முதலீடுகளில் மாற்றிக்கொள்ளவும். ஒரு வேளை போதுமான நிதி இல்லை என்னும் பட்சத்தில் உள்நாட்டு கரன்ஸியில் கடன் வாங்கவும். அதே சமயம் கூடுதலான தொகையை சேமிக்க முடிந்தால் வெளிநாட்டில் படிப்பைத் தொடங்கியவுடன் அந்த நாட்டில் (கரன்ஸியில்) முதலீட்டை தொடங்கவும்.

நீங்கள் உள்நாட்டில் முதலீடு செய்தாலும், வெளிநாட்டில் முதலீடு செய்தாலும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x