Last Updated : 24 Apr, 2018 10:26 AM

 

Published : 24 Apr 2018 10:26 AM
Last Updated : 24 Apr 2018 10:26 AM

அக்கினிக்குஞ்சு 02: தேச நலனுக்கு பிராந்திய மொழிக் கல்வி!

ந்தியாவின் பழம்பெரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றான, பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் 1916-ல் காந்தியடிகளால் திறந்துவைக்கப்பட்டது. ஆங்கிலேயப் பிரபுக்களும் அன்னி பெசன்ட் அம்மையார் உள்ளிட்ட அறிஞர்களும் இளைஞர்களும் கூடியிருந்த அந்தத் திறப்பு விழாவில் தன் மனதில் பட்டதை எல்லாம் தங்குதடையின்றிப் பேச காந்தி முடிவெடுத்தார். ஆங்கிலேயர் கோலோச்சிய காலத்திலேயே ஆங்கில மோகத்தைப் பகிரங்கமாக எதிர்த்து அனைவரையும் அதிரவைத்தது அன்று காந்தி ஆற்றிய உரை. அதன் சுருக்கம் இங்கே:

மனதைத் தொடவில்லையே!

உரைவீச்சுகளையும் சொற்பொழிவுகளையும் கேட்டுக் கேட்டு எனக்கே சலித்துப்போய்விட்டது. கிட்டத்தட்ட அனைத்தைப் பற்றியும் பேசியாகிவிட்டது. செவிக்கும் கண்களுக்கும் மட்டும் விருந்தளித்தால் போதாது. நம் மனதைத் தொடும், கைகளையும் பாதங்களையும் இயக்கும் விஷயம்தான் இன்றைய தேவை.

எளிமை என்ற இந்தியத் தன்மையைத் தக்கவைக்க நம்முடைய கைகளும் பாதங்களும் நம் இதயத்துடன் ஒத்திசைந்து செயல்பட வேண்டும் என்று இந்தத் திறப்பு விழாக் கூட்டத்திலும் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், அந்த வார்த்தைகள் வெற்று வார்த்தைகளாக உலாவுகின்றன.

ஏனென்றால், புனிதமான இந்த நகரத்தில் உள்ள பெருமைக்குரிய இந்தக் கல்லூரியில் என்னுடைய நாட்டு மக்களிடம் அந்நிய மொழியில் பேசும்படி இந்த மாலைப் பொழுதில் நான் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன். இது நமக்கு இழைக்கப்பட்டிருக்கும் மிக மோசமான அவமதிப்பு.

இரண்டு நாட்களாக இங்கு நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகள் எந்த அளவுக்கு உள்வாங்கப்பட்டன என்பதை ஆய்வுசெய்யும் பொறுப்பில் நான் அமர்த்தப்பட்டால் பெரும்பாலானவர்கள் சோதனையில் தோல்வி அடைவார்கள். ஏனென்றால், ஆங்கிலத்தில் பேசப்பட்ட எதுவுமே மக்களுடைய மனதைத் தொடவில்லையே!

தேசத்தை ஏன் ஊனமாகப் பார்க்கிறீர்கள்?

கடந்த டிசம்பர் மாதம் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நானும் கலந்துகொண்டேன். இங்கு இருப்பதைக் காட்டிலும் அங்கு மிகப் பெரிய மக்கள் திரள் கூடியிருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் அன்று இந்துஸ்தானி மொழியில் நிகழ்த்தப்பட்ட உரைகள் மட்டுமே மனதைத் தைத்தன. காங்கிரஸ்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்திதான் புரியும் என்றாலும் பம்பாய் பிரெசிடென்சியைச் சேர்ந்தவர்கள் இந்துஸ்தானி மொழி மக்களே. ஆகையால் அங்கு இந்துஸ்தானிதான் பேசப்பட்டது. அதுவே எடுபட்டது.

shutterstock_634533938 [Converted]_col

இந்தப் புரிதலோடு, பனாரஸ் பல்கலைக்கழகம் தன்னுடைய மாணவர்களுக்கு அவர்களுடைய பிராந்திய மொழிகளில் இனிக் கல்வி புகட்டும் என்று எதிர்பார்க்கிறேன். நம்முடைய மொழிகள்தாம் நம்மைப் பிரதிபலிக்க வல்லவை. அதி சிறந்த சிந்தனைகளை வெளிப்படுத்த நம்முடைய தாய்மொழிகளுக்குத் திராணி இல்லை என்று நினைப்பவர்கள் இல்லாமல் போய்விடுவதே நமக்கு நல்லது.

ஆங்கிலம்தான் இந்தியாவின் தேசிய மொழி அந்தஸ்துக்குத் தகுதி வாய்ந்தது என்று நம்புகிறவர் யாரேனும் இருக்கிறீர்களா? நம் தேசத்தை ஏன் இப்படி ஊனமாகப் பார்க்கிறீர்கள்? ஒன்றை மட்டும் யோசித்துப் பாருங்கள் ஆங்கிலத்தை சுவீகாரம் செய்துகொள்வதன் மூலம் ஆங்கில மக்களுக்கு இணையாக நம்மால் போட்டிபோட முடியுமா?

சுயசிந்தனை இல்லாதது ஏன்?

பூனாவைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிலருடன் நெருங்கி உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆங்கில வழியில் கல்வி கற்கும் இந்திய இளைஞர் ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்நாளில் விலைமதிப்பற்ற ஆறு வருடங்களைத் தொலைத்துவிடுவதாக அப்போது அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அப்படியானால் நம்முடைய பள்ளிகள், கல்லூரிகளில் ஆங்கில வழியில் படிக்கும் அத்தனை மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒட்டுமொத்த தேசமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளை வீணாகிவிட்டதே!

இந்தியர்களிடம் முனைப்போ சுயசிந்தனையோ இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆனால், வாழ்க்கையின் அதிமுக்கியமான ஆண்டுகளை அந்நிய மொழியைக் கற்றறிவதற்காகவே செலவிட்டால் நாம் எப்படிச் சுயமாகச் சிந்திக்க முடியும்? கடந்த 50 ஆண்டுகளாக நம்முடைய பிராந்திய மொழிகளில் கல்வி பெற்றிருந்தால் இன்று நம்மிடம் என்ன இருந்திருக்கும்? சுதந்திரம் அடைந்த இந்தியா இருந்திருக்கும், படித்த மனிதர்கள் இருந்திருப்பார்கள், சொந்த மண்ணிலேயே அந்நியர்கள் போலப் பேசாமல் தேசத்தின் மனதோடு அவர்கள் உரையாடிக்கொண்டிருந்திருப்பார்கள். ஏழை எளிய மக்களோடு மக்களாகப் பணியாற்றிக்கொண்டிருந்திருப்பார்கள். அவ்வாறு கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் பெற்ற அனைத்தும் இந்நாட்டின் பாரம்பரியமாக மாறியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x