Published : 19 Aug 2014 10:00 AM
Last Updated : 19 Aug 2014 10:00 AM

கூன் முதுகை மேம்படுத்த உதவும் மருந்துகள்

ஹெச்.எல்.ஏ. பி27-ல் பாசிட்டிவ் ருமாட்டிசம் என்ற நோயால் நான் அவதிப்பட்டு வருகிறேன். எனது ரத்த இ.எஸ்.ஆர். அளவு 80க்கு மேல் இருக்கிறது. என் உடல் முழுவதும் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி உள்ளது. இந்த வலிகளில் இருந்து விடுபடுவது எப்படி?

- சரவணன், மின்னஞ்சல்

ஆண்களுக்குப் பொதுவாக ஏற்படும் தண்டுவடக் கூன் வாதத்துக்கு Ankylosing spondylitis என்று பெயர். Ankylosing என்றால் இணைதல் அல்லது ஒட்டுதல் என்று பொருள். spondylitis என்றால் தண்டுவட எலும்பு அழற்சி என்று பொருள். இந்த நிலையில் தண்டுவடமானது அசையும் தன்மை குறைந்து, இறுகிவிடும். அவர்களால் தண்டுவட எலும்புகளைச் சரியாக அசைக்க முடியாது. முன்னோக்கி வளைந்து கூன் போட்டது போலக் காணப்படுவார்கள். மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருக்கும். பெண்களைக் காட்டிலும் ஆண்களையே இது அதிகம் பாதிக்கிறது.

சிலருக்கு இளம் வயதிலேயே இது வரும். முதுகு வலியோடு வரும் இந்த நோயாளிகளுக்கு, disc disease இருப்பதாகப் பல மருத்துவர்கள் தவறாகக் கருதிவிடுவது உண்டு.

இந்த மாதிரி நோயாளிகளிடம் தலையில் பொடுகு உள்ளதா, கண் சிவக்கிறதா, மாலை வேளைகளில் காய்ச்சல் உள்ளதா, வாய்ப்புண் உள்ளதா, சிறுநீர் போகும்போது எரிச்சல் உள்ளதா, குதிகால் வலி உள்ளதா, காய்ச்சல் வந்த பிறகு இந்த நோய் குறியீடுகள் தொடங்கினவா என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டும். குறிப்பாக sacroiliac joint என்று சொல்லக்கூடிய முதுகின் கீழ்ப்பகுதியில் இருக்கும் எலும்புகளில் வலி உள்ளதா என்பதைக் கேட்க வேண்டும்.

HLAB27 என்கின்ற பரிசோதனையை இதற்குப் பார்ப்பார்கள், இது மரபணு சார்ந்தது. இந்த HLAB27 மரபணு உள்ளவர்கள் இந்த Ankylosing spondylitis தண்டுவட எலும்பு கூன்வாதம் வருவதற்கு அதிக வாய்ப்பைக் கொண்டவர்கள். இந்த நோய் முற்றும் நிலையில் புதிய எலும்புத் தோற்றங்கள் உருவாகும். xray எடுத்துப் பார்க்கும்போது மூங்கில் குருத்து போல் காட்சியளிக்கும். இதை bamboo spine என்று சொல்வார்கள். இந்த நோயில் கண்ணில் திடீரென்று வலி வரலாம். வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் போகலாம். கண் மங்கலாம். இந்த நோய்களுக்கு நீச்சல் மிகச் சிறந்த பயிற்சி, மூச்சுப் பயிற்சிகளும் சிறந்தவை. ஆயுர்வேதத்தில் வாத ரக்த நோயின் ஒரு பிரிவாகக் கருதப்பட்டுச் சிகிச்சை தரப்படுகிறது.

வாத ரக்த நோயாளிகளுக்கு மூலிகைகளால் காய்ச்சப்பட்ட நெய்யைக் கொடுத்து வியர்வை சிகிச்சை செய்து, பேதிக்கு மருந்து கொடுத்து, எனிமா கொடுத்து, அதற்குப் பின் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். சீந்தில், சிற்றரத்தை, சேராங்கொட்டை, மஞ்சிஷ்டா போன்ற மருந்துகள் இதற்கு நல்ல பலன் அளிக்கும்.

இதற்குப் பிறகு சியவன பிராசம் எனப்படும் நெல்லிக்காய் லேகியத்தைச் சாப்பிடலாம். வெளியே வலி குறைய அதிமதுர எண்ணெய், பிண்டத் தைலம் போன்றவை பலன் அளிக்கும். சீந்தில் கொடி (Tinospora Cordifolia) முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிறது. ஆமணக்கு விதை, சதகுப்பை, எள்ளு, கொள்ளு போன்றவற்றைப் புளி நீரில் காய்ச்சிப் பற்று போட்டால், உடனே வலி குறையும். மூச்சுப் பயிற்சியும், நீச்சல் பயிற்சியும் இதற்கு மிகவும் முக்கியமானவை.

என் வயது 30. சிறிய விபத்து காரணமாகக் காலில் சிறிய காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக டாக்டரிடம் ஆலோசித்தபோது, என் உடலில் நீர் அதிகம் இருப்பதாகக் கூறினார். உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும். இதற்கு ஆலோசனை சொல்ல முடியுமா?

- சேது சங்கர், மின்னஞ்சல்

காலில் நீர் வருவதை pedal edema என்று சொல்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தி பேச முடியாது.

இதய நோய் காரணமா அல்லது சிறுநீரக நோய் காரணமா அல்லது கல்லீரல் நோய் காரணமா அல்லது மருந்துகளின் விளைவா என்பதை நாம் ஆராய வேண்டும். Congestive Heart Failure எனும் இதய நோயில் இதயத்தின் ரத்தத்தைப் பம்ப் பண்ணும் சக்தி குறைந்து காலில் நீர் வரும். உடலில் albumin எனும் புரதம் குறையும்போது நீர் வரும். ஒவ்வாமை ஏற்பட்டாலும் நீர் வரும். சில நேரங்களில் உடல் முழுவதும் நீர் வரலாம். கல்லீரல் நோய்களாகிய கல்லீரல் செயல்பாடு இழப்பு cirrhosis-லும் நீர் வரும். சிறுநீரக நோய்களாகிய nephrotic syndrome-லும் நீர் வரும். இதைத் தவிர மூளை நோய்கள், சில மருந்துகள் இவற்றினாலும் நீர் வரலாம்.

ஆயுர்வேதத்தில் வீக்கத்தைச் சோபம் என்று குறிப்பிடுகிறார்கள். இது கபத் தன்மையால் ஆனது. இதற்குக் கபத்தைக் குறைக்கிற மருந்துகளைக் கொடுக்க வேண்டும். இந்த மாதிரி நோய்களுக்குக் காரணத்தை அறிந்து, பிரித்துச் சிகிச்சை செய்தாலும் பொதுவாகத் தசமூலம் (10 மூலிகைகளின் வேர்கள்) இதற்குச் சிறந்தது.

புனர்னவாவும் (சாரணை வேர்) நல்லது. இதை 20 கிராம் எடுத்துக் கஷாயம் செய்து இரண்டு வேளை 60 மி.லி. குடிக்கலாம். நெருஞ்சி முள் கஷாயம் செய்து குடிக்க, நீர் நன்றாகப் பிரிந்து வரும். அசுத்த ரத்தக் குழாய்களில் ரத்தஓட்டம் குறையும்போது காலைத் தூக்கி வைத்துக் கொண்டு (crepe bandage) பட்டை துணி அணிய வேண்டும். கொசுக்கடி போன்றவற்றினால் நீர் வரும்போது சிற்றரத்தை, எள், மஞ்சள் ஆகியவற்றை அரைத்துப் பற்று (பூச்சு) போட வேண்டும்.

ரத்தசோகை இருந்தால் அங்கு இரும்புச் சத்துள்ள அயக் காந்தச் செந்தூரம், மண்டூர வடகம் போன்ற மாத்திரைகளைக் கொடுக்க வேண்டும். முதலில் உடலின் உப்பின் அளவை குறைக்க வேண்டும். மருந்து மாற்றத்தின் காரணமாக உடலில் நீர் வருமானால், மருத்துவரிடம் சொல்லி அதற்கான மருந்தைச் சாப்பிட வேண்டும்.

ஆயுர்வேதத்தில் சோபம் அல்லது சோதம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பழைய காலத்தில் இதை வாதம், பித்தம், கபம் ஆகிய பிரிவின் கீழ் பிரித்தார்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும், நீண்ட பயணம் செய்பவர்களுக்கும்கூடக் காலில் நீர் வரலாம்.

காலில் மட்டும் நீர் வந்து சிவந்து போய்க் காய்ச்சல் வந்தால், அதற்கு cellulitis என்று பெயர். காலில் மூட்டுக்கு மேலே அழுத்திப் பார்க்கும்போது மெதுவாக எழும்பி வருவதாக இருந்தால், அதனைக் கப வகையைச் சார்ந்தது என்று கூறலாம். பூச்சி கடி போன்றவற்றுக்கெல்லாம் சிறுசிறு வீக்கங்கள் வரும், அங்கு வில்வாதி (வில்வம் சேர்ந்த மருந்து) குளிகையை உரைத்துப் போட்டால் போதும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x