Published : 15 Apr 2018 12:48 PM
Last Updated : 15 Apr 2018 12:48 PM

தலைவாழை: விடுமுறை காலக் கொண்டாட்டம்

பள்ளித் தேர்வுகள் முடிந்து வீட்டில் சுற்றித் திரியும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட ஏதாவது ஒன்றைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். புதுமையாகவும் சுவையாகவும் சமைத்துத் தரச் சொல்லி அடம்பிடிப்பார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் புதுமையான சில உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத் தருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த சுஜாதா.

 

சோள மிக்ஸர்

என்னென்ன தேவை?

வேகவைத்த இனிப்புச் சோளம் - 1 கப்

மைதா - 2 கப்

சோள மாவு, அரிசி மாவு

- தலா 2 டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

சாட் மசாலா - 1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்

பொடியாக நறுக்கிய குடைமிளகாய்

- 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

வேகவைத்த சோளம், மைதா, சோள மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது. இதை 15 நிமிடம் ஃபிரிட்ஜில் வையுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, சோளக் கலவையைப் போட்டுப் பொரியவிடுங்கள். வாணலியை ஒரு மூடியால் மூடிவைத்தால் சோளம் பொரிந்து நம் மேல் படாது. சோளம் நன்றாகப் பொரிந்ததும் எடுங்கள். அதன் மீது சாட் மசாலா, பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றைத் தூவிப் பரிமாறுங்கள்.

பனீர் வறுவல்

pooriiiJPG100 

என்னென்ன தேவை?

பனீர் - 1 பாக்கெட்

கார்ன் ஃபிளேக்ஸ் - 1 கப்

கடலை மாவு - அரை கப்

சோள மாவு - கால் கப்

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது

- 1 டேபிள் ஸ்பூன்

கொரகொரப்பாக அரைத்த காய்ந்த மிளகாய் - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பனீர் துண்டுகளை விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு உப்பு, எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை 15 நிமிடங்கள் ஊறவிடுங்கள். மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது, உப்பு, மீதமுள்ள மிளகாய்த் தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றித் தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள். கார்ன் ஃபிளேக்ஸ், கொரகொரப்பாக அரைத்த காய்ந்த மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை ஒரு தட்டில் பரப்பிக்கொள்ளுங்கள்.

பனீர் துண்டுகளைக் கரைத்துவைத்துள்ள மாவில் முக்கியெடுங்கள். பின்னர் அவற்றைத் தட்டில் வைத்துள்ள பொடியில் நன்றாகப் புரட்டியெடுங்கள். அவற்றை அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள். தக்காளி கெட்சப்புடன் சேர்த்துப் பரிமாறுங்கள்.

பூரி பீட்சா

pooriJPG100 

என்னென்ன தேவை?

பானி பூரிக்குப்

பயன்படுத்தப்படும் பூரி - 20

வேகவைத்து மசித்த

உருளைக்கிழங்கு - 2

வேகவைத்த சோளம் - கால் கப்

பொடியாக நறுக்கிய

குடைமிளகாய் - 3 டேபிள் ஸ்பூன்

ஓமப்பொடி - கால் கப்

மொஸரல்லா சீஸ் (துருவியது) - கால் கப்

ஆரஞ்சு அல்லது

இத்தாலியன் சீசனிங் - 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி - 2

பூண்டு - 4 பல்

நறுக்கிய பச்சை மிளகாய்

- 2 டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

சர்க்கரை - அரை டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

எப்படிச் செய்வது?

தக்காளியை அடுப்பில் வைத்துச் சுட்டெடுங்கள். அவற்றைத் தோலுரிக்காமல் நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, கொரகொரப்பாக அரைத்த சிவப்பு மிளகாய் ஒரு டீஸ்பூன், உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள், நறுக்கிய தக்காளி, தக்காளி சாஸ் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கினால் இத்தாலியன் சாஸ் தயார்.

வேகவைத்த உருளைக்கிழங்கு, சோளம், குடைமிளகாய், இத்தாலியன் சாஸ், சீஸ் ஆகியவற்றைப் பூரிகளின் உள்ளே நிரப்பி அவற்றின் மேல் ஓமப்பொடியைத் தூவுங்கள். இவற்றை ‘மைக்ரோவேவ் அவன்’ தட்டில் வைத்து அலுமினியம் ஃபாயில் போட்டு மூடுங்கள். பிறகு அவனில் 160 டிகிரி வெப்பநிலையில் ஆறு நிமிடங்கள் வைத்து எடுத்தால் பூரி பீட்சா தயார்.

கேக் லாலிபாப்

choicJPG100 

என்னென்ன தேவை?

மிருதுவான சாக்லெட் கப் கேக் - 6

நியூடெல்லா - ஒரு பாட்டில்

சாக்கோ சிப்ஸ் - கால் கப்

லாலிபாப் குச்சிகள், கேக் மீது தூவப்படும்

ஸ்பிரிங்கல்ஸ் - தேவைக்கு

மில்க் சாக்லெட் - 4

எப்படிச் செய்வது?

சாக்லெட் கேக்குளை நன்றாகப் பொடித்து ஒரு தட்டில் பரப்பிக்கொள்ளுங்கள். அதனுடன் நியூடெல்லா கிரீம், சாக்லெட் சிப்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து மாவு பதத்துக்கு நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். இந்த சாக்லெட் கலவையை உள்ளங்கையில் வைத்து எலுமிச்சைப் பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள் (விருப்பமான வடிவிலும் வெட்டியெடுத்துக்கொள்ளலாம்). இந்த உருண்டைகளை 15 நிமிடம் ஃபிரீசரில் வையுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதனுள் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தை வைத்து அதில் மில்க் சாக்லெட்டைப் போடுங்கள். சாக்லெட் கலவை நன்றாக உருகியதும் அடுப்பை நிறுத்திவிடுங்கள். இப்போது ஃபிரிட்ஜிலிருந்து எடுத்த சாக்லெட் உருண்டைகளைக் குச்சிகளில் செருகி, உருகிய சாக்லெட்டில் அவற்றை நன்றாக முக்கியெடுங்கள். அவற்றை ஒரு தெர்மாகோல் அட்டையில் செருகி, மேலே ஸ்பிரிங்கில்ஸ் தூவி ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைத்துப் பிறகு சாப்பிடலாம்.

சாக்லெட் சாண்ட்விச்

choccJPG100 

என்னென்ன தேவை?

கோதுமை பிஸ்கட் - 12

குல்கந்து - 1 கப்

மில்க் சாக்லெட் பார் - 6

எப்படிச் செய்வது?

வீட்டிலேயே குல்கந்து செய்யலாம். பேரீச்சை, ஏலக்காய், தேன், ரோஸ் எசென்ஸ் ஆகியவற்றைத் தேவையான அளவு எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இரண்டு கோதுமை பிஸ்கெட்டுகளுக்கு நடுவில் உருக்கிய சாக்லெட் கலவையைத் தடவிக்கொள்ளுங்கள். மற்றொரு பிஸ்கெட்டை எடுத்து அதன் ஒரு புறம் குல்கந்து கலவையைத் தடவி, அதை சாக்லெட் தடவிய பிஸ்கெட் மீது ஒட்டுங்கள். இவற்றை சாக்லெட் கலவையினுள் நன்றாக முக்கியெடுங்கள். பிஸ்கெட் முழுவதும் சாக்லெட் பரவியிருக்க வேண்டும். இந்த பிஸ்கெட்டுகளை அலுமினிய காகிதத்தில் சுற்றி ஃபிரீசரில் ஒரு மணி நேரம் வைத்துப் பிறகு பரிமாறலாம். ஐஸ்கிரீமுக்குப் பதிலாக இந்த சாக்லெட் பிஸ்கெட்டுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x