Published : 16 Apr 2018 10:37 AM
Last Updated : 16 Apr 2018 10:37 AM

சூழலை பாதிக்கும் பழைய வாகனங்கள்!

``யா

னை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’’, என்றொரு பழமொழி உண்டு. இதற்கு நேர்மாறாக வாகனங்கள் சாலைகளில் ஓடினாலும் சூழலை பாதிக்கும், அப்படியே நிறுத்தி வைத்திருந்தாலும் அவையும் சூழல் கேட்டுக்குக் காரணமாகிவிடும்.

இந்தியாவில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் குவியல் குவியலாக பல வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருக்கும். புழுதி படிந்து, துருப்பிடித்து இனி எதற்குமே லாயக்கற்ற நிலையிலிருந்தாலும் கூட அவை அப்படியேதான் இருக்கும்.

இதைப்போல சில வாகன உரிமையாளர்கள் புதிய வாகனங்களை வாங்கி பயன்படுத்தும்போது, பழைய வாகனங்களை தெருவோரம் நிறுத்தி அதை பலகாலம் எடுக்காமல் இருக்கும் சூழலும் நிலவுகிறது. இதேபோல கார் பழுது பார்ப்பு மையங்களை ஒட்டி பல வாகனங்கள் நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கும் நிலையும் ஆங்காங்கே கண்கூடாகப் பார்க்கலாம்.

இத்தகைய வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு எப்படி அச்சுறுத்தலாக இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம். முதலில் இந்த வாகனங்கள் பெரும்பாலானவற்றில் பேட்டரிகள் அப்படியே இருக்கின்றன. இவற்றின் டயர், டியூபுகளும் உள்ளன. பேட்டரியில் ஆசிட் கசிவு, டயர் காற்று இறங்கி மண்ணில் புதைவதால் மண் வளம் பாதிக்கப்படுவதோடு, நீர்வளமும் கெடுகிறது.

வாகனங்களின் பெயிண்ட் கரைவது, துருப்பிடிப்பது இவை அனைத்தும் மண்ணில் சேர்வதால் மண் வளம் சீர்கெடுகிறது.

இதுபோன்ற கைவிடப்பட்ட வாகனங்கள் மண்ணின் வளத்தையும், நீராதாரத்தையும் வெகுவாக பாதிப்பதாக புணே பல்கலை துணை வேந்தர் நிதின் கர்மால்கர் சுட்டிக் காட்டியுள்ளார். இத்தகைய வாகனங்கள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிமை கோராத வாகனங்களை மறு சுழற்சி செய்வதற்குரிய தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக செயல்படுத்தப்படாமல் இருக்கிறது.

வாகன புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் பயன்பாட்டில் இல்லாத வாகனங்களைப் பற்றி எவரும் கண்டுகொள்வதில்லை. நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே சூழல் கேட்டுக்கு காரணமாக திகழ்கின்றன. வாகனங்களின் ஆயுள் காலத்துக்குப் பிறகு அவற்றை முறைப்படி அழிக்கும் தொழில்நுட்பம் உரிய வகையில் செயல்படுத்தப்படவில்லை. இதுபோன்ற வாகனங்களை சேகரிப்பது, அவற்றின் பாகங்களைப் பிரித்து உரிய வகையில் அழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் இவற்றால் ஏற்படும் சூழல் பாதிப்பு குறையும் என்று சுற்றுச் சூழல் ஆராய்ச்சி கல்வி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் மங்கேஷ் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

இது போன்ற வாகனங்களை உரிய வகையில் அழிப்பதன் மூலம் 15 லட்சம் டன் இரும்பு, 1.80 லட்சம் டன் அலுமினியம், மீட்டெடுக்கக் கூடிய வகையிலான பிளாஸ்டிக் 75 ஆயிரம் டன் ஆகியன கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைவிடப்பட்ட வாகனங்களின் டயர்களை ரீடிரெட் செய்ய முடியும். ஆனால் அவை உரிய வகையில் மீட்டெடுக்கப்படாததால் அவை மண்ணில் புதைந்து மண் வளத்தை பாழாக்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.

உபயோகத்தில் இல்லாத டயர்களில் 60 சதவீதம் தீயிட்டு அழிக்கப்படுகின்றன. இது சுற்றுச் சூழலை வெகுவாக பாதிப்பதாக சமீபத்தில் சிந்தன் எனும் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாகன புகையைக் கட்டுப்படுத்த பாரத் - 6 என்ற சூழல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர 2030-க்குள் பேட்டரி வாகனங்களை பெருமளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்து வருகிறது. அதற்கு முன்பாக இதுபோன்ற கைவிடப்பட்ட வாகனங்களை உரிய வகையில் அழித்தாலே பெருமளவு மண்வளமும், நீராதாரமும் காக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x