Published : 30 Apr 2018 11:38 AM
Last Updated : 30 Apr 2018 11:38 AM

சந்தையைக் கைப்பற்றுமா ஃபோர்டு பிரீஸ்டைல்

ட்டோமொபைல் கண்காட்சிக்குப் பிறகு பெரிய அளவில் வாகன அறிமுகங்கள் நடக்கவில்லை. முதல் போனியாக ஃபோர்டு பிரீஸ்டைல் வாகனத்தின் அறிமுக விழா கடந்த வாரம் சென்னையில் நடந்தது. சென்னை மட்டுமல்லாமல் ஒரே நாளில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

பெட்ரோல் மாடலின் ஆரம்பகட்ட விலை (விற்பனையக விலை) ரூ.5.09 லட்சமாகவும், உச்ச பட்ச மாடல் விலை 6.94 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல டீசல் காரின் ஆரம்பகட்ட மாடல் விலை ரூ.6.09 லட்சமாகவும் உச்சபட்ச விலை ரூ.7.89 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

யுட்டிலிட்டி வாகனங்கள் பிரிவு தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. ஏற்கெனவே இகோஸ்போர்ட், எண்டேவர் ஆகிய மாடல்கள் இருந்தாலும் இந்த பிரிவில் சந்தையை கைப்பற்றுவதற்காக பிரீஸ்டைல் மாடலை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

2013-ம் ஆண்டு காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் போர்ட் இகோஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது மொத்த கார்களின் விற்பனையில் இந்த பிரிவு 3 சதவீதம் அளவுக்குதான் இருந்தது. ஆனால் தற்போது இந்த பிரிவுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. தற்போது மொத்த கார்களில் காம்பேட்க் எஸ்யுவி பிரிவு 12 சதவீதமாக இருக்கிறது. வரும் 2022-ம் ஆண்டு இந்த பிரிவு 24 சதவீதம் அளவுக்கு உயரும் என ஃபோர்டு இந்தியா தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுராக் மெஹ்ரோத்ரா தெரிவித்திருக்கிறார். கார் வாங்க இருக்கும் நான்கில் ஒருவர் இந்த பிரிவில் வாங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பல பாதுகாப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்ஸ் (ஏபிஎஸ்), எலெக்ட்ரானிக் பிரேக் போர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் ஆகிய வசதிகள் உள்ளன. மேலும் ஆறு ஏர் பேக்களும் உள்ளன. மழை பெய்யத் தொடங்கியதும் சென்சார் உதவியுடன் தானியங்கி முறையில் இயங்கும் வைப்பர் வசதி உள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த கார் வடிவமைக்கப்பட்டது.

இந்த பிரிவில் உள்ள வாகனங்களின் விலை ரூ.7.8 லட்சம் முதல் 9.9 லட்சம் வரையில் இருக்கிறது. ஆனால் பிரீஸ்டைல் ஆரம்ப விலை 5.09 லட்சமாக இருப்பதால் அடுத்தகட்ட வாகனங்களை விரும்புபவர்களின் தேர்வாக பிரீஸ்டைல் இருக்கும் என அனுராக் தெரிவித்தார். மக்களின் தேர்வு என்ன என்பது இன்னும் சில காலங்களுக்குப் பிறகே தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x